செய்திகள்

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பிய பிச்சைக்காரர்

நாகர்கோயில், ஜூலை 6–

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் யாசகம் மூலம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி, நெகிழ வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலைபரவல் காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறை மற்றும் கொரோன தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்கள் நிதித்தந்து உதவுமாறு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

கொரோனா நிவாரண நிதி தொகைகள் வரவு செலவு கணக்குகள் வெளிப்படைத்தன்மையாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தங்களால் இயன்ற பணத்தை தமிழ்நாடு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நேரடியாகவும், இணைய வழியிலும் செலுத்தி வருகின்றனர்.

அதன்படியே, இதுவரை இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில், முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு பொதுமக்கள் அளிக்கும் ஒரு ரூபாய் பணத்தைக்கூட, இணைய பொதுவெளியில் அனைவரும் பார்த்துக்கொள்ளும்படி வெளிப்படையாக தமிழ்நாடு அரசு கணக்கு வைத்துள்ளது.

பிச்சை எடுத்து உதவி

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ஆலங்கிணறு பகுதியைச் சோந்த பூல் பாண்டியன் (வயது 70) தான் யாசகமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஊர், ஊராக சென்று யாசகம் எடுத்து வரும் இவர், தான் பிச்சை எடுக்கும் பணத்தில் இருந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பூல்பாண்டியன் பலமுறை பணம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு தான் யாசகம் எடுத்த பணத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை தோவாளையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் பூல்பாண்டியன் அனுப்பி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *