செய்திகள்

மீனவர்களுக்கு இலவச ‘டிரான்ஸ்பான்டர்’ கருவிகள்

சென்னை, ஜூலை.25-

கடல் எல்லையை தாண்டுவதை தடுக்க மீனவர்களுக்கு இலவசமாக நவீன டிரான்ஸ்பான்டர் கருவிகள் அக்டோபர் மாதம் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மீன்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஜவஹர் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுக்கவும், மீன்பிடி படகுகள் செல்வதை கண்காணிக்கவும், தகவல் தொடர்புக்கான நவீன கருவியான ‘டிரான்ஸ்பான்டரை’ இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த ‘டிரான்ஸ்பான்டர்’ கருவிகளை மீனவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்க உள்ளது. ரூ.15 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரம் ‘டிரான்ஸ்பான்டர்’ கருவிகளை வரும் அக்டோபர் மாதம் மீனவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும்.

மேலும், மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுப்பதோடு, புயல், மழைக்காலங்களில் கடலில் சிக்கியுள்ள படகுகளை கண்டறியவும் இந்த ‘டிரான்ஸ்பான்டர்’ கருவி உதவும். இக்கருவிகளை இஸ்ரோ நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது. இது மீனவர்களுக்கு மிகுந்த பயனை அளிப்பதோடு, அவர்கள் ஆபத்தில்லாமல் மீன்பிடிப்பதை உறுதி செய்ய உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *