செய்திகள்

முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க இனி நேரில் வர வேண்டாம்

சென்னை, செப். 2–

முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரில் வந்து மனு தருவதைத் தவிர்த்து, இணையதள சேவையைப் பயன்படுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், அன்றாடம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மாவட்டங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்மை காலங்களில் இலவச வீடு ஒதுக்கீடு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க காத்து நிற்கின்றனர். முதியோர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இதில் அடங்குவர்.

தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும், இவ்வாறு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மனுக்களை அளிக்க குவிந்து வருவதால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஒரே மாதிரி நடைமுறை

முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொது மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெறுவதோடு மட்டுமின்றி, அஞ்சல், இணையதளம், மின்னஞ்சல் மற்றும் முதலமைச்சர் உதவி மையம் ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு இணையம் வழியாக பெறப்படும் மனுக்களுக்கான ஒப்புகை சீட்டு சம்பந்தப்பட்டவரின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

கோரிக்கை அல்லது மனு எண் மூலமாகவே தங்கள் கோரிக்கை நிலை குறித்து, இணையம் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். பொதுமக்களிடம் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது இணையம் வழியாகவோ, எவ்வழியில் பெறப்பட்டாலும், முதல்வரின் தனிப்பிரிவில் அனைத்து மனுக்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றிதான் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனால், கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக ஆயிரக்கணக்கில் கூடுவதைத் தவிர்த்து இணையவழிச் சேவைகளைப் பயன்படுத்தி மனுக்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *