செய்திகள்

மீனவர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: இலங்கை அமைச்சர் ஜீவன்

சென்னை, ஜூலை 30–

மீனவர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

இலங்கையின் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்நிலையில் அதுகுறித்து ஜீவன் தொண்டமான் கூறியதாவது:–

மலையகத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கும் பொறுப்பு உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினிடம் கல்வித்துறை சார்ந்து 4 கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம். 13 ஆவது சட்டத்திருத்தம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசியுள்ளோம். இன ரீதியான விவகாரங்கள் குறித்தும் பேசியுள்ளோம். இது தமிழ்நாடு – இலங்கை இடையே புதிய உறவை ஏற்படுத்தும்.

அரசியலாக்க வேண்டாம்

மீன்பிடி தொழில், மீனவர்களுக்கு வாழ்வாதாரம். மீனவர் விவகாரத்தை அரசியலாக்கி நிறையபேர் குளிர்காய்கிறார்கள். இரண்டு நாடுகளும் பேசினால் தீர்வு காணலாம். இந்த விவகாரம் குறித்து இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும்.

13 ஆவது திருத்தம் தொடர்பாக சிங்களர்கள் மத்தியில் தவறான அபிப்ராயம் உள்ளது. 13-ஆவது சட்ட திருத்தம் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லீம்களுக்குமானது. இலங்கையில் போராட்டங்கள் நடத்துவது சகஜம். ஜனநாயகத்திற்கு ரணில் விக்ரமசிங்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார். மலையகத் தமிழர்கள் ஒவ்வொரு நாளும் போராடி வருகிறார்கள். இலங்கை வடக்கு – கிழக்கு தொடர்பாக செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

போரின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் மற்றும் தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் அகதிகள் தொடர்பாக செயல் திட்டம் தயாராகி வருகிறது. அரசியல் தீர்வுடன், அபிவிருத்தியும் முக்கியம். இலங்கையில் நடைபெறும் விசயங்கள் தொடர்பாக, இந்திய மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இலங்கை அழகான நாடு, அங்கு வாருங்கள், நேரடியாக வந்து பிரச்னைகளை தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *