செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலை கடந்து சிந்திக்கக்கூடியவர்: காந்தியின் பேரன் கோபால கிருஷ்ணகாந்தி புகழாரம்

சென்னை, பிப். 27–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலைக் கடந்தும் சிந்திக்கக் கூடியவர் என்று காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் மார்ச் 1 ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் “மார்ச் 1-ல் சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில், திராவிட நாயகனின் 70-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். இவ்விழாவில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பார்கள்” என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முதலமைச்சர்கள் மற்றும் நாளேடுகள் உள்ளிட்ட முக்கிய பத்திரிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி செய்தி வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் பிரபல ‘டெலகிராப்’ என்ற ஆங்கில நாளிதழில், மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தியுமான கோபால கிருஷ்ண காந்தி வாழ்த்து தெரிவித்து சிறப்புக் கட்டுரை தீட்டியுள்ளார்.

அவர் எழுதிய சிறப்பு கட்டுரையில், “மார்ச் 1 முன்னாள் முதலமைச்சர் ஒருவருக்கும் பதவியில் இருக்கும் முதலமைச்சர் ஒருவருக்கும் பிறந்தநாள். கடந்த 2000 முதல் 2011 வரை மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, மார்ச் 1, 1944 இல் பிறந்தவர். தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், மார்ச் 1, 1953 இல் பிறந்தார். புத்ததேவுக்கு மார்ச் 1 அன்று 79 வயதாகிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 70 வயதாகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை பொதுநிகழ்ச்சியாக நடந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை வழங்குகிறார்கள். அவர்களின் அரசியல் வட்டாரத்தில் இல்லாதவர்களும் அவர்களைப் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். இதில் இருவருமே சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்கள். இருவருமே முதலமைச்சராகவும், கட்சின் மூத்த நிர்வாகிகளாகவும் இருந்தவர்கள்.

உயர்ந்த சிந்தனை உள்ளவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு மறைந்த பிறகு தலைவராக உருவெடுத்தவர் புத்ததேவ். அதேபோல் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தலைவராக உருவெடுத்தவர் மு.க.ஸ்டாலின். இவர்கள் இருவர்களுக்குமே அரசியலில் ஆதரவளிப்போர்களை தாண்டியும், பெரிய ரசிகர் அல்லது ஆதரவு பட்டாளத்தை பெற்றவர்கள். இருவரிடமும் கவர்ச்சி, அமைதி, மற்றும் எடுத்துச் செல்லும் மொழி திறன் ஆகியவை உள்ளன.

ஜவஹர்லால் நேருவைப் பற்றி தமிழில் ஒரு சித்திரப் புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதை தொகுத்த கோபண்ணா காங்கிரஸ்காரர். சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த ஒரு காங்கிரஸ் கட்சிக்காரரும் பெருமைப்படக்கூடிய, எந்த வடநாட்டு தேசியவாதியும் பெருமைப்படக்கூடிய வகையில் ஒரு உரையை நிகழ்த்தினார். சுதந்திரப் போராட்டத்திலும், அரசியல் நிர்ணய சபையிலும், தேசிய அரசியலிலும் நமது முதல் பிரதமர் நேருவின் பங்கு பற்றிப் பேசிய மு.க.ஸ்டாலின், வடக்கையும், தெற்கையும், மத்தியையும், மாநிலத்தையும் தடையின்றி ஒன்றிணைத்தார்.

மு.க.ஸ்டாலினும் புத்ததேபாபுவும் கட்சி அரசியலை விட அதிகம் சிந்திக்கிறார்கள். அரசியல் முன்னணியில் இதுவரை இருந்தவர்களிடம் இல்லாத எடையும், உயரமும் அவர்களிடம் உள்ளது. அதனால்தான் மார்ச் 1 எங்களை போன்றோரால் கொண்டாப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *