போஸ்டர் செய்தி

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் மத்திய அரசின் திட்டமும் இணைப்பு

சென்னை, செப்.12–

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா–ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் கிடைத்திட அம்மாவினால் தொடங்கி வைக்கப்பட்ட மகத்தான திட்டமான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தையும், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்)-ன் கீழ், ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து மிகச்சிறப்பாக செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தலைசிறந்த திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா–பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய சுரக்ஷா மிஷன் என்ற திட்டமானது வறுமையில் உள்ள மக்களுக்காக மிகப்பெரிய திட்டமாக தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்” என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 1.57 கோடி குடும்பங்களுக்கு 1027 சிகிச்சை முறைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வரையிலான காப்பீட்டினையும், 154 சிறப்பு சிகிச்சைகளுக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டினையும் மற்றும் 8 வகையான உயர்நிலை சிகிச்சைகளுக்கு மைய நிதியும் ஏற்படுத்தப்பட்டு அதிலிருந்து சிகிச்சைக்கான செலவினையும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.5 லட்சம்

மத்திய அரசின் திட்டத்துடன் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டினையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதின் மூலம் சமூக பெருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு புள்ளிவிவரம் பட்டியல்படி தமிழகத்திலுள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களிலுள்ள சுமார் 2.85 கோடி நபர்கள் இனி ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் வரையிலான கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையை காப்பீட்டின் கீழ் தகுந்த மருத்துவமனைகளில் பெறமுடியும். இதற்குரிய பயனாளிகள் ஏற்கனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கலாம். விடுபட்டவர்களையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து புதிதாக காப்பீடு அட்டை வழங்கப்படும்.

ரூ.25 லட்சம் வரை

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கும் இனி ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டினை விரிவுபடுத்தி உறுதி செய்ய முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். எனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திலுள்ள அனைத்து பயனாளிகள், அவர்கள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா–ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தகுதிப்பெற்றவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீடு உயர்த்தப்பட்டு வழங்கப்படும். மேலும் உயர்நிலை சிகிச்சைகளான காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, செவி புல மூளை தண்டு உள் வைப்பு அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றிக்கு ரூ.25 லட்சம் வரையிலும் தமிழ்நாடு அரசின் மைய நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருவதை தொடர்ந்து வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தகுதிபெறாத ஆனால், மத்திய அரசு திட்டத்திற்கு அடிப்படையான பெருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு புள்ளிவிவரப்படி தகுதியுள்ள நபர்களுக்கும் இனி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டின் கீழ் காப்பீடு அட்டை வழங்கப்படும் என்றார்.

இந்நிகழ்வின் போது தேசிய சுகாதார நிறுவனம் சி.இ.ஓ. டாக்டர். இந்து பூஷன் பேசுகையில்:– இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழகத்தில் 30-வது மாநிலமாக இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் தமிழ்நாட்டின் வலிமையான மருத்துவ சேவை உட்கட்டமைப்பு வசதிகள் மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயாலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், தேசிய சுகாதார நிறுவன முதன்மை செயல் அலுவலர் டாக்டர். இந்து பூஷன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர். உமாநாத், தமிழ் நாடு சுகாதார திட்ட இயக்குநர் பி.உமா மகேஸ்வரி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் திட்ட மேலாளர் சுகேஷினி மற்றும் மருத்துவத் துறை உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *