செய்திகள்

முக்தியடைந்த ஸ்ரீ ஜெயேந்திரருக்கு மெழுகு சிலை

காஞ்சீபுரம், பிப்.12-–

காஞ்சீ சங்கர மடத்தில் முக்தியடைந்த காஞ்சீ சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திரருக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மடத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அந்த மெழுகு சிலையை பார்த்து வியந்து மனமுறுகி தரிசித்துவிட்டு செல்கின்றனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி காஞ்சீ சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தியடைந்தார். இதையடுத்து மார்ச் 1ம் தேதி ஸ்ரீ ஜெயேந்திரரின் திருஉடல் பிருந்தாவனத்தில் பிரவேசம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயேந்திரருக்கு ஸ்ரத்தாஞ்சலி, மகா ஆராதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, பிருந்தாவனத்தில் துளசி மாடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதன்படி, கூர்ம பீடத்துடன் கருங்கல் பீடம் அமைக்கப்பட்டு ஜெயேந்திரர் அஷ்டானத்தில் ஏகாதச ருத்ர ஜப ஹோமம், சண்டி பாராயணம் ஹோமம் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து காஞ்சீ சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பல்வேறு பூஜைகள் செய்து, அதிஷ்டான பிருந்தாவனத்தில் துளசி ஸ்தாபனம் செய்தார். இதையடுத்து, பக்தர்களுக்காக ஜெயேந்திரர் பவனில் அவரைக் காணும் வகையில் தத்ரூபமாக மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மகாபெரியவருக்கு அவரது பிருந்தவான அதிஷ்டானத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டது. தற்போது ஜெயேந்திரர் வசித்து வந்த பவனில் பிரத்யேக ஜெயேந்திரர் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மெழுகு சிலையைக் காண்பதற்கு அவர் வழக்கமாக அமர்ந்து ஆசி வழங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையைக் காண ஆர்வத்துடன் சங்கர மடத்துக்கு வரும் பக்தர்கள் காஞ்சீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுவிட்டு பிறகு, ஜெயேந்திரருக்கு அமைக்கப்பட்டுள்ள மெழுகு சிலையையும் பார்த்து வியந்து மனமுறுகி வணங்கி செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *