வைஷ்ணவி ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தாள். படித்ததெல்லாம் அமெரிக்காவில் தான். ஒரு ரிசர்ச் வேலைக்காக சென்னை வந்தாள். வேலை அவ்வளவு சீக்கிரம் முடியவில்லை. வைஷ்ணவிக்கும் சென்னை வாழ்க்கை பிடித்து விட்டது. சென்னையிலேயே ஒரு வேலையும் தேடிக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். சமையல் வேலை தான் செய்ய நேரம் ஒத்துப் போகவில்லை. சமையல் செய்ய ஆள் தேவை என்று ஒரு விளம்பரம் கொடுத்தாள் ஒரு பத்திரிகையில்.
ஒரு காலைப்பொழுது வெளியே ஒரு மூதாட்டி கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து வெளியே பார்த்தாள்.
70 வயது பாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். வைஷ்ணவி பாட்டியிடம் விசாரித்தபோது அவள் சொன்னாள் தான் சமையல் வேலை விளம்பரத்தைப் பார்த்து வந்ததாகச் சொன்னாள்.
வைஷ்ணவியும் தனக்குத்தான் சாப்பாடு தயாரிக்க வேண்டும் என்று சொன்னாள்.
பாட்டியின் பெயர் சிவகாமி என்று கூறினாள். சம்பளமும் அதிகம் கேட்கவில்லை. வைஷ்ணவி பாட்டியை வேலைக்குச் சேர்த்துக் கொண்டாள்.
சிவகாமி இதர வேலைகளையும் செய்தாள். ருசிகரமான குழம்புகள் செய்ததோடு சிறு நொறுக்குத் தீனியும் செய்து கொடுப்பாள்.
சிவகாமி மதுரைக்குப் பக்கம் ஒரு சிறிய கிராமம் தன்னுடைய ஊர் என்றாள். கணவர் சமீபத்தில் இறந்து விட்டதும் தன் தனிமையை போக்கவே வேலைக்குச் சேர்ந்ததாகச் சொன்னாள்.
வேண்டிய உதவிகளை வைஷ்ணவியும் செய்தாள். சுமூகமாகவே நாட்கள் நகர்ந்தன. வைஷ்ணவியும் தன் தந்தை சில தினங்களில் அமெரிக்காவிலிருந்து வரப் போவதாகச் சொன்னாள்.
சிவகாமி பக்கத்தில் உள்ள கோவிலுக்கு போய் வருவதாகச் சொல்லிவிட்டு கிளம்பினாள். அந்த சமயம் வைஷ்ணவியின் அப்பா ஜெயராமன் வந்தான். மதிய உணவு நேரமானதால் சாப்பாடு எடுத்து வைத்தாள். அப்போது ஜெயராமன் சொன்னான் ‘‘இது அப்படியே தன் அம்மா செய்தது போல் அதே கைப்பக்குமாக உள்ளது’’ என்றான்.
வைஷ்ணவி சொன்னாள்: இது தன் புதிய சமையல்கார அம்மா செய்தது என்று.
சிறிது நேரத்தில் ஒரு ரவா லட்டு கொடுத்தாள். சாப்பிட்டுப் பார்த்த ஜெயராமன் இதுவும் தன் அம்மாவின் கைப்பக்குவமாகவே உள்ளதே என்றான்.
ரவா லட்டிற்கு எல்லோரும் முந்திரி தான் போடுவார்கள் என் அம்மா மட்டுமே கிசுமிஸ் பழம் அதிகம் சேர்ப்பாள். அது தனிச்சுவை கொடுக்கும். இந்த ரவா லட்டிலும் கிஸ்மிஸ் பழமே உள்ளதே என்றான் ஜெயராமன்.
சிறிது நேரத்தில் சிவகாமி அம்மாள் வந்து விட்டாள். உள்ளே நுழைந்ததும் ஜெயராமனைப் பார்த்து விட்டாள். என்னடா ஜெயராமா இங்கு எப்போது வந்தாய்? இது நான் வேலை செய்யும் வீடாயிற்றே என்று சொன்னாள். ஜெயராமனுக்கு அதிர்ச்சி .
என் அம்மா ஊரில் அல்லவா இருந்தாள். எப்பொழுது வீட்டு வேலை செய்ய வந்தாள் என்று நினைத்தான்.
ஜெயராமன் கிராமத்தில் தான் படித்து வந்தான். படிப்பில் அதிக சூட்டிகை. அவனுக்கு பெரிய கல்லூரியில் என்ஜினீயர் படிப்புக்கு இடம் கிடைத்தது. உடனே சென்று அக்கல்லூரியிலே சேர்ந்து படித்தான். மேற்படிப்பும் அக்கல்லூரியிலேயே படித்தான். லீவுக்கு மட்டும் வருவான். எப்போதாவது பணம் கேட்பான். உடனே அனுப்பி விடுவார்கள். நல்ல வேலையும் கிடைத்து விட்டதாகச் சொன்னான். சில சமயம் பணமும் அனுப்புவான். திடீரென ஒரு நாள் தன்னுடைய வேலை பார்க்கும் மதுமிதாவை காதலிப்பதாகவும் அவளையே திருமணம் செய்யப் போவதாகவும் சொன்னான். ஒரு நாள் திருமண அழைப்பிதழ் வந்தது. சிவகாமியும் தன் கணவருடன் கல்யாணத்திற்கு போனார்கள். மண்டபமே ஜொலித்தது அலங்கார விளக்குகளால் மிகவும் ஆடம்பரமாகவே திருமணம் நடந்தது. மறுநாளே கணவனும் மனைவியும் கிராமத்திற்கு திரும்பி விட்டனர்.
ஜெயராமனுக்கும் மதுமதிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாகத் தந்தைக்கு தகவல் கொடுத்தான். அக்குழந்தை தான் வைஷ்ணவி. பாட்டியிடம் பேசி அறியா பேத்தியும் பேத்தி முகத்தை பார்த்து அறியாத பாட்டியும் திகைத்து நின்றனர்.
இனிமேல் காலங்கள் இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டனர். அத்தை, மாமா, பெரியப்பா, சித்தப்பா என்பதெல்லாம் இனிமேல் கதைகளில் மட்டுமே வரும், பாட்டியை சமையல்காரியாக நடத்தியதற்கு வைஷ்ணவி மிகவும் வருத்தப்பட்டாள்.
இனிமேல் என்னை விட்டுப் போகக்கூடாது என்று வைஷ்ணவி பாட்டியை அணைத்துக் கொண்டாள்.