அந்தப் பிரதான ஓட்டலில் எப்போதும் நெருக்கடியாகவே இருக்கும். அசைவ உணவு வகைகளில் சிறந்து விளங்கும் அந்த ஓட்டலில் அசைவ உணவிற்கென்றே சிறப்பான மரியாதை இருக்கும். அந்த ஓட்டலில் சாப்பிட்டால் தொண்டைக்கும் நாவுக்குமான சுவை உருண்டு கொண்டிருக்கும் என்று சொல்வார்கள்.
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால் ஓட்டலில் இருந்து அசைவ உணவின் வாசம் நம்ம கூடவே வரும் அந்த அளவிற்கு நம்மை அப்பிக் கொண்ட சுவை நம்மை அகன்று விடாது நிற்கும். அப்படிப்பட்ட அசைவ உணவகத்திற்குள் சுதாகர் குடும்பம் நுழைந்தது. மனைவி, குழந்தைகள் என்று நுழைந்தார்கள். சுதாகர் காலியான இருக்கையில் அமர்ந்து தூரம் பார்த்தபோது அத்தனை பேரும் அசைவ உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்த ஓட்டல் முழுவதும் அப்படி ஒரு சுவை அப்பிக் கிடந்தது.
” நீ என்ன சாப்பிடுற ? என்று சுதாகர் கேட்க
” எனக்கு காடை, மட்டன், சிக்கன் என்று அடுக்கினார்கள் அவர்கள் கேட்டதை எல்லாம் குறித்துக் கொண்ட சிப்பந்தி
சுதாகர் மனைவியைப் பார்த்து
“மேடம் இன்னைக்கி ஸ்பெஷல் ஐட்டம்ஸ் எல்லாம் இருக்கு . மூளை, போட்டி ,லெக் பீஸ் சவர்மா “
என்று அடுக்கினான் அந்தச் சிப்பத்தி .
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள், சுதாகரின் மகள் பூமா.
“உனக்கு என்ன வேணும்?”
என்ற போது எதையோ பார்த்துக் கொண்டு வேண்டாம் என்ற தலை ஆட்டினாள் பூமா.
“பூமா உனக்கு என்ன வேண்டும்?”
என்று கேட்க
“எனக்கு எதுவும் வேண்டாம்”
என்று தலையாட்டினாள்.
சுதாகர் தனக்கு தேவையான எல்லா அசைவ உணவுகளையும் ஆடர் செய்தான்.
” இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க கேட்ட எல்லாமே வந்துரும் “
என்று சொல்லிப் போன சிப்பந்தியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் பூமா
“என்னமா என்ன ஆச்சு ?எதுவும் வேணுமா ? ” என்று சுதாகர் கேட்க
” ஆமா” என்று தலையாட்டினாள்.
” என்ன வேணும் சிக்கன் மட்டன் ஃபிஷ் “
என்று அத்தனை அசைவ உணவுகளையும் சுதாகர் சொல்ல
” எனக்கு எதுவும் வேணாம் .எனக்கு அது வேணும்”
என்று கையை நீட்டினாள் பூமா
” என்ன? எங்க பாத்து கைய நீட்டுறா ?’’
என்று நினைத்த சுதாகர், அவள் கை நீட்டி திசை நோக்கி திரும்பினான்.
அங்கே கண்ணாடித் தொட்டியில் அழகாக நீந்தி கொண்டிருந்தது வளர்ப்பு மீன்.
“அது வளர்ப்பு மீனு. அதப் போயி ஏன் கேக்குற? அதச் சாப்பிட முடியாதே ? “
என்று சுதாகர் சொல்ல
“அதை சாப்பிட வேணாம்ப்பா” எவ்வளவு அழகா அந்தத் தொட்டியில மீன் நீந்திக்கிட்டு இருக்கு .அப்படித்தானே எல்லா உசுருகளும் சந்தோஷமா இருக்கும். அப்படி நீந்திக்கிட்டு இருக்கிற மீன, அழகா விளையாடிட்டு இருக்கிற மீனுகள, நாம சாப்பிடுறது தப்பில்லையா அப்பா. எனக்கு அந்த உயிரோட இருக்கிற மீனு மாதிரி எனக்கு வாங்கி தாப்பா நான் வீட்டில வளக்கணும் “
என்று பூமா சொன்னபோது சுதாகருக்கு மனைவிக்கும் இதயத்தில் இடியாய் இறங்கியது அவள் சொன்ன உயிரின் வலி.
ஆர்டர் செய்த அத்தனை அசைவ உணவுகளையும் தவிர்த்துவிட்டு அந்த உணவகத்திலிருந்து வெளியே நடந்தார்கள்.
” சார் நீங்க ஆர்டர் பண்ணது எல்லாம் வந்துருச்சு. வாங்க சார் சாப்பிட்டுப் போங்க “
என்று சொல்ல
“இல்ல வேண்டாம் “
என்று சொல்லிய சுதாகரைப் பார்த்து
“சார் அப்படின்னா நீங்க ஆர்டர் பண்ணதுக்கு வேஸ்டா போகுமே ” என்று அவன் கொஞ்சம் முறைப்பாகச் சொல்ல
“எனக்குத் தெரியும்”
என்று சொல்லிவிட்டுஆர்டர் செய்த அத்தனை உணவுகளுக்கும் பணத்தைக் கட்டி விட்டு, அந்த அசைவ உணவு விடுதியை விட்டு வெளியே வந்தான்.
” பூமா, நீ கேட்ட வளர்ப்பு மீன் தொட்டியோடு வாங்கித் தாரேன் .நம்ம வீட்டில வளக்கலாம். இனிமே நாம அசைவ உணவு சாப்பிட வேணாம்”
என்று உறுதியோடு சொன்னான் சுதாகர்.
எங்க அப்பா என்று சுதாகரைக் கட்டிக்கொண்டாள் பூமா.
குடும்பமே வளர்ப்பு மீன் விற்கும் கடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.