செய்திகள் வாழ்வியல்

முகத்தில் முகம் பார்க்க(லாம்) கூடாது!

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் வடகோடியில் பொன்னேரிக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து அந்த 76 வயது நிரம்பிய பெரியவர் என்னிடம் நோயாளியாக வந்தார். அவரது உடலை ஒவ்வொரு பகுதியாக பரிசோதித்துக் கொண்டு வந்தேன்.

ஸ்டெதாஸ் கோப் வைத்து நெஞ்சுப்பகுதியை பரிசோதிக்கும் நேரத்தில் அந்த பெரியவர் தோளில் போட்டிருந்த துண்டை வைத்து வாயையும் மூக்கையும் நன்றாக மூடிக்கொண்டு தனது தலை முழுவதையும் தனது இடது தோள் பக்கம் முழுவதுமாக திருப்பிக் கொண்டார்.

நெஞ்சின் இடது பக்கத்தைப் பரிசோதிக்கும்போது முகத்தை முழுவதுமாக வலது தோள் பக்கம் திருப்பிக் கொண்டார். நெஞ்சின் வலது பக்கத்தை பரிசோதிக்கும்போது முகத்தை முழுவதுமாக இடது தோள் பக்கம் திருப்பிக் கொண்டார்.

இப்படி நான் நெஞ்சுப் பகுதியைப் பரிசோதித்து முடிக்கும் வரை, அவரது முகத்தை முழுவதுமாக இடது அல்லது வலது பக்கம்தான் திருப்பிக் கொண்டிருந்தாரே தவிர என் முகத்துக்கு நேராக அவர் முகத்தைக் காட்டிப் பார்க்கவே இல்லை. மேலும் நான் அவரை நெஞ்சை எப்பொழுதெல்லாம் ஸ்டெதாஸ் கோப் வைத்துப் பார்க்கிறேனோ, அப்பொழுது எல்லாம் அவரது முகத்தை மட்டும் திருப்புவதோடு அல்லாமல் தோளில் போட்டிருக்கும் துண்டை வைத்து மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு தான் பேசுவார்.

முழுக்க முழுக்க கிராமத்தில் வளர்ந்த படிப்பு அதிகமில்லாத முழுநேர விவசாயம் செய்யக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெரியவர் இப்படிச் செய்வதைப் பார்த்ததும் எனக்கு அதிசயமும் ஆச்சரியமும் ஏற்பட்டது.

நன்கு படித்தவர்கள் நகரத்தில் வாழ்பவர்கள் நாலு விஷயம் தெரிந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர், மருத்துவமனையில் டாக்டர் அவர்களது நெஞ்சை ஸ்டெதாஸ் கோப் வைத்துப் பார்க்கும்போது டாக்டர் முகத்துக்கு நேராக அவர்களது முகத்தை வைத்துக்கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் மூச்சு விடுவார்கள். சிலர் மூச்சு க் காற்றில் துர்நாற்றம் இருக்காது. சிலர் மூச்சு மிகவும் துர்நாற்றம் ஆக இருக்கும். (வாய் சுத்தம் இல்லை என்றால் இப்படித்தான்). இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு தான் டாக்டர் நோயாளிகளைப் பரிசோதிப்பது உண்டு.

இந்த மாதிரி சங்கடம் டாக்டருக்கு ஏற்படக் கூடாதே என்பதை மனதில் வைத்து தான் படிப்பில்லாத அந்த கிராமத்துப் பெரியவர் டாக்டர் முகத்துக்கு நேராக முகத்தை வைக்காமல் தலையை முழுவதுமாக பக்கவாட்டில் திருப்பித் துண்டை வைத்துத் தன் வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு மூச்சை இழுத்து விட்டு டாக்டர் பரிசோதிப்பதற்கு சவுகரியத்தை பண்ணிக் கொடுக்கிறார். இந்த அற்புதமான செயலை அந்தப் பெரியவரிடம் பார்த்து நான் அசந்து போனேன்.

இதோடு நிற்காமல், அவரது 46 வயது மகனும் அதே மாதிரி பண்ணுவதை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். இப்போது அந்த பெரியவரின் 11 வயது பேரன் என்னிடம் வருகிறான். அவனது அப்பாவும் தாத்தாவும் பண்ணுவது போலவே அவனும் கர்ச்சீப்பை வைத்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு தலையை முழுவதுமாக திருப்பி, எனக்கு நெஞ்சை காட்டுகிறான் அசந்து போனேன்.

இப்பொழுது ‘கோவிட் 19’ தொற்றுநோய் பரவாமல் இருக்க அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க எல்லோரும் முகக்கவசத்தை அணிவதைப் பார்க்கும் போது, கொரோனா நோய் எல்லாம் இல்லாத அந்தக் காலத்திலேயே, அந்த கிராமத்து விவசாயப் பெரியவர், கடைபிடித்த அந்த நல்ல விஷயம் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பாகவும் மிகுந்த ஆச்சரியமாகவும் இருந்தது.

இப்படித் ‘தலை முழுவதையும் திருப்பிக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சுவாசப் பெருமூச்சு டாக்டரின் முகத்தில் படாது. அதனால் நோய் எதுவும் பரவாது’ என்பதை யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தது? எந்த வயதிலிருந்து நீங்கள் இதை செய்கிறீர்கள்? என்று நான் கேட்டேன்.

அதற்கு அந்தப் பெரியவர் சொன்னார் : ‘‘நான் சிறிய வயதாக இருக்கும்போது அதாவது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு பல் வலியால் துடித்துக் கொண்டிருந்த எங்கள் கிராமத்துப் பெரியவர் ஒருவரின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து அவரது வாயின் உட்பக்கத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அவர் வாய் மூச்சுக் காற்றோடு சேர்ந்து வந்த கெட்ட வாடை எனக்கு மயக்கத்தையே வரவைத்துவிட்டது. மேலும் எனக்கு அடுத்த நாளிலிருந்து 4 நாட்கள் காய்ச்சல் வேறு வந்துவிட்டது. அந்த பெரியவரின் வாயை பரிசோதிக்கும் போது அவர் விட்ட மூச்சுக்காற்று தானே நமக்கு காய்ச்சலை ஏற்படுத்தியது.

அதே மாதிரி நாம் விடுகிற மூச்சுக்காற்றும் அடுத்தவர்களுக்கு நோயையும் கெட்ட வாடையினால் முகச்சுளிப்பையும் உண்டு பண்ணிவிடக்கூடாது அல்லவா! அன்று அந்த சிறிய வயதில் நானாக எடுத்த முடிவு தான் இது. யாரும் எனக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. என்னை பார்த்து என் மகனும் எங்களை பார்த்து என் பேரனும் அவனாகவே செய்ய ஆரம்பித்து விட்டான்.

நாங்கள் இப்படி பண்ணுவதை பார்த்து எங்கள் ஊரிலும் நிறையபேர் இப்படி பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்போது டிவியிலும் ரேடியோவிலும் தொற்றுநோய் பரவாமல் இருக்க கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்’ என்ற விளம்பரங்கள் வரும் போதெல்லாம் என் பேரன், ‘எங்கள் தாத்தா அந்த காலத்திலேயே இதைச் செய்ய ஆரம்பித்து விட்டாரே’ என்று சந்தோஷமாக சொல்கிறான்.

நல்லது தானே! தப்பில்லையே டாக்டர்’ என்றார் அந்த பெரியவர்.

எத்தனை பெரிய மனிதர் அவர், எத்தனை பெரிய அனுபவ அறிவு பெற்றவர் அவர், எண்ணி எண்ணி வியக்கிறேன்.

  • கலைமாமணி டாக்டர் எஸ். அமுதகுமார்(பொது மற்றும் குடும்ப நல மருத்துவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *