செய்திகள்

மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் : அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா

மதுரை,ஏப்.16

மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி நடக்கிறது என்பதை விளக்கும் வகையில் நேற்று இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இன்று காலையில் மர வர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரர் பிரியாவிடை சுவாமிகள் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் உலா வந்தனர். இன்று இரவு வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பு இடத்தில் உள்ள ரெங்கசத்திரம் திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி எட்டு திசைகளிலும் போரிடும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடக்கிறது.

மதுரையில் பாண்டிய மன்னன் மலையத்துவஜ பாண்டிய மன்னன் மகளாக பிறந்த மீனாட்சி பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின் அவர்கள் இருவரும் சேர்ந்து நகரை ஆண்டு வந்தனர். இதை நினைவுபடுத்தும் வகையில் சித்திரை முதல் ஆடி வரைவயிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை மதுரையை சுந்தரேசுவரரப் பெருமானும் ஆட்சி செய்வதாக ஜதீகம்.

சித்திரை திருவிழாவின் 8 ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா நடைபெற்றது. கோலாகலமான இந்த விழா நேற்று இரவு 7 மணியளவில் விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பின் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ‘ராயர் கீரிடம்’ எனப்படும் வைர கீரிடத்திற்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

கோவிலில் உள்ள அனுக்கைஞ விநாயகரிடம் இருந்து செங்கோலும் கீரிடமும் பெறப்பட்டு இரவு 8 மணியளவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டப்பட்டது. அப்போது மஞ்சள், பச்சை நிற கலந்த பட்டுப்புடவை அணிந்திருந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.

மீனாட்சி அம்மனுக்கு உகந்த வேப்பம்பூ மாலையும் மகிழம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோலும் மீன் கொடியும் மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்பட்டன. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோலை அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் கொடுக்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்றுக்கொண்டு சுவாமி சன்னதி 2 ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை கொடுத்தார்.

இதையடுத்து மீனாட்சி அம்மனை பக்தர்கள் கை பாரமாக தூக்கிக் கொண்டு பழைய கல்யாண மண்டபத்துக்குச் சென்றனர். அங்கு வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினார். அங்கும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து 4 மாசி வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். அவருடன் சுந்தரேசுவரர் பிரியாவிடை சுவாமிகளும் வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். இதைத்தொடர்ந்து இனி மதுரையில் 4 மாதங்களுக்கு மீனாட்சி ஆட்சி நடக்கிறது. இந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி அம்மனை தரிசித்தனர்.

திக்கு விஜயம்

மீனாட்சி அம்மன் ஆட்சி புரியும் போது எட்டு திசைகளிலும் உள்ள பாலர்களை வென்று சிவபெருமானுடன் போருக்கு தயாராகிறார். சிவபெருமானை சந்தித்த போது மீனாட்சியின் 3 வது தானம் மறைந்து நாணம் அடைந்தார். இதையடுத்து நாளை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது.

திருக்கல்யாணம் ஏற்பாடு தீவிரம்

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் நாளை (17 ந் தேதி) காலை 9.50 மணி முதல் 10.14 மணிக்குள் நடக்க இருக்கிறது. இதையொட்டி 10 லட்சம் ரூபாய் செலவில் திருக்கல்யாண மேடை வெளிநாட்டு, உள்நாட்டு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாணம் நடைபெறும் ஆடி வீதி முழுவதும் 250 டன் அளவுக்கு குளு குளு வசதியும் 100 க்கும் மேற்பட்ட மின் விசிறிகளும் வைக்கப்படுகிறது. கோவிலில் 4 கோபுர வாசல்களிலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. 500, 200 ரூபாய் டிக்கெட் பெற்ற உபயதாரர்கள் 6,400 பேர் வடக்கு கோபுரம் வழியாகவும் 3,500 பேர் முன்னுரிமை அடிப்படையில் தெற்கு கோபுரம் வழியாகவும் முக்கிய பிரமுகர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாணத்தை காண அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 11 இடங்களில் 50 ரூபாய், 100 ரூபாய் திருக்கல்யாண மொய் பணம் கோவில் சார்பில் வழங்கப்பட்டு அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *