குடும்பத்துக்கு தலா 2 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் உத்தரவு
சென்னை, டிச.24–
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் மீன்பிடிக்கும் பொழுது கழுவெளியில் தவறி விழுந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், மரக்காணம் (தெற்கு) கிராமம் சந்தைத் தோப்புத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் லோகு (எ) லோகேஷ், (வயது 24) என்பவர் கடந்த 22.-12.-2024 அன்று இரவு சுமார் 7 மணியளவில் மரக்காணம் அருகே உள்ள கழுவெளியில் மீன் பிடிக்கும் போது எதிர்பாராத விதமாக கழுவெளியில் தவறி விழுந்து விட்டார். அவருடன் மீன்பிடிக்க வந்த அவருடைய இரண்டு சகோதரர்களான விக்ரம் (வயது 20) மற்றும் சூர்யா (வயது 20) ஆகியோர் அவரை தேடும் பொழுது, அவர்களும் கழுவெளியில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் கழுவெளியில் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று (23–ந் தேதி) மூவரும் தீயணைப்புத் துறையினரால் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என்ற துயரமான செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.