சினிமா செய்திகள்

முகக் கவசம் போட்டுக் கொண்டு டப்பிங் பேசினார் சின்னி ஜெயந்த்!

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்துக்கு

முகக் கவசம் போட்டுக் கொண்டு டப்பிங் பேசினார் சின்னி ஜெயந்த்!

‘கோவிட் காந்த்’ பெயரில் அடுத்த கதை ரெடி

 

‘உயிர்க்கொல்லி’ கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அவரவர்கள் வீடுகளில் முடங்கி இருக்கக்கூடிய நெருக்கடிநில ஏற்பட்டது நினைவிருக்கலாம். இப்போது நான்காவது கட்டத்தில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சகஜ நிலை ஓரளவுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு ஆகியவற்றுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் பட அதிபர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் மீண்டும் அரசின் விதிகளுக்கு ஏற்ப பணிகளை துவக்கி இருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம்: யாதும் ஊரே யாவரும் கேளீர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நகைச்சுவை – குணச்சித்திர நடிகர் சின்னி ஜெயந்த் நடித்திருக்கிறார். படத்தில் இவர் வரும காட்சிகளுக்கான வசனத்தை‘மாஸ்க்’ (முகக்கவசம்) அணிந்தபடியே பேசி முடித்து பாராட்டைப் பெற்றிருக்கிறார். முகக்கவசம் அணிந்து டப்பிங் பேசுவது மிகவும் சிரமம்.

கண்கள் வெள்ளித் திரையை பார்க்க வேண்டும் நடித்திருக்கும் காட்சிகளை திரையில் ஒளிபரப்பும் போது. இழுத்து விடும் மூச்சை மைக்கு கீழே அதன் சத்தம் கேட்காத அளவுக்கு குனிந்து வெளியே விட வேண்டும். பேசும் வசனம் மைக் முன் நின்று பேசப்பட வேண்டும் காட்சி்க்கு உரிய ஏற்ற இறக்கத்தோடு. முகக் கவசம் அணிவதற்கு முன்னால் வார்த்தைகளின் சத்தம்– உச்சரிப்பு

எந்த அளவுக்கு இருக்குமோ, அதே அளவுக்கு உச்சரிப்பு– சத்தம் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்ளவேண்டும். இது அனுபவ முதிர்ச்சியில் வரக்கூடியது என்று அனுபவம் பேசினார் சின்னி ஜெயந்த். அவரது இந்த முயற்சியை சக நடிகர்களும் – தொழில் நுட்பக் கலைஞர்களும் பாராட்டினார்கள்.

ஊரடங்கு நாட்களில் வெளியே வர முடியாத சூழ்நிலை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிர்பந்தம். நேரத்தை வெட்டியாக கழிக்காமல் உருப்படியாக செலவிட்டு இருக்கிறேன்.

‘கோவிட் காந்த்’ என்னும் தலைப்பில் ‘உயிர்க்கொல்லி’ கொரோனாவை பின்புலமாக வைத்து ஒரு ஆக்ஷன் பார்முலா திரைக் கதையை எழுதியிருக்கிறேன். இதே போல திரும்பி வா என்னும் தலைப்பில் ஒரு கதையையும், இன்னொரு கதையையும் உருவாக்கியிருக்கிறேன். மொத்தம் 3 படத்துக்கான ஸ்க்ரிப்ட் தயார். வெற்றிப்பாதை என்னும் பெயரில் என்னுடைய சுயசரிதையையும் எழுதி இருக்கிறேன் இதை விரைவில் புத்தகமாக வெளியிடவும் உத்தேசித்திருக்கிறேன் என்றும் மகிழ்ச்சியோடு கூறினார்.

டைரக்டர் மகேந்திரன் மூலம் திரைக்கு அறிமுகம்

1984 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் –ரேவதி நடித்திருக்கும் கை கொடுக்கும் கை படத்தில் அறிமுகம் ஆனதிலிருந்து இன்றைய தேதி வரை என்னுடைய திரையுலக அனுபவங்களை சொல்லியிருக்கும் புத்தகம் இது என்று மக்கள் குரலுக்கு அளித்த பேட்டியில் சின்னி ஜெயந்த் கூறினார்.

15.6.84ல் வெள்ளித் திரைக்கு வந்த படம். 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. கன்னடத்தில் பிரபல டைரக்டர் புட்டண்ணா எடுத்த ‘கதா சங்கமா’ படத்தில் 3 கதைகள் இடம் பெற்றிருக்கும். அதில் 3–வதாக திரையில் வரும் கதை ‘முனிதாயி’ இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ரஜினி, இதே படத்தை மகேந்திரன் தமிழில் மாற்றி எடுத்த போது கதா நாயகனாக நடித்தார்.

ரேவதி நாயகி. பார்வையற்ற பெண் வேடம். அவரைக் கற்பழித்து விடும் கதாபாத்திரத்தில் (கன்னடத்தில் ரஜினி செய்தது) நான் நடித்தேன். முதல் படமே எனக்கு அழுத்தமாக அங்கீகாரம் தந்தது. அன்று துவக்கியது என் கலைப் பயணம்… என்று மலரும் நினைவுகளையும் வெளியிட்டார் சின்னி ஜெயந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *