சிறுகதை

முடியில்லாத காதல்! – நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

வழக்கம் போல ‘‘இந்த கோடை விடுமுறைக்கும் சொந்த ஊர் போக வேண்டும்’’ என்று சொன்ன போது உமா முறைத்தாள்.

‘‘அது என்ன ஊர்? சுத்த பட்டிக்காடு! இன்னிக்கு உலகம் முழுக்க எத்தனையோ வசதிகள் வந்துருச்சு! ஏன் உங்க பட்டிக்காட்டை சுத்தி இருக்கிற ஊரெல்லாம் எவ்வளோ முன்னேறிடுச்சு! ஆனா உங்க ஊர் மட்டும்? அதிகம் எதுவும் வேணாம்? ஒரு டிரான்ஸ்போர்ட் வசதியிருக்கா? ஒரு நெட் வொர்க் கவரேஜ் இருக்கா? என்னால அந்த ஊர்ல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுப்பா!” என்று மூச்சுவிடாமல் பாடி முடித்தாள்.

”சரிசரி! நீ வேணா சென்னையிலே உங்க மாமா வீட்டுல பசங்களோட தங்கிக்க. அங்கே இருந்து ஒரு அம்பது கிலோ மீட்டர்தானே எங்க ஊர். நான் போய் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு வந்துடறேன்!” என்று சொன்ன போது பெங்களூர் குளிரிலும் அவள் முறைத்தது சுட்டது.

“போன வருஷமே இதான் லாஸ்ட்னு சொன்னேன்! சரி சரின்னு தலையாட்டிட்டு இப்ப திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறுதே…!”

“என்னதான் இருந்தாலும் ஊர்ப்பாசம் விட்டுப் போவுதா? நீ உங்க அம்மா வீட்டுக்குப் போறதை நான் அப்ஜெக்ட் பண்ணியிருக்கேனா?”

“அதுவும் இதையும் கம்பேரே பண்ணாதீங்க. சுத்த பட்டிக்காடா இருக்கிற அந்த ஊரில இருந்து எப்படித்தான் சாப்ட்வேர் படிச்சு வந்தீங்களோ தெரியலை! நான் உங்ககிட்ட வந்து வசமா சிக்கிட்டேன்!”

“அந்தப் பட்டிக்காட்டுல இருந்த வாத்தியாருக்குப் படிக்காத வாத்தியாராலதான் இந்தளவுக்கு நா வளர முடிஞ்சுது! அந்த நன்றிக்காவது அந்த மனுசனை வருசம் ஒரு தடவை போய் பார்த்து வர வேணாமா?”

‘‘வாத்தியாரை மட்டும் பார்த்தா சரி! அப்புறம் உங்க கூடப்படிச்ச சிநேகிதிகளைப் பார்க்கறேன்னு முன்னே ஒரு சிறுக்கி வீட்டுக்கு கூட்டிட்டு போய் என் மானத்தை வாங்கினீங்களே. அத மாதிரி…’’

‘‘என்ன மானம் போயிருச்சு! அவங்க ஆசையா வெட்டிக் கொடுத்த நுங்கை உரிஞ்சி குடிக்க தெரியாமா நீ முழிக்க அவங்களுக்கு சிரிப்பாயிருச்சு! அதெல்லாம் ஒரு விஷயமா?”

”போய் தொலையுங்க! என்னை கூப்பிடாதீங்க! ரெண்டு நாளுல திரும்பிரணும் சரியா?”

எப்படியோ பர்மிஷன் வாங்கி அடிச்சு புடிச்சு புதூர் கிராமத்தில் நுழைகையில் ஊரே எலக்‌ஷன் பரபரப்பில் இருந்தது. கிட்டா என்ற கிருஷ்ணன் தான் அவ்வூரின் கட்சிச் செயலாளராம்.

கொடி கட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து ‘‘என்னடா எலக்‌ஷன் எல்லாம் எப்படி போவுது?’’ என்று கேட்ட போது

‘‘வாடா ராசா! வா! வருஷத்துக்கு ஒரு தரம்தான் ஊர்ப்பக்கம் எட்டி பார்க்குறே! அதுவும் ஒரு நாளோ ரெண்டு நாளோ தங்கறே இந்த வருஷமாவது ஒரு வாரமாவது தங்கிட்டு போயேண்டா!” என்றான்.

அமர்த்தலாய் புன்னகைத்தேன்.

கூரை வேய்ந்திருந்த பாலு டீக்கடையில் இப்போது தகர தகடுகள் வேய்ந்திருந்தார்கள்.

வழக்கம் போல மதியம் இரண்டு மணிக்குத்தான் டீக்கடை அடுப்புப் பத்த வைப்பார்களாம்.

உள்ளே ரெண்டு பேர் சீட்டாடிக் கொண்டிருந்தனர். ஜீன்ஸும் குளிங்கிளாஸுமாய் என்னைப் பார்த்து கொஞ்சம் மிரண்டனர்.

சாலை புதிதாகப் போட்டிருந்தனர்.

‘‘என்னடா கிட்டா! உங்க தலைவர் இன்னும் கட்சி பதவியையே புள்ளைக்கு கொடுக்க மாட்டேங்கிறார்; அவருக்காக உழைச்சிக்கிட்டு இருக்கியே உனக்கு என்னத்தை கொடுக்க போறார்?’’ என்றேன்.

‘‘வேணாம்…! அரசியல் பேசாத.. நாம பிரெண்ட்ஸ் வேற ஏதாவது பேசுவோம்’’ என்றான்.

அப்படியே ஊரின் கடைசியில் இருந்த கோயிலுக்கு வந்தோம்! எதிரில் இருந்த குளத்தில் நீர் வழிந்து கொண்டிருந்தது. ஒன்றிரண்டு அல்லிப் பூக்கள் பூத்து இருந்தன.

‘‘இந்த மாதிரி கிராமத்திலேதாண்டா தண்ணியையே பார்க்க முடியுது! கோயில் புனரமைப்பு நடக்கிறாப் போல தெரியுது! நாம படிக்கிறப்ப ஒரே புதரா இருக்கும். நம்ம டியூசன் வாத்தியாரோட சேர்ந்து புதர் வெட்டி போடுவோமே! ஆமா அது யாரு? கோவில்ல இருந்து வெளியே வர்றது ஜனா தானே!’’

‘‘ஆமாம்டா! ஜனாவேதான்…!’’

‘‘இப்ப கொஞ்சம் உடம்பு பூசி தலையிலே முடியெல்லாம் வளர்ந்திருக்கு போல…’’

‘‘ம்ம்..!’’

‘‘எப்பூடி? அஸ்வினி ஹேர் ஆயில் நிறைய யூஸ் பண்ணியும் முடி வளராம தவிச்சானேடா! இந்த முடி அன்னிக்கு இருந்திருந்தா லவ்வாவது நிறைவேறி இருக்கும்’’.

‘‘அது அப்ப! இப்ப ஏதோ மெடிசன் எடுத்து கொஞ்சம் வளர்ந்துருச்சு! இப்ப கல்யாணம் கூட ஆயிருச்சு தெரியுமா?’’

‘‘அந்தப் பொண்ணையா…?’’

‘‘ஊகும் வேற…!’’

எனக்கு பழைய நியாபகம் வந்தது. அந்த ஊரின் இந்தக் கோவில் மண்டபத்தில்தான் டியூசன் எடுப்பார் ரமேஷ் வாத்தியார். அவர் அப்பா கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். இவர் டிகிரி முடித்து வேலைக்குப் போகாமல் டியூசன் எடுத்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் எல்லோரும் அங்கே படித்து கொண்டிருந்தோம்! ஜோதி என்ற ஓர் இரட்டை ஜடைப் பொண்ணும் அதில் அடக்கம். அதற்கு தான் மகா அழகு என்று ஒரு எண்ணம். யாரையும் மதிக்காது. ரமேஷ் சாரைக் கூட அது சட்டை பண்ணாது.

பத்தாம் வகுப்பு படிக்கையில் அதுவரை டியூசனுக்கு வராத ஜனா எங்களோட வந்து சேர்ந்தான். அஞ்சு வருசமா இவனுங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். இவங்களை இந்த வருசம் கரை சேக்கறதே கஷ்டம். நீ புதுசா வந்து என்னத்தைப் படிச்சு கிழிக்கப் போறே? ரெண்டு வருசமாத்தான் என் டியூசன் நல்ல ரிசல்ட் கொடுக்குது! அதை கெடுக்கறதுக்குன்னு வந்தியா வேண்டாம்; ஓடிப்போயிரு என்று ஜனாவை நிராகரித்தார் வாத்தியார்.

அப்புறம் ஏதோ சிபாரிசு பிடிச்சு வாத்தியாரை தாஜா செய்து டியூசனில் சேர்ந்துவிட்டான். முதல் ஒரு வாரம் ஒழுங்காய்த்தான் இருந்தான். அப்புறம் வாத்தியாரையே இடக்காய் மடக்கி கேள்வி கேட்க ஆரம்பித்தான். அப்போது “க்ளுக்” என்று ஒரு சிரிப்பு ஜோதி சிரிக்க இன்னும் அதிகமாய் கலாய்க்க ஆரம்பித்தான்.

ஆள் அப்படியே ஓமக்குச்சி நரசிம்மன் போல இருப்பான். உச்சந்தலையில் ஆங்காங்கே ரோமங்கள் முளைத்து செம்பட்டையாக இருக்க மண்டை அப்படியே தெரியும். அவன் பேசும்போதும் ஜலதோஷம் பிடித்தவன் பேசுவது போல இருக்கும்.

ஆனாலும் ஓவராய் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

கோயிலில் பிரதோஷம் போன்றவை நடக்கும் போது பக்திப்பழமாய் வருவான். பிரசாத விநியோகம் அவன் தான் செய்வான். எல்லோருக்கும் கொடுப்பதை விட ஜோதிக்கு ஒரு பிடி அதிகமாய் கொடுப்பான்.

என்னடா அங்க மட்டும் அதிகம் என்றால் போதும் நீங்களும் அதுவும் ஒண்ணாடா! அது என்னோட ஆளு! அதை நான் கட்டிக்க போறேன் என்று சொல்லுவான்.

”நீதான் சொல்றே அதை கட்டிக்கப் போறேன்னு! அது சொல்லுச்சாடா!”

”நான் இன்னும் என்னோட லவ்வை அந்த பொண்ணுகிட்டே சொல்லலையேடா!”

“அப்புறம்? உன் ஆளு அது இதுன்னு பீத்திக்கறே!”

‘‘டேய்! நான் பத்தாவது பாஸ் ஆகனுன்னா டியூசனுக்கு வந்தேன்னு நினைக்கிறே? இல்லைடா. எப்படியாவது என் ஆளை அசத்தி மடக்கிரணும்னுதான் வந்தேன். இந்த வாத்தியைக் கலாய்க்கிற போதெல்லாம் அது ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்குது பாரு! அது ஒண்ணு போதும்டா!”

‘‘இப்படியே சிரிச்சிட்டு இருந்தா போதுமா?’’ வெங்கி கேட்க

‘‘என்ன பண்ணனுங்கிறே?’’

“ஒரு லெட்டர் கொடு! இல்லே ஒரு கிரிட்டிங் கார்ட் ஸ்மார்ட்டா ஹார்ட் நடுவிலே ரோஸ் தைக்கற மாதிரி கொடு!” வெங்கி ஏத்திவிட்டான்.

“அப்படி செஞ்சா…!”

“அப்புறம் உன் ஆளு உன் கிட்ட சிக்கிரும்!”

”இல்லேடா! எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கு! அப்படியே ஜனா நெளிந்தான்.”

”அடச்சீ! உன்னை போயி… நாங்க… பெருசா…!”

”இப்ப என்னடாங்கிறீங்க? நாளைக்கே அந்தப் பொண்ணுகிட்டே ஒரு ரோசைக் கொடுத்து ஐ லவ் யூ சொல்றேன் பாருங்க!” நாங்கள் ஏத்தி விட்டதில் ஜனா வீராப்பாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

மறுநாள் நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம்.

மாலை டியூசன் ஆரம்பிக்கும் முன்னரே ஜனா ஆஜராகி இருந்தான். நாங்களும்தான். அன்று கொஞ்சம் அழகாகவே ஆடை உடுத்தி வந்திருந்தது அந்தப் பெண். வழக்கம் போல பெண்கள் கோவிலைச் சுத்தப்படுத்த துடைப்பம் எடுத்துச் செல்ல கண்காணிக்கும் சாக்கில் உடன் சென்றான் ஜனா.

சட்டென்று தன் கையில் இருந்த கார்டை நீட்டினான்.

ஜோதியிடம் ”காதல் வளர்த்தேன்…! காதல் வளர்த்தேன்..! உன்னில் நானும் என்னில் நீயும் சொல்ல காதல் வளர்த்தேன்!” என்று ஸ்டைலாக பாட ஜோதி அந்தக் கார்டை வாங்கி சுக்குநூறாக கிழித்து எறிந்து ‘‘ராஸ்கல்! முதல்ல உன் தலையில முடியை வளரு! அப்புறம் காதலை வளர்க்கலாம்! ’’என்று கத்தியது. உடனிருந்த பெண்கள் கொல்லென்று சிரிக்க முகம் வாடி வெளியேறியவன் தான். அப்புறம் டியூசன் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை

நினைவுகளில் இருந்து மீண்டு ”ஹாஹாஹா” வென சிரித்தேன்.

”என்னடா பழைய நியாபகமா!” என்றான் கிட்டு.

”ஆமாடா! ”என்றேன்.

அப்போது அங்கே இடுப்பில் ஒரு குழந்தையோடு கொஞ்சம் பூசினாற்போல அந்தப் பெண் எங்களைக் கடந்தாள்.

”இ… இவளை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே…!”

”இவதாண்டா அந்த ஜோதி…!”

கிட்டா சொல்லி முடிக்கவும் ”ஜோதி… ஏய் ஜோதி… நில்லுடி! நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க!” என்று ஒருவன் அவளைத் தொடர்ந்தான். அவன் தலையில் முடியே இல்லை.

”இது…யார் ?!” நான் கேட்க

”அவளோட புருஷன்” என்றான் கிட்டா.

நான் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தேன்.

Leave a Reply

Your email address will not be published.