புதுடெல்லி, பிப்.17–
வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததற்காக, காங்கிரஸ் கட்சியின் 4 பிரதான வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது. காங்கிரஸ் முறையீடு செய்ததன் பேரில், இந்த நடவடிக்கையை தற்காலிகமாக ரத்து செய்துள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், வங்கிக் கணக்குகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் நேற்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் 4 பிரதான வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை திடீரென முடக்கியுள்ளது. பொது மக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட எங்கள் கிரவுட் பண்டிங் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. காசோலைகளை வாங்க மறுப்பு: இதனால், நாங்கள் அளிக்கும் காசோலையை வங்கிகள் வாங்குவது இல்லை. இது எங்கள் செயல்பாட்டை பெரிதும் பாதித்துள்ளது.
2018–19ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில், முதன்மையான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்படுவது இதுவே முதல்முறை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: அதிகார மயக்கத்தில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கு சில வாரங்களே உள்ளன. இந்த சூழலில், மிகப் பெரிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை மோடி தலைமையிலான அரசு முடக்கியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய வீழ்ச்சி என தெரிவித்தார்.
முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “பயப்பட வேண்டாம் மோடி ஜி. காங்கிரஸ் பணபலத்தில் இயங்கவில்லை. மக்கள் பலத்தில் இயங்குகிறது. சர்வாதிகாரத்தின் முன்பு ஒருபோதும் நாங்கள் அடிபணிய மாட்டோம். தலைவணங்கவும் மாட்டோம். இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரசின் ஒவ்வொரு தொண்டரும் போராடுவார்” என்று தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெற. தேர்தல் பத்திரம் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு கொண்டுவந்தது. இதன்மூலம், அரசியல் கட்சிகள் பல கோடி ரூபாய் நன்கொடை பெற்று வந்தன. இந்நிலையில், தேர்தல் பத்திரம் நடைமுறை சட்டவிரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் இத்திட்டத்தை நேற்று முன்தினம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடை வசூலித்த கட்சியாக பாஜக உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அக்கட்சிக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. இந்த சூழலில், காங்கிரஸின் செயல்பாட்டை முடக்கும் நோக்கில், அதன் வங்கிக் கணக்குகளை பாஜக முடக்கியுள்ளது. என்றும் அக்கட்சியினர் விமர்சித்தனர்.
இந்நிலையில், கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையீடு செய்தது.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் மீதான முடக்க நடவடிக்கையை வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் தற்காலிகமாக செயல்படவும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பான விசாரணை பிப்ரவரி 21ம் தேதி நடைபெறும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.