தோல்வியடைந்தவர்கள்தான் மீண்டும் வாய்ப்பு கேட்பார்கள்: டிரம்ப் ஏற்க மறுப்பு
நியூயார்க், செப். 13–
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் மீண்டும் விவதாத்தில் பங்கேற்க மாட்டேன் என்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரீசுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பும் பங்கேற்ற முதல் நேரடி விவாதம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விவாதத்தில், பணவிக்கம், கருக்கலைப்பு உள்ளிட்டவை குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்துகளை முன்வைக்க, ஜனநாயகத்தின் மீது தாக்குதலை நடத்தியதாகவும், வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்க வைத்தவர் என்றும் கமலா ஹாரிஸ் பதிலடி தந்தார்.
இதில், டிரம்ப் வெற்றி பெற்றதாக ஏபிசி கருத்துக்கணிப்பும், கமலா வெற்றி பெற்றதாக சிஎன்என் கருத்துக்கணிப்பும் வெளியாகின. இந்த நிலையில், தெற்கு கரோலினாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமலா ஹாரிஸ், டிரம்ப்புடன் மற்றொரு விவாதத்தில் பங்கேற்க தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.
டிரம்ப் ஏற்க மறுப்பு
ஆனால், கமலா ஹாரிஸின் அழைப்பை டொனால்ட் டிரம்ப் ஏற்க மறுத்து சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது:–
“ஒருவர் சண்டையில் தோற்றால், அவர் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை, எனக்கு மறுபோட்டி வேண்டும் என்பதுதான். ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி வேட்பாளரான தோழர் கமலா ஹாரிஸுக்கு எதிரான விவாதத்தில், நான் வெற்றி பெற்றதாக கருத்துக் கணிப்புகள் தெளிவாகக் தெரிவிக்கின்றன. அதனால், உடனடியாக இரண்டாவது விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவரும் ஜோ பைடனும் நாட்டை அழித்துவிட்டனர். லட்சக்கணக்கான குற்றவாளிகள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் அவர்களால் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். ஜோ பைடனுடன் நடைபெற்ற முதல் விவாதத்தில், மற்ற பிரச்னைகள் அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுவிட்டது. கடந்த 4 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதில் கமலா கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவது விவாதம் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.