நாடும் நடப்பும்

முக கவசம் அணிகிறார், சமூக விலகலை கடைபிடிக்கிறார்

மனு தாக்கலின் போது பழனிசாமியின் எளிமை பாரீர்

நாளை பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்க இருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை படிப்படியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எடுத்த பல முடிவுகள் எல்லாத் தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஆனால் சமீபமாக ஒரே நாளில் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 550 என்று இருப்பது அச்சத்துடன் பார்க்க வேண்டிய அம்சமாகும்.

தமிழகம் அடுத்த 20 நாட்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்களும் வீடுவீடாக வந்து வாக்கு சேகரிப்பதும் வீதிகளில் வாகனங்களிலும் கூட்டமாகவும் பிரச்சாரம் செய்து கொள்வதும் வாடிக்கையாக இருக்கும் இந்நிலையில் எல்லாக் கட்சியினருமே சமூக விலகலையும் தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளையும் மனதில் கொண்டு மிக கண்ணியமாகவே பிரச்சார அம்சங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்ற போது மிக எளிமையாக தனியாகவே வந்து மனு தாக்கல் செய்திருப்பது நல்ல முன்னுதாரணம் ஆகும்.

அடுத்த மூன்று வாரங்களுக்கு நடைபெற இருக்கும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தின் போது தனது கட்சியினர் ஆர்வக்கோளாறில் சமூகவிலகலை காற்றில் பறக்க விட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் முதலமைச்சர் இப்படி கூட்டத்தைக் கூட்டி படாடோபமான முறையில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்யாமல் தனித்தே வந்திருப்பது தமிழக மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மேலும் அவரது வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள உறுதிப்பத்திரத்தில் கடந்த 2016–ல் ரூ.3.14 கோடியாக இருந்த அவரது அசையும் சொத்து மதிப்பு தற்போது 2021–ல் ஒரு கோடி ரூபாய் குறைந்து ரூ.2.01 கோடியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் அவரது அசையாத சொத்துக்களின் மதிப்பு 2016ல் ரூ.4.66 கோடியாக இருந்துள்ளது. தற்போது 2021ல்– அது ரூ.4.68 கோடியாக, ஆம், ரூ.2 லட்சம் மட்டுமே அதிகரித்து இருப்பதாக தெரிய வருகிறது.

மொத்தத்தில் எளிமையான ஒரு முதல்வர் மீண்டும் மக்கள் மன்றத்தில் தன்னை மீண்டும் முதல்வராக ஆட்சி பொறுப்பில் அமர வைக்க தேர்தலில் தனது மனுத் தாக்கலை செய்து களம் இறங்கியுள்ளார்.

மேலும் அவர் சேலம் எடப்பாடி தொகுதியில் ஏழாவது முறையாக தேர்தல் போட்டியில் நுழைகிறார்.

பல்வேறு பண்டிகைகள், திருவிழாக்கள், குடும்ப சுபநிகழ்வுகள் என பல அம்சங்கள் சாமானியனால் கொண்டாடப்படாமல் இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் சமீபமாக ஊரடங்கு நாடெங்கும் தளர்த்தப்பட்டு வருகிறது.

ஒருபக்கம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் சமூக விலகலை நல்ல முறையில் ஓரளவு கடைபிடிக்கப்பட்டதன் விளைவாக குறைந்துவிட்ட கொரோனா பரவலின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கை மெல்ல தளர்த்தியது சரிதான்.

ஆனால் மகாராஷ்டிரம் போன்ற சில மாநிலங்களில் கொரோனாவின் பரவல் தொடர்வதால் அம்மாநிலங்களில் பல பகுதிகளில் ஊரடங்கு தீவிரமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கடுமையான கண்காணிப்பு முறை அமலில் தான் இருக்கிறது.

ஆனால் முன்பு போல அப்படி வந்தவர்கள் தனிமைபடுத்தப்படுவது இல்லை. ஒருவேளை கொரோனா அறிகுறிகள் கொண்டவர் வந்துவிட்டால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவது இருக்கிறது.

பொதுமக்களிடமும் விழிப்புணர்வு வந்துவிட்டதால் வீணாக யாரும் பயணிப்பதில்லை என்ற நிலையில் தமிழகம் மெல்ல சகஜ நிலைக்கு திரும்ப துவங்கி இருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்து விடாமல் இருக்க சமூக விலகலும் முக கவசம் அணிவதும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவசியமாகிறது.

முக கவசத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் தீவிரமாகவே அதை கடைப்பிடிக்கிறார்கள். முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் என்ன? மூக்கு, வாய் வழியாகத்தான் கோவிட்19 கிருமி ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.

ஆக, நாம் சரியாக முககவசத்தை அணிந்து இருந்தால் அதாவது மூக்கையும் வாயையும் சரிவர மூடியபடி மட்டுமே வெளியே சென்று வந்தாலும் அலுவலங்களில் பணியாற்றினாலும் கடைவீதிகளுக்கு சென்று வந்தாலும் தொற்று பரவல் இருக்காது.

ஸ்டைலாக நெற்றியில் முகக் கவசத்தை அணிந்து நண்பர்கள் குழுமமாக பேசிக் கொண்டிருப்பதும் நாடிக்கு கீழ் அணிந்திருப்பதும் மிக தவறான வழக்கமாகும்.

எனக்கு இதுவரை கொரோனா தாக்கவில்லை, ஆகவே எனது உடல் ஆரோக்கியம் மேன்மையாக இருக்கிறது என்ற எண்ணத்துடன் இருப்பது தவறாகும். தினமும் தமிழகத்தில் 500 பேர் வரை பாதிப்பு எண்ணிக்கை இருப்பது அறவே குறைந்து யாருமே பாதிப்படையவில்லை என்ற இலக்கை எட்டும் வரை பாதுகாப்பாக இருப்பதுதானே புத்திசாலித்தனம்!

நாளை பிரதமர் மோடி கூட்டியுள்ள முதல்வர்கள் கூட்டத்தில் பள்ளிக்கூடங்களில் சுற்றுலா பகுதிகளில், குடும்ப சுப வைபவ நிகழ்வுகளில் முக கவசமும், சமூக விலகலும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது வலியுறுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.

பிரதமர் மோடியும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முகக் கவசத்தை அணிந்த படிதான் கலந்து கொள்கிறார். நமது முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கூட முககவசத்தை அணிவதில் உறுதியாக இருப்பதை பார்க்கிறோம்.

உலகெங்கும் முககவசமும் சமூக விலகலும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி நல்ல முன்னுதாரணமாக இருப்பதை பிரதமர் முன்பே பாராட்டி இருந்தாலும் நாளை முதல்வர்கள் கூட்டத்தில் மீண்டும் பாராட்டப்படுவார்.

மேலும் தமிழகம் அண்ணா திமுகவின் தலைவர்கள், மக்களின் நலன் காக்க உறுதி ஏற்று பணியாற்றுவதை புரிந்து கொண்டு தேர்தலில் எம்ஜிஆர் தந்த ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து ஜெயலிதா கண்ட நல்லாட்சியை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர வாக்களித்து பெருவாரியான வெற்றியை தர தயாராகிவிட்டனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *