சிறுகதை

முகமூடி வேட்டை |வெ.இராம்குமார்

நடுநிசியில் அந்த தெரு பங்களாவின் பின்புறமுள்ள மதில்சுவர் மேலே ஏறிகுதித்து இரு முகமூடி உருவங்கள் பின்புற வாசலுக்கு வந்தனர்..அவர்கள் பதட்டமின்றி இருந்தார்கள்..

அதில் ஒருவன் தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து வாசல் கதவை திறந்து உள்ளே நுழைய.. மற்ற உருவமும் அவனை பின்தொடர்ந்து நுழைந்தது..

“ஏம்ப்பா!ஒரே இருட்டா இருக்கு. செல்போன் டார்ச் அடிக்கவா?

“வேணாம் .அது பிரச்சனையாயிடும். நமக்குத்தான் வீட்டோட அமைப்பே அத்துப்படியாச்சே! என்னை ஃபாலோ செஞ்சா மட்டும் போதும்..”

“சரிப்பா!

இருவரும் கீழேயிருந்த படுக்கையறையிலுள்ள பீரோ அருகே வந்தனர். தான் கொண்டு வந்த சாவியால் லாவகமாக பீரோவை திறந்தவன், உள் லாக்கரிலிருந்த பணம், நகைகளை தான் கொண்டுவந்த பேக்கில் போட்டுவிட்டு,பீரோவை மூடி, நடக்க ஆரம்பித்தான். அப்போது அய்யோ.. அம்மா.. என் காலு போச்சே.. என்ற பெண் குரல் கேட்டு, திருட வந்த ஒரு உருவமும் கத்த.. மறுவினாடியே அந்த அறையின் லைட் வெளிச்சம் மின்னியது..

அய்யோ முகமூடி திருடன்.. என ஒரு பெண்மணி கத்தவும்..

“கத்தாம பேசாமல் இரும்மா.. நான் பார்த்துக்கறேன் என்றது இளம்பெண்ணின் குரல்..

டேய்!திருடத்தானே வந்தீங்க?

இரு முகமூடிகளின் முகத்திலும் இப்போது அதிர்ச்சி ரேகைகள்.. பயத்தை வெளிக்காட்டாமல், இ..இல்லை என்றார்கள் கோரஸாக..

“அப்படின்னா, அந்த பேக்கை எங்கிட்டே கொடுங்க?

“முடியாது.. என்றதும்தான் தாமதம்.. அந்த இளம்பெண் சற்றும் தாமதிக்காமல், அவர்கள் இருவரிடமும் தனது கராத்தே தாக்குதலை மேற்கொள்ள.. அடித்த அடியில் வலிதாங்க முடியாமல் இருவரும்

அய்யோ, அம்மா என அலறினார்கள்..

“”ஏய் ஜானகி! நிறுத்து.. இந்த குரல்களை எங்கேயோ கேட்ட மாதிரியிருக்குல்லே?

“அட ஆமாம்மா..ஏய்! இருவரும் முகமூடியை கழட்டுங்க!

மேற்கொண்டு அடியை தாங்க முடியாமல், இருவரும் முகமூடியை ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தபடியே கழட்டவும்..

தாயும்,மகளும் அதிர்ந்தபடியே…

.”என்னங்க, நீங்களா?உங்களையும், அப்பாவையுமா நான் அடிச்சேன்?

“சொந்த வீட்ல, யாராவது திருட வருவாங்களா… ஆபிஸ் விஷயமா, போன நீங்க நாளைதானே வர்றதா சொன்னீங்க?’’

“நான் சொல்றேன் அத்தே.. நானும், மாமாவும் வீட்டோட மாப்பிள்ளைங்கறதனால, எங்க செலவுக்கே உங்ககிட்டே கைநீட்டி பணம் வாங்க வேண்டியதாயிருக்கு. அது வெட்கமாயிருக்கறதனால, நீங்க சொன்ன வேலையை முடிச்சிட்டு நைட்டே வந்துட்டோம். திருடினால், அந்த பணத்தை வெச்சு காலம் பூரா செலவுக்கு பிரச்சனை இராதுன்னு நினைச்சுதான் திருட வந்தோம்.. கடைசியில, மாமா அத்தையோட காலை மிதிச்சதனால மாட்டிகிட்டோம்!

“அம்மா! வழக்கமா மாடியில படுக்கற நாம, ஏசி ரிப்பேரானதால, கீழே படுக்க வந்தது நல்லதாப் போச்சு.. வீட்டோட மாப்பிள்ளையா வர்றதற்கு முன்னாடி தன்மானத்தை பற்றி யோசித்திருக்கணும்.. இப்போ இவங்களை என்ன பண்ணலாம்மா?

“ஏற்கனவே நீ அடிச்ச அடியில மூணு மாசம் எந்திரிக்கமாட்டாங்கடி.பாவம்! விட்டுடுடி பிழைச்சுட்டு போகட்டும். வேணுமின்னா, இரண்டுவேளை சாப்பாட்டை நிறுத்திடலாம். என்ன சொல்றே?

“அதுவும் நல்ல ஐடியாதான்ம்மா..ம்.. பேக்கை கொடுத்துட்டு மாடியிலப் போய் படுங்க..”

“பதிலேதும் பேசாமல், இருவரும் தோள் மீது கை போட்டபடியே.. நொண்டியடித்தபடி நடந்தார்கள்..மாமா! இந்த திருட்டு அனுபவத்துல நான் ஒரு விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன்..”

“என்ன மாப்பிள்ளை அது?

“வியாபாரத்துல மட்டுமல்ல, திருடறதற்கும் யாரையும் துணைக்கு சேர்க்கக் கூடாதுன்னுதான்.. உங்க பொண்ணுக்கு கராத்தே தெரியும்ன்னு இதுவரைக்கும் ஏன் யாருமே சொல்லவேயில்லை?

“அது எனக்கே இப்பத்தான் தெரியும் மாப்ளே.. அதை தெரிஞ்சிட்டு இப்போ என்ன பண்ணப்போறீங்க?

“திருடறதற்கு மாஸ்டர் ப்ளானே போட்டிருக்கமாட்டேன் மாமா.. என அழுதான் மதன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *