செய்திகள் வாழ்வியல்

முகத்தைத் தொடாதே! தொடாதே!!

‘‘கொரோனா’’ (கோவிட் 19) தொற்று நோயின் பாதிப்பினால், இந்தத் தெருவில் ஒருவர் இறந்துவிட்டார், அந்த ஊரில் ஒருவர் இறந்துவிட்டார்,’’ என்ற செய்திகளைப் பார்க்கும் போதும், படிக்கும் போதும், கேட்கும் போதும்,’ கொரோனா தொற்று நோயிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து நீங்கள் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

‘கண், மூக்கு, வாய் வழியாக கொரோனா தொற்று நோய் வைரஸ் கிருமி உடலினுள் புகுந்து பாதிப்பை உண்டாக்குகிறது. அதனால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக முகக்கவசம் (MASK) அணிய வேண்டும்’ என்று எல்லாப் பக்கமும் எச்சரிக்கை விடப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிலுள்ள ‘நியூ செளத் வேல்ஸ்’ பல்கலைக்கழகத்தில் படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது ஒரு நாளில் எத்தனை முறை ஒருவர் தனது முகம், கண், மூக்கு, வாய் முதலியவற்றைத் தொடுகிறார் என்று கண்காணிக்கப்பட்டது. இதன் முடிவு என்னவென்று பாருங்கள்.

ஒரு நாளைக்கு ஒருவர் சாதாரணமாக தன்னை அறியாமல், தனக்குத் தெரியாமல், சுமார் 20–லிருந்து 25 தடவை முகம், கண், மூக்கு, வாய் ஆகியவற்றைத் தொடுகிறாராம். இதில் சுமார் 44 சதவீதம், முகத்தில் ‘மெல்லிய சளி சவ்வு’ (MUCOUS MEMBRANE) உள்ள பகுதிகளாகிய கண், மூக்கு, வாய் ஆகியவற்றின் வெளிப் பகுதியைத் தொடுகிறார்களாம். கண், மூக்கு, வாய் ஆகியவற்றின் வெளிப்பகுதியானது உடலின் உள்பகுதிக்கு நேரடி தொடர்புடையவைகளாகும். (மூக்கில் ஏதாவது நெடி ஏறினால், மூளைக்குப் போய் உடனே தும்மலைத் தொடர்ந்து வரவைத்து விடுகிறது. அவசர நேரத்தில் வாயில் நாக்குக்குக் கீழ் குளுகோஸ், சர்க்கரை, மாத்திரை முதலிய ஏதாவதொன்றினை வைத்தால், அது உடனே கரைந்து ரத்தத்தில் கலந்து பிரச்சனையை சரி பண்ணி விடுகிறது).

சுமார் 56 சதவீதம் பேர் கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிகள் போக முகத்தில் மீதியுள்ள பாகத்தைத் தொடுகிறார்களாம். சுமார் 36 சதவீதம் பேர் வாயையும், 31 சதவீதம் பேர் மூக்கையும், 27 சதவீதம் பேர் கண்ணையும், 6 சதவீதம் எல்லாவற்றையும் மாற்றி மாற்றி சேர்த்துத் தொடுகிறார்களாம். கையை அடிக்கடி கழுவுங்கள் என்று திரும்பத் திரும்ப சொன்னாலும், கையை கழுவுவதை விட, கண், மூக்கு, வாயைத் தொடுவது தான் அதிகமாக நடக்கிறதாம்.

தேவையில்லாமல் கண்களிடம் கைகள் போகாது

உங்கள் முகத்தின் பல பாகங்களை நீங்கள் அடிக்கடி தொடுவது என்பது ஒரு இயற்கையான செயலே. ஒவ்வொரு நாளும் நாம் பலமுறை நம் முகத்தை தொடுகிறோம். ஆனால் இதை நாம் கணக்கில் வைத்துக் கொள்வதில்லை. அதிலும் குறிப்பாக வாயையும், மூக்கையும் தொடுவது என்பது எல்லோரும் தினமும் செய்யும் ஒரு சாதாரணமானவையாகும். கண்களை நிறைய பேர் தேவையில்லாமல் அதிகமாக தொட மாட்டார்கள். கண்ணில் தூசி ஏதாவது விழுந்தாலோ, கண்ணில் அரிப்பு, நமைச்சல் எடுத்தாலோ, கண்கள் கிட்டே கைகள் போகும். தேவையில்லாமல் கண்களிடம் கைகள் போகாது.

அதே ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். நாம், நம் தலைமுடியை ஒரு மணி நேரத்தில் சுமார் 4 அல்லது 5 முறை தொடுகிறோமாம். தொட்டுக் கொண்டிருக்கும் நேரமும் சுமார் பத்து வினாடிகளுக்குள் இருக்குமாம். கண்களை ஒரு மணி நேரத்தில் சுமார் 2 அல்லது 3 முறைதான் தொடுகிறோமாம். அதுவும் ஒரே ஒரு வினாடி தான். அதற்கு மேல் கண்ணில் கை வைத்துக் கொண்டிருக்க முடியாது. காதுகளை ஒரு மணி நேரத்தில் சுமார் 1 அல்லது 2 முறை தான் தொடுவோமாம். காதுகளையும் அடிக்கடி தொட வேண்டிய அவசியம் இல்லை. மூக்கை பொருத்தவரை அடிக்கடி தொடவும், தடவவும் வாய்ப்பிருக்கிறது.

மூக்கை ஒரு மணி நேரத்தில் சுமார் 3 லிருந்து 5 முறை தொடுவோமாம். கன்னத்திலேயே எப்பொழுதும் சில பேர் கையை வைத்துக் கொண்டிருப்பார்கள். ‘‘என்னப்பா, கப்பல் கவிழ்ந்துவிட்டதா, கன்னத்தில் கையை வச்சுகிட்டு இருக்கே’’ என்று சிலர் கேட்பதுண்டு. கவலை என்று வந்துவிட்டால் கைகளுக்கு கன்னம் தான் உதவிக்கரம். ஒரு மணி நேரத்தில் சுமார் 6 முறையாவது கன்னத்தை நாம் தொட்டு விடுகிறோம். முகத்தின் மற்ற எல்லாப் பாகங்களையும் விட, கன்னத்தை தொட்டுக் கொண்டிருக்கும் நேரமும் அதிகமே. கழுத்தைப் பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் ஒரு முறை தொடுவதென்பதே அதிகம். ஆனால் கழுத்தை தொட்டுவிட்டால், சுமார் பத்து விநாடிகள் கூட கழுத்தில் கையை வைத்து தேய்த்துக் கொண்டிருப்போம்.

கன்னத்தைப் போல் தாடையையும்

தாடையைப் பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் சுமார் 4 அல்லது 5 முறை தொட்டு தடவிக் கொடுக்க வாய்ப்பு அதிகம். கன்னத்தைப் போல் தாடையையும் நாம் அதிக நேரம் தொட்டுத் தடவிக் கொண்டிருப்போம்.

அரிப்பெடுக்கும் மூக்கு, எரிச்சலூட்டும் கண்கள், அடிக்கடி துடைக்க வேண்டிய வாய் முதலியவற்றை உங்களது உள்ளங்கையை வைத்தோ, விரல்களை வைத்தோ, உள்ளங்கையின் பின் பக்கத்தை வைத்தோ, நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்த விநாடியே தொட்டுக் கொள்கிறோம். துடைத்துக் கொள்கிறோம். இதைச் செய்யும் போது வைரஸ் கிருமிகள் உள்ள இடத்தையும் கையால் தொட்டு, வாய் மூலமாக உடலுக்கு உள்ளே அனுப்பி விடுகிறோம்.

மூக்கு, வாய் இவை இரண்டும் மிகச் சுலபமாக நோய்க் கிருமிகள் உடலுக்கு உள்ளோ போக வழியுள்ளவைகளாகும். உதாரணத்திற்கு ஒரு கதவின் கைப் பிடியை தொட்டு கதவைத் திறந்துவிட்டு, உடனே நம்மை அறியாமல் முகத்தை தொட்டு விடுவோம். கையை நன்றாகக் கழுவி விட்டுத் தான் முகத்தில் கையை வைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் நமக்கு அந்த நேரத்தில் வருவதில்லை.

தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே…

முகத்தை அடிக்கடி தொடுவது, தடவுவது என்பது, தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே, செய்யப்படும் ஒரு காரியமாகும். பிறந்தவுடன் கைவிரலை வாயில் வைத்து சூப்ப ஆரம்பித்த சில குழந்தைகள் பெரிய மனிதர் ஆகியும், கைவிரல் சூப்புவதை நிறுத்த முடியாமல் தவிப்பவர்கள் சிலரை நாம் கண்கூடாக பார்த்திருக்கவும் செய்கிறோம்.

1) கையை முகத்துக்கு அருகே தேவையில்லாமல் கொண்டு செல்லாதீர்கள். 2) முகத்தை கைகளால் தொடக்கூடாது, என்று உங்கள் முன்னால் பெரிதாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

3) உங்கள் கைகள் இரண்டுக்கும் ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருங்கள். 4) கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு, முகத்தில் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். 5) நான் என் முகத்தை தொடுவதற்கு முன்னால், என் கைகளை நன்றாகக் கழுவிவிட்டேன் என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். 6) ‘‘நீ மாஸ்க் அணிவது எனக்கு பாதுகாப்பு, நான் மாஸ்க் அணிவது உனக்கு பாதுகாப்பு என்பதை நீங்கள் தினமும் சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் சொல்லுங்கள்.

இதையெல்லாம் மீறி நீங்கள் உங்கள் முகத்தை கைகளால் அடிக்கடி தொட்டுக் கொண்டு தான் இருக்கிறீர்கள் என்றால், வேறு வழியே இல்லை. கையுறையை அணிந்து கொள்ளுங்கள்.

இந்த கொரோனா தொற்று நோய் காலத்தில் மட்டும் கண், மூக்கு, வாய், முகம் முதலியவற்றை தொடுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றில்லாமல், எப்பொழுதுமே தேவையில்லாமல் சுத்தமில்லாமல், கைகளை கழுவாமல் முகத்தைத் தொடுவதை தவிருங்கள்.

-:டாக்டர்.எஸ்.அமுதகுமார் (பொது மற்றும் குடும்பநல மருத்துவர்):-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *