முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை, ஏப்.30-
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் 23 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 40 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 6 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பெரியார் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 40 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 3 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 12-வது தெருவில் அமைந்துள்ள சென்னை தொடக்கப் பள்ளியின் 2-வது தளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் பலகை, மேஜைகள், நாற்காலிகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒரு வகுப்பறை, மூன்று வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாலை நேர சிறப்பு வகுப்பு மையமான “முதல்வர் கல்விச் சோலை”-யை முதலமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார். மேலும், முதல்வர் கல்விச் சோலை மையத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த 189 பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, மாவு அரவை யந்திரங்கள், சலவைப் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, தா.மோ.அன்பரசன், மா. சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கோவி. செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெல்வோம் என்று…?
பதில்:- அதைவிட அதிகமான தொகுதிகளில் வெல்வோம்.
கேள்வி:- தி.மு.க. அமைச்சர்கள் மக்களின் வரிப்பணத்தை சூறையாடுகிறார்கள் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டி உள்ளாரே?
பதில்:- அவருக்கு வேறு வேலை கிடையாது. அதனால் இப்படி சொல்லி கொண்டிருக்கிறார்.
கேள்வி:- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இதன் மூலம் தி.மு.க. சட்டமன்ற தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாமா…?
பதில்:- நாங்கள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி ரொம்ப நாளாச்சு.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.