புதுடெல்லி, மார்.1–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-–வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில்
பிரதமர் வாழ்த்து
மு.க.ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு, தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு, முதலமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கவர்னர்
மு.க.ஸ்டாலினை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். முதலமைச்சரும், அவருக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தில், 70வது பிறந்தநாள் காணும் தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.