காலை உணவு சிறிதளவு சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்ற கங்காதரனுக்கு மதிய உணவு வரை அவன் காலையில் சாப்பிட்ட உணவு போதுமானதாக இல்லை .
மதியம் கொஞ்சம் வேலை இருந்ததால் மதிய உணவும் அவனுக்குத் தள்ளிப் போனது. அன்று முழுவதும் அவன் வயிற்றை நனைத்தது வெறும் தண்ணீர் மட்டும்தான்.
” சரி இன்னைக்கு ஒரு நாள் நாம விரதம் இருந்ததாக நினைத்துக் கொள்வோம் “என்று நினைத்த கங்காதரன் இரவு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான் .ஆனால் இரவு வரை அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சாயங்காலம் ஐந்து மணிக்கு எல்லாம் வயிற்றுப் பசி அவன் குடலைக் கிள்ளியது. எப்படியும் இன்று இரவு எட்டு மணிக்கு மேல் தான் சாப்பிட முடியும் . அதுவரை பட்டினியாகக் கிடந்தால் நம் வயிறு கெட்டுப் போய்விடும் என்று நினைத்த கங்காதரன் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றான். அங்கு போண்டா, பஜ்ஜி, டீ ,வடை அதுமட்டுமல்லாமல் மதியம் உணவும் தயாரித்துத் தரும் இடமாக அந்த டீக்கடை இருந்தது. அவன் சென்ற நேரமோ இரவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரமாக இருந்ததால் இரண்டு வடையும் டீயும் குடித்தால் அது இரவு வரை தாக்கு பிடிக்கும் என்று நினைத்து இரண்டு வடையை வாங்கினான். இலையை வைத்து வடை கொடுத்ததால் கொஞ்சம் சாம்பார் சட்னி இருந்தால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் என்று அந்தக் கடையில் பணிபுரிந்த பெண்ணிடம்
” அம்மா கொஞ்சம் சாம்பார் இருந்தா தரீங்களா ? என்றான் கொஞ்சம் கெஞ்சும் குரலில்
” அதுக்கென்ன தம்பி இந்தாத் தாரேன்” என்று ஓடினாள் அந்தப் பணிப்பெண்.
” பரவால்ல வேறொரு கடையா இருந்தா வடைக்கு சாம்பார் சட்னி தொட்டுக்கிறதுக்கெல்லாம் கொடுப்பாங்களா? தின்னுட்டு போயா ? என்று இளக்காரமாகப் பேசுவார்கள் . இந்தப் பெண்மணி தாயுள்ளம் கொண்டவள் போல. சாம்பார் கேட்டதும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் தருகிறேன் என்று சொல்லி செல்கிறாளே? இவளல்லவோ பெண் ” என்று மனதுக்குள் மகிழ்ச்சி கொண்டான்.
சாம்பார் சரியாக இருந்தால் இன்னும் இரண்டு வடைகளைச் சாப்பிடலாம் என்று நினைத்துக் கொண்டு அந்த வடையை சாப்பிடாமல் பார்த்துக் கொண்டே இருந்தான். எப்படியும் சாம்பார் வந்துவிடும். சாம்பாரில் முக்கி வடையைச் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும் என்று நினைத்திருந்தபோது அந்தப் பெண் மதியம் சாப்பாட்டிற்கு வைத்திருந்த கூட்டுப் பொரியலை அள்ளி வடைமீது வைத்தாள்.
” என்னம்மா சாம்பார் தான கேட்டேன். நீங்க கூட்டுப் பொரியலையே தரீங்களா? ரொம்ப நன்றி அப்படின்னா நான் வட வாங்காம ஒரு கூட்டு பொரியல சாப்பிட்டு இருக்கலாம் போல ” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் கங்காதரன்
” அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா இத எல்லாம் தூக்கிக் கீழே தான் போடணும் .இந்த கூட்டு பொரியல கீழே போடுறதுக்கு பதிலா ஒரு மனுசன் சாப்பிடட்டுமேன்னு தான் உங்களுக்கு கொடுத்தேன் ” என்ற அந்த பெண்மணி சொன்னபோது
” என்னது கீழ போடுறதயா எனக்கு குடுத்த ? எவ்வளவு எளக்காரம் பாத்தியா? இந்த பொண்ணுக்கு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே வடையைச் சாப்பிட ஆரம்பித்தான் . இருக்கும் வடையைச் சாப்பிட்டு இன்னும் இரண்டு வடையை சாப்பிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அந்தப் பெண் சொன்ன வார்த்தை அவனுக்கு சுரீர் என்ற தைத்தது. அந்த இரண்டு வடை கூட அவனுக்குள் தொண்டைக்குள் இறங்குவது சிரமமாக இருந்தது.
” தம்பி இன்னும் இரண்டு வடை சாப்பிடுங்க. கூட கூட்டு பொரியலும் இருக்கு. கூட்டுப் பொரியலத் தூக்கி கீழே தான் போடுவாேம். சாப்பிடுறீங்களா? என்று அந்தப் பெண்மணி மறுபடியும் சொன்ன போது
அவளைத் திட்டலாமா? இல்லை வேண்டாமா? இவள் வேண்டுமென்று சொல்கிறாளா? இல்லை தெரியாமல் தான் சொல்கிறாளா? என்று நினைத்த கங்காதரன் அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமலே சாப்பிட்டுக் கொண்டிருந்தான் :
” இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா இந்தக் கூட்டுப் பொரியல எல்லாம் கீழ தான் தூக்கி போடணும். நீங்க சாப்பிடுங்க” என்று அந்தப் பெண் சொன்ன வார்த்தையே கங்காதரனுக்குள் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.