சென்னை, ஜூலை 19–
அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்து பேசினார்.
செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீடு உள்பட 7 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். விடிய விடிய நடந்த விசாரணைக்கு பிறகு, அதிகாலையில் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை பெங்களூருவில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். துணிச்சலுடன், சட்டரீதியாக விசாரணையை எதிர்கொள்ளுமாறு முதல்வர் அறிவுரை வழங்கியிருந்தார்.
நேற்று மாலை விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு பொன்முடி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி மீண்டும் நேற்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.
பொன்முடியிடம்
100 கேள்விகள்…
செம்மண் குவாரி மூலம் சட்ட விரோதமாக பணம் ஈட்டியது, அந்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தது ஆகியவற்றை பற்றி கேள்விகளை எழுப்பி பதில் பெற்றதாகத் தெரிகிறது. இருவரிடமும் தலா 100 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டதாக தெரிகிறது. இரவு 10 மணி அளவில் விசாரணையை முடித்து அவர்களை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
பின்னர் அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ், குற்றச்செயலில் நேரடியாக தொடர்புடையரூ.41.90 கோடி நிரந்தர வைப்புத்தொகை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் இன்று காலை அமைச்சர் பொன்முடி சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக விளக்கம் அளித்ததாக தெரிகிறது. மேலும் சட்ட ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.