சிறுகதை

மீன் செதில்கள்.! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

பிசுபிசுக்கும் மீன் வாசனை. சந்தடிகள் நிறைந்த மார்க்கெட். இன்னதென்று தெரியாத மனிதர்களின் குரல். கூட்டமும் கும்பலுமாய் இருந்தது அந்தச் சந்தை. யார் எதை வாங்குகிறார்கள்? எதற்காக நடக்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்று அறிய முடியாத மக்கள். சைவ உணவுப் பொருட்களை வாங்கும் கூட்டம் ஒரு பக்கம் .அசைவ உணவுப் பொருட்களை வாங்கும் கூட்டம் மறுபக்கம் என்று சைவமும் அசைவமும் கலந்த சந்தையாக இருந்தது அந்த இடம்.

முரளிதரன் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடியே சென்று கொண்டிருந்தான். இன்னைக்கு வெள்ளிக்கிழமை சைவம் சாப்பிடலாமா? அசைவம் சாப்பிடலாமா ? என்று அவன் மூளைக்குள் போராட்டம் முகாமிட்டிருந்தது. வீட்டில் கேட்டால் இன்று வெள்ளிக்கிழமை சைவம் தான் சாப்பிட வேண்டும் என்று அக்மார்க்காக அடித்துச் சொல்வார்கள் .அவர்களிடம் கேட்கவேண்டாம் நாம் ஏதாவது ஒன்றை வாங்கி கொண்டு போய் விட்டால் அதைத் தட்டிக் கழிக்க முடியாது .அதைக் குழம்பு வைத்துதான் ஆக வேண்டும் .அதை கீழேயும் தூக்கி எறிய முடியாது விரயமும் செய்ய முடியாது என்று அவர்களுக்கு தெரியும்.

அதனால் அசைவம் வாங்கி விடுவதென்று முடிவு செய்தான் முரளிதரன் . தூரம் நடந்து கொண்டே அத்தனையும் பார்த்தான். ஒரு பக்கம் ஆட்டுக்கறி .இன்னொரு பக்கம் மீன்கள் விதவிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் செதில்கள் ஆங்காங்கே பட்டுத்தெறித்து வைரம் போல மின்னிக் கொண்டிருந்தன. இன்னைக்கு மீன் சாப்பிட்டா என்ன ? அவன் நினைவுகள் மீன்குளத்தில் இறங்கின. சரி அதுவும் நல்லாத்தான் இருக்கும். மீனுங்கிறது கூட ஒரு விதத்தில சைவம் தான். கல்கத்தா மக்கள் கூட கடல் புஷ்பம்னு அதைச் சொல்லுவாங்க.இன்னைக்கு மீன் வாங்கிர வேண்டியதுதான் என்று முடிவு செய்து மீன் கடைக்குச் சென்றான் முரளிதரன்.

நிறையப்பேர் மீனு, மீனு… என்று கூப்பிட்டாலும் எதுவும் அவன் மனதில் ஏறவில்லை. சுற்றிப் பார்த்துச் சென்ற போது, திடீரென்று ஒரு குரல்.

“வாங்க சார். என்ன மீன் வேணும்? என்று மீன்களின் பெயர் வகையை அடுக்கினாள் ரதி. மீன் விற்பவள். அவள் இரு கண்களும் கெண்டை மீன்கள் போல் துள்ளி குதிப்பதைப் போல் கற்பனை செய்தான் முரளிதரன்.

அவள் கழுத்து, மார்பை ஒட்டிய இடம், இடுப்புப் பகுதிகளில் எல்லாம் மீன் செதில்கள் ஆங்காங்கே ஒட்டி இருந்தன. அவளிடம் பெண் வாசனை போய் மீன் வாசனை அடிப்பதை முரளிதரனால் உணர முடிந்தது. அவ்வளவு அழகாக இருந்தாள், ரதி. லாவகமாக அவள் அமர்ந்து பேசும் அழகு, மீன் முள் தொண்டையில் சிக்கிக் கொண்டு அவஸ்தை செய்வது போல் திணறினான். இந்த மீன் அங்காடிக்குள் இவ்வளவு பெரிய அழகியா? ஆங்காங்கே அவள் மேனியெங்கும் ஒட்டியிருந்த மீன் செதில்களை பார்த்தான். அவனுக்குள் ஒரு கிறக்கம் ஏற்பட்டது . மீன் வாங்குவதை விட அவள் உடம்பில் ஒட்டியிருக்கிற அந்த செதில்கள வாங்கிட்டு போலாம் போல ” என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை மறுபடியும் உசுப்பினாள் ரதி.

” என்ன சார் பார்த்துகிட்டே இருக்கீங்க. என்ன மீன் வேணும்? என்று அவள் மறுபடியும் சொல்ல அவன் பார்வை முழுவதும் தலை முதல் கால் வரை அவளையே அளவெடுத்துக் கொண்டிருந்தது.

” உயிரோடு இருக்கிற இந்த மீன வாங்கிட்டுப் போயி உரசி சமைச்சா எப்படி இருக்கும்? “

என்று உள்ளுக்குள் உற்சாகம் அவனுக்குள் கரை புரண்டு ஓடியது

” எனக்கு என்ன வேணும்னு நீங்களே சொல்லுங்க “

என்று அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான் முரளிதரன்.

“இங்க இருக்கிற எல்லா மீனும் நல்ல மீனு தான் சார் .உங்களுக்கு என்ன மீன்

வேணும் ? என்று ஒவ்வொரு பெயராகச் சொன்னாள் ரதி . அத்தனையும் தன் காதில் கேட்டுக் கொண்டு இதயத்திற்குள் இறக்கினான் முரளிதரன்.

” எனக்கு உயிருள்ள மீனு வேணும் கிடைக்குமா ?

என்று கேட்க

“என்ன சார் தண்ணியிலிருந்து வெளியே வந்தாலே மீன் செத்துப் போகும் . இந்த மீன்களப் பிடிச்சு பல மணி நேரமாச்சு. அது எப்படி உயிரோட இருக்கும்னு நினைக்கிறீங்க. எல்லாம் செத்துப்போன மீன்கள் தான். ஆனா சுவையாக இருக்கும் “

என்று எதிர்பதில் சொன்னாள் ரதி. அவள் சிவந்த உடம்பில் ஒட்டியிருந்த செதில்களைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் நீடித்து நின்றது . அவன் பார்வையைச் கொஞ்சம் தூரப்படுத்தினான்

“சரி எனக்கு அயிரை மீன் கொடுங்க”

என்று வாய் விட்டுச் சொன்னபோது அயிரை மீன்களை அள்ளி அளவு போட்டுக் கொடுத்தாள் ரதி.

அதற்கான பணத்தைக் கொடுத்து திரும்பி வருகையில்

” சார் கொஞ்சம் “

என்ற வார்த்தை முரளிதரனை என்னவோ செய்தது .எதுக்காக நம்மள கூப்பிடுறா ?

என்று நினைத்தவன் திரும்பி ரதியின் அருகில் சென்றான்

“சார் நீங்க மீன் கடையில வந்து என்னென்ன பாத்தீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா அதை நா சொல்ல விரும்பல. இப்படி உட்காந்தா தான் சார் யாராவது மீன் வாங்க வராங்க. இழுத்து போத்திட்டு உக்காந்து இருந்தோம்னா,யாரும் இங்க வரமாட்டாங்க. இது பொழப்பு இல்ல சார். என்ன தப்பா நினைச்சுக்காதிங்க உங்கள மாதிரி ஆம்பளைங்க மீன் வாங்குறத விட என்ன அதிகமா பாக்க தான் வாறாங்க.

இன்னைக்கு வெள்ளிக்கிழமை சைவம் சாப்பிடணும்னு வீட்ல நினைப்பாங்க .ஆனா மார்க்கெட் ல என்ன பாத்ததும் அசைவத்துக்கு மாறிடுறாங்க. இத நான் யாரையும் ஏமாத்தல. வேற வழி இல்ல சார் மீனு வித்தாத்தான் குடும்பம் நடத்த முடியும். இன்னைக்கு மீன் விக்கலன்னா மொத்தமா எனக்கு நஷ்டம் ஆகிடும். நான் மார்க்கெட்டில மட்டும் தான் இப்படி இருப்பேன். இந்த வியாபாரம் முடிஞ்சதுன்னா நான் சராசரியா மாறிடுவேன். ஏன்னா வியாபார நுணுக்கங்கள் நிறைய இருக்கு நான் இதை கடைப்பிடிக்கிறேன் தப்பில்லைன்னு நினைக்கிறேன் சார். என்னைய ஏறெடுத்து பாக்காதவங்க, என்னிடம் வழியாதவங்க என் மேனியை பாக்காதவங்க மனுஷன் இல்ல சார். ஆம்பளைங்க வரும்போது இத நான் மறந்துடுவேன். ஆனா என்னைய பாத்துட்டு தான் இந்த வியாபாரம் நடக்குதுன்னு இருக்கு. தப்பு இல்ல சார் .இன்னைக்கு நிறையப் பேரு சைவம் தான் சாப்பிட்டு இருப்பீங்க. என்ன பாத்ததும் அத மாத்திருவாங்க. நான் செய்ற பாவத்துக்கு பரிகாரமா உங்க பசிய அடக்குறேன். என்னை நம்பி என் குடும்பமே இருக்குது தப்பா நினைக்காத சார். எப்ப வேணாலும் வாங்க மீன் வாங்கிட்டுப் போங்க”

என்று சொல்லும்போது ரதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து குளமாகின. அவள் கண்கள் இரண்டும் நீரில் மிதக்கும் கெண்டை மீன்களாக உருண்டு கொண்டிருந்தன.

முரளிதரனின் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்து போல் இருந்தது.பேய் அடித்ததுப் போல் மிரண்டு நின்றிருந்தான் முரளிதரன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *