‘பெயர் பொருத்தம், நாள் பொருத்தம், முகூர்த்த பொருத்தம் எல்லாம் பார்த்து முடிவு செய்யப்பட்டது நந்தகோபாலின் திருமணம். நந்தகோபால் – கௌசல்யா திருமணப் பெயர் பொருத்தத்திற்கு ஐந்து தேதிகள் குறிக்கப்பட்டு இந்த ஐந்து தேதிகளில் எந்தத் தேதி சரியாக இருக்கும் என்று திருமண மண்டபம் பார்க்கச் சென்றார்கள்.
நந்தகோபால் வீட்டைச் சுற்றியுள்ள எல்லாத் திருமண மண்டபங்களும் அந்தத் தேதியில் ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது எப்படி முன்பதிவு செய்யப்பட்டது? என்று நந்தகோபாலுக்கு விளங்காமல் இருந்தது .அந்தத் தேதியில் எல்லா மண்டபங்களிலும் எப்படி முன்பதிவு செய்யப்பட்டது? என்பது நந்தகோபால் குடும்பத்திற்கு விளங்கவே இல்லை.
அதுவும் நந்தகோபால் – கௌசல்யா திருமணப் பொருத்த நாளில் தான் அந்தத் தேதியை முடிவு செய்திருந்தார்கள். மற்ற பெயர் பொருத்தம் உள்ளவர்கள் வேறு தேதியைக் குறித்து வைத்திருப்பார்கள். ஆனால் நந்தகோபால் திருமண பொருத்த நாளில் எல்லா மண்டபங்களும் முன்பதிவு செய்யப்பட்டது தான் விளங்காமல் இருந்தது.
இது எப்படி என்று விசாரிப்பதற்கு ஒவ்வொரு மண்டப மேலாளரை அணுகினான் நந்தகோபால்.
” சார் நீங்க கேக்கிற தேதி எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கு. அதனால வேற தேதியில உங்க திருமணத்தை மாத்தி வையுங்க” என்றார்கள் திருமண மண்டப மேலாளர்கள்.
“இல்ல சார், என்னாேட ராசிப்படி இந்த நாள்ல இந்த நேரத்தில தான் திருமணம் செய்யணும்னு பெரியவங்க குறிச்சு கொடுத்திருக்காங்க. அதைத்தான் என்னுடைய திருமண நாளுக்காக நான் கேட்கிறேன்” என்று கேட்டார் நந்தகோபால் .
இந்தத் தேதியில் தான் உங்களுக்கு திருமணம்
செய்யணுமா? என்று மேலாளர் கேள்வியாகக் கேட்டபோது
“ஆமா சார் .ரெண்டு மூணு வருசமா பெண் பாத்து இந்தத் தடவைதான் சரியா வந்திருக்கு. அதுவும் இந்தத் தேதியில தான் இந்த நேரத்தில் தான் என்னுடைய ஜாதகப்படி திருமணம் பண்ணனும்னு சொல்லியிருக்காங்க.
” எனக்கு இந்த நாள் தான் வேணும்” என்று நந்தகோபால் பிடிவாதமாகக் கேட்டான்.
” அப்படின்னா இங்க சாம்பசிவம்னு ஒரு சமையல்காரர் இருப்பார், அவருகிட்டப் போய் கேளுங்க” என்று கல்யாண மண்டப மேலாளர் சொன்னதும்
” என்னங்க கல்யாண மண்டப முதலாளி கிட்ட தானே இதப் பத்தி கேக்கணும். நீங்க என்னடான்னா சமல்காரரைக் கேக்கச் சொல்றீங்களே ” என்று நந்தகோபால் கேட்டார். !
” இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் முதலாளி தலையிட மாட்டாங்க. நீங்க சமையல்காரரத் தான் கேக்கணும் ” என்று அடித்துச் சொன்னார் மண்டப மேலாளர்.
” சரி அவருடைய நம்பர் குடுங்க” என்று வாங்கிய நந்தகோபால் அவருக்குப் போன் செய்தான்.
எதிர் திசையில் இருந்த சாம்பசிவம்
“சார் அந்த தேதியா? அது ஏற்கனவே புக் ஆயிருக்கு. வேற தேதி வச்சுக்க கூடாதா? என்று மேலாளர் சொல்ல
“இல்ல சார் எனக்கு அந்தத் தேதி தான் வேணும்” என்று நந்தகாேபால் சொன்னதும் ,
சிறிது நேரம் யோசித்தார் சாம்பசிவம்.
” சரி உங்களுக்கு அந்த தேதியை நான் குடுத்துடுகிறேன்; ஆனா சமையல் மற்றும் கல்யாணத்துக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் நாங்க தான் பண்ணுவோம்” என்று சாம்பசிவம் சொன்னார்..
” இல்ல சார். எங்க குடும்பத்துக்கு ஒரு சமையல்காரர் இருக்கிறார். அவர்கிட்ட தான் நாங்க கொடுப்போம்” என்று நந்தகோபால் சொல்ல
” எங்ககிட்ட அத்தனையும் கொடுப்பதாக இருந்தா, இந்த மண்டபத்தில நீங்கள் கல்யாணம் பண்ணலாம் .இல்ல வேற இடம் பாருங்க” என்று சாம்பசிவம் சொல்ல,
‘வீடு,பேருந்து, ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் இந்தத் திருமண மண்டபத்தில் திருமணம் செய்தால் எல்லாவற்றிற்கும் சவுகரியமாக இருக்கும்” என்று நினைத்த நந்தகோபால் “சரி ” என்று ஒத்துக் கொண்டான்.
அது மட்டுமில்லாமல் மண்டபத்திற்கு அதிக பணமும் செலுத்த வேண்டி இருந்தது. ஒரு வழியாகத் திருமண நாள் நெருங்கிய போது,
ஏற்கனவே நந்தகோபால் கேட்டிருந்த மற்ற மண்டபங்களில் இருந்து போன் செய்திருந்தார்கள்.
” சார் எங்க மண்டபத்துல கல்யாணம் பண்ணுங்க. நீங்க கேட்ட தேதி ஃப்ரீயா இருக்கு ” என்று சொல்ல
“இல்ல சார். வேற மண்டபம் புக் பண்ணிட்டோம் “என்றான் நந்தகோபாலன்.
இப்படியாக ஐந்தாறு மண்டபங்களில் இருந்து போன் செய்ததற்கு ஏற்கனவே பதிவு செய்ததைப் பதிலாகச் சொன்னான் நந்த கோபாலன்.
‘முன்பு கேட்கும் போது முன்பதிவு செய்வதாக சொன்னார்கள் ‘ இப்போது ஏன் திருமண மண்டபம் ஃப்ரீயாக இருக்கிறது? என்று சொல்கிறார்கள் என்று நந்தகோபாலுக்கு விளங்காமல் இருந்தது.
அப்பாேது, நந்தகோபாலைத் தோள் தொட்ட ஒரு பெரியவர்.
” தம்பி இதெல்லாம் ஒரு பிசினஸ் தந்திரம். இந்தத் தேதியில முகூர்த்தம் வரும்னு தெரியும். இந்த ராசிக்காரங்க இந்த நேரத்தில தான் கல்யாணம் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு ஏற்கனவே முன்பதிவு செஞ்சது மாதிரி இந்தக் கல்யாண மண்டபக்காரங்க ஒரு மாயைய கிரியேட் பண்ணுவாங்க. அப்படி கிரியேட் பண்ணி வேற தேதியில வச்சுக்கச் சொல்லுவாங்க. ஆனா நீங்க முடிவு பண்ணி இருக்குற தேதில வைக்கணும்னா, அதுக்கு கல்யாணம் பண்றதுல இருந்து பந்தியில எல எடுக்கிறது வரைக்கும் அவங்களுக்கு நீங்க பிசினஸ் கொடுத்தா, அந்தத் தேதிய உங்களுக்கு கொடுத்துடுவாங்க. இல்லன்னா கடைசி வரைக்கும் அந்தத் தேதிய பிளாக் பண்ணி வச்சுட்டு அதிக வசூல் பண்ணுவாங்க .இதுதான் இப்ப நிறைய
மண்டபங்கள்ல நடந்துகிட்டு இருக்கு ” என்று அவர் சொன்ன போதுதான் அந்தச் சூட்சுமம் நந்த காேபாலுக்குப் புரிந்தது..
நந்த காேபாலின் திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டது. அதற்குப் பிந்தைய தேதியில் உள்ள முகூர்த்தத் தேதியைச் சிலர் கேட்டு வந்தார்கள். அந்தத் தேதியில் . மண்டபம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டதாகச் சொன்னார்கள் திருமண மண்டபத்தார்கள்.
இதைக் கேட்டதும் நந்த காேபாலுக்குக் கோபம் அதிகமானது.