செய்திகள்

‘முடா’ வழக்கிலிருந்து தப்பிக்க 50:50 திட்ட மனைகளை திரும்பப் பெறும் சித்தராமையா

Makkal Kural Official

எதிர்க்கட்சியினர் விமர்சனம்

பெங்களூரு, நவ. 1–

‘முடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் தொடர்பான வழக்கிலிருந்து தப்பிக்கும் நோக்கில், முதல்வர் சித்தராமையா புதிய தந்திரத்தை கையில் எடுத்துள்ளார். ‘முடா’விலிருந்து 50:50 என்ற திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட மனைகளை, திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலருக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.

புதிதாக லே – அவுட்டுகள் அமைப்பதற்காக நிலங்களை ‘முடா’ கையகப்படுத்தி வருகிறது. இதில் நிலங்களின் உரிமையாளர்களுக்கு 50 சதவீதம் பணமும், மீதி 50 சதவீதம் பணத்திற்காக நிலமும் வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது.

முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி நிலத்தையும் ‘முடா’ கையகப்படுத்தி இருந்தது. இதற்கு மாற்றாக 14 வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. தனது அதிகாரத்தை முதல்வர் தவறாக பயன்படுத்தி, நகரின் மையப்பகுதியில் மனைவிக்கு வீட்டுமனை வாங்கிக் கொடுத்ததாக சர்ச்சை கிளம்பியது.

இதுதொடர்பாக அவர் மீது லோக் ஆயுக்தா வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பணத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் அளிக்கப்பட்ட புகாரில், அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது.

இந்நிலையில், 50:50 சதவீதத்தின் கீழ் நிலம் ஒதுக்கப்பட்டதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. முறைகேடு நடந்திருப்பதால், அந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட மனைகளை திரும்பப் பெற வேண்டும் என அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

பா.ஜ.க எம்.எல்.ஏ., கடிதம்

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தேசாய் தலைமையில் குழுவை அரசு அமைத்தது. மைசூரு பா.ஜ.க எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சவா, சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘2020 முதல் 2024 வரை முடா ஒதுக்கிய 50:50 வீட்டு மனைகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.

முடா கமிஷனர்களாக இருந்த நடேஷ், தினேஷ்குமார் ஆகியோர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மனைகளை ஒதுக்கியுள்ளனர். இந்த முறைகேட்டில் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை மற்றும் கருத்துக்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

சட்டவிரோதமாக வழங்கப்பட்ட மனைகளை திரும்பப் பெற்று, உண்மையான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி நீங்கள் காலம் தாழ்த்தாமல் நல்ல முடிவு எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த கடிதத்தை சித்தராமையா ஏற்றுக் கொண்டுள்ளார். 50:50க்கு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட மனைகளை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர் உமா சங்கருக்கு, முதல்வர் அலுவலகத்தில் இருந்து எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *