ஆர். முத்துக்குமார்
ஏப்ரல் வந்து விட்டால் மீன் வர்த்தகம் தமிழகத்தில் மிகமுக்கிய விவாத பொருளாக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. நடப்பு மத்திய பட்ஜெட்டில் ரூ.2,249 கோடியை ஒதுக்கீடு பெற்று இருந்தது. இது கடந்த ஆண்டை விட ரூ.600 கோடி அதிகமாகும்.
அதில் முக்கியமான ஓர் அம்சமும் இருக்கிறது. அது இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் மையங்கள் மீன்பிடி துறைக்கு உதவ இருக்கிறது. இதனால் மீன்பிடி மட்டுமின்றி மீன் சந்தைப்படுத்துதல் முறைகள் மேம்படப்போகிறது. பிளாக் செயின் தீர்வுகள் பல துறைகளில் ஏற்படுத்தி வரும் மாற்றங்களை பார்க்கும் போது அத்தகைய மாற்றம் மீன் துறைக்கு மிகப்பெரிய ஊட்டச்சத்தாகவே இருக்கப் போகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக். நீரிணை கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில் இக்கால கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு இந்தத் தடை அமலில் இருக்கும். தடைக்காலத்தில் தமிழ்நாட்டில் சுமார் 15,000 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நங்கூரமிடப்பட்டிருக்கும். மீனவர்கள் தங்கள் படகுகளைச் சீரமைக்க இந்தத் தடைக்காலத்தைப் பயன்படுத்திக் கொள்வர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி தடைக் காலத்தில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது.
மீன்பிடி தடைக் காலத்தின்போது முற்றிலுமாக தொழிலின்றி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5,000 வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படுகிறது. மீன்பிடிக் குறைவு காலத்தில் ரூ.5,000 என வழங்கி வந்த சிறப்பு நிவாரணத் தொகையை கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கி வருகிறது.மீன்பிடியை நம்பி இருக்கும் மீனவ குடும்பங்கள் இத்துறையில் தொடர்ந்து ஈடுபட இந்த தடை காலத்தில் அதிக நிவாரணம் பெற்றால் தான் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் சமாளிக்க முடியும். இதை மனதில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண தொகையை அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டே தமிழக அரசு ரூ.1000 உயர்த்தி ரூ.6000 ஆக தந்துள்ளது. இம்முறையும் அதுபோன்ற அதிகரிப்பு இருக்குமா? என்பது ஒரு சில நாட்களில் தெரிய வரும்.
கால்நடை வளர்ப்பு, பால்வளம் ஆகிய துறைகளில் உலக பட்டியலில் சிறப்பான இடத்தை இந்தியா பெற்று இருப்பதை அறிவோம், மீன் துறையில் அப்பட்டியலில் நாம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளோம்.
நீண்ட கடல் பரப்பு பெற்று இருக்கும் நமக்கு கடல்சார் வருவாயும், அதை நம்பி இருக்கும் பல லட்சம் குடும்பங்களுக்கும் வாழ்வதாரமாக இருக்கும் இத்துறை உள்நாட்டு நீர்வளத்தையும் உணர்ந்து அங்கேயும் மீனவர்கள் சிறப்பாக செயல்பட ஏதுவாக நிதி ஆதாரம் தர வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் உதவிக்கரம் நீட்ட மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்கிறது என்பது வெறும் காகித அளவு அறிவிப்பாக மட்டும் இருந்து விடாமல் நடைமுறையில் சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிக்கவும் திட்டங்கள் மிக அவசியம் தேவைப்படுகிறது. அதுபோன்ற திட்டங்கள் இருந்தாலும் அதை உறுதியுடன் செயல்பட வைத்தாக முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்க வேண்டும்.