செய்திகள்

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விலை வேறுபாடுகள் நீக்கம்: தமிழக அரசு

சென்னை, மார்ச் 19–

மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் விலை உயர்வு மற்றும் வேறுபாடுகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் மீன்பிடிப்பிற்கான செலவினத்தை குறைத்திடும் நோக்கத்தில் மீனவர்களுக்கு வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு விசைப்படகிற்கு ஆண்டு ஒன்றுக்கு 18000 லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்குப் படகு ஒன்றுக்கு தலா 4000 லிட்டர் வீதமும் வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணைத்தின் மூலம் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், இந்திய எரியெண்ணெய் நிறுவனங்கள் சில்லரை டீசல் விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படும் டீசல் விற்பனை விலையினை விட நுகர்வோர் டீசல் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீசல் விற்பனை விலையினை உயர்த்தியது. இதனால் சில்லரை டீசல் விற்பனை நிலையங்களில் குறைவான விலைக்கும் நுகர்வோர் டீசல் விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கும் டீசல் விற்பனை செய்திடும் நிலை ஏற்பட்டது.

மீனவர்கள் கோரிக்கை ஏற்பு

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் டீசல் விற்பனை நிலையங்களில் ஒரே மாவட்டத்தில் அமையப்பெற்றிருக்கும் சில்லரை மற்றும் நுகர்வோர் டீசல் விற்பனை நிலையங்களில் இருவேறு விலைகளில் டீசல் விற்பனை செய்யப்படுவது குறித்து தெரிவித்ததுடன், அதனை மாற்றம் செய்திட மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

முதல்வர் உத்தரவுப்படி, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் ந.கௌதமன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நுகர்வோர் டீசல் விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட மானிய டீசல் கொள்முதல் ஒதுக்கீடு அதே மாவட்டத்தில் உள்ள சில்லரை டீசல் விற்பனை நிலையங்களுக்கு மாற்றப்பட்டது. இதனால், சில்லரை விற்பனை நிலையங்கள் மூலம் குறைந்த விலையில் டீசல் விற்பனை தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.