நாடும் நடப்பும்

மீண்டும் வருமா கொரோனா கட்டுப்பாடுகள் ?


ஆர். முத்துக்குமார்


சமீபமாக சீனா, அமெரிக்கா, தென் கொரியா நாடுகளில் பெரும் தொற்று புதிய அவதாரமாக மாறி கட்டுப்பாடின்றி பரவி வருகிறது.

2020ல் மே, ஜூன் மாதங்களில் நெஞ்சை உலுக்கிய காட்சிகள் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது, மாத்திரை மருந்துகளுக்கு தட்டுப்பாடு, மரணங்கள் அதிகரித்துக் கொண்டிருக்க தெரு வீதிகளில் எங்கும் மரண ஓலங்கள் என்று இருந்தது அல்லவா?

அதே காட்சிகள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபமாக சீனாவில் ஏற்பட்டு இருக்கிறது.

இம்முறை உருவாகியிருக்கும் புதிய ரக கொரோனா வைரஸ் 4 மாதங்களுக்கும் முன்பே நம் எல்லைகளிலும் தென்பட ஆரம்பித்து விட்டதாம்.

நம் நாட்டில் அடுத்தடுத்து தடுப்பூசிகளை நாடெங்கும் இலவசமாக போட பிரதமர் மோடியும் எல்லா மாநில முதலமைச்சர்களும் முடிவு செய்து செலுத்த முடிவு செய்த சில மாதங்களில் 90% இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. அதாவது 50% ஜனத்தொகைக்கு தடுப்பூசி செலுத்தி விட்டோம். அது தவிர பெருவாரியான பேருக்கு கொரோனா பாதிப்படைந்து தாமாகவே எதிர்ப்பு வலிமையை பெற்று விட்டோம்.

ஆனால் சீனாவில் முழு ஊரடங்கு அமுலில் இன்றும் இருக்கிறது. பொது இடங்களில் அதிகக் கூட்டம் கூட முடியாது.

இதனால் சீனர்கள் யாரும் நாங்கள் பூரண குணமாகி விட்டோம் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

பல நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட கொரோனா பரவயல் எப்படியும் தொடரும். அதை தடுப்பதற்கு மேலும் ஊரடங்கை தொடராமல் பாதிப்படைந்தவர்கள் கண்காணித்து உரிய சிகிச்சை தந்து குணப்படுத்தி உயிரை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.

எந்த நோய் கிருமி நம் உடலில் தொற்றினாலும் உடனடியாக அதை எதிர்த்துப் போரிட நமது உயிர் அணுக்கள் தயாராகவே இருக்கும். ஆனால் அந்த கிருமியின் தன்மையை உணர்ந்து எப்படி எதிர்ப்பது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள சில நாட்கள் ஆகும். அதுவரை நம் உடலில் சக்தி இருக்காது போனால்தான் மரணம் உண்டாகிறது.

இந்த முறை வந்த நேரத்தில் தடுப்பூசி வந்து விட மெல்ல கொரோனாவின் வீரியம் மற்றும் ஏற்படுத்தி வந்த சர்வ நாசம் கட்டுப்பாட்டிற்குள் வர ஆரம்பித்து விட்டது.

ஆனால் சீனாவிலோ முழு ஊரடங்கு கடந்த 3 ஆண்டுகளாகவே அமுலில் இருக்கிறது.

சர்வதேச அமைப்புகளின் தடுப்பூசியை சீனா ஏற்க மறுத்து விட்டதால் இன்றும் அவர்களாக தயாரித்துக் கொண்ட தடுப்பூசியை மட்டும் அனுமதிக்கிறது. அது தரமானதா? புதிய கொரோனா அவதாரத்தை எதிர்க்கும் வலிமை கொண்டதா? போன்ற சந்தேகக் கேள்விகள் தொடர இன்றோ தினமும் 10 லட்சம் பேர் இத்தொற்றில் பாதிப்படைந்து வருகிறார்கள்.

மரண எண்ணிக்கையும் தினமும் 5000 பேரையும் விட அதிகமாகவே இருக்கிறது.

இந்தச் சம்பவங்களை கண்காணித்து வரும் தமிழகம் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசித்து சர்வதேச பயணிகள் வருகையை தீவிரக் கண்காணிப்பு செய்யத் துவங்கி விட்டார்கள். கூடவே கொரோனா கட்டுப்பாடுகளை அமல் படுத்தவும் முடிவு செய்துள்ளார்கள்.

பிரதமர் மோடியும் தனது தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை குழுமத்துடன் வீடியோ கலந்துரையாடல் செய்து விட்டு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

கொரோனா பெருத்தொற்று காலம் இன்னும் முடிவடையவில்லை. தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள், சுகாதார ஊழியர்களின் தயார் நிலையை உறுதிப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக கொரோனா மரபணு பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும். அனைத்து கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை அந்தந்த மாநில அரசுகள், இன்சாகாக், ஐ.ஜி.எஸ்.எல் ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

இதன் மூலம் புதிய கொரோனா வைரஸ்களை குறித்த நேரத்தில் கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகையை அடுத்தடுத்து கொண்டாட உள்ளோம். இந்த நேரத்தில் பொது இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிவது அவசியமாகும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும். தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும். பூஸ்டர் தடுப்பூசியில் மூத்த குடி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இப்படிப்பட்ட எல்லா முக்கிய முடிவுகளையும் உரிய நேரத்தில் சர்வதேச விமான நிலையங்களுக்கும் விமான நிறுவனங்களுக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தெரிவித்து வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர் எந்த சிக்கலும் இன்றி நாடு திரும்ப உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.

பலர் நடப்பில் உள்ள திட்டம் என்ன? என்று தெரியாமல் விமான நிலையம் வந்த பிறகு பயணிக்க முடியாது தடுக்கப்படுவது அந்தப் பயணிகளுக்கு மிகப் பெரிய தலைவலி ஆகும்.

மேலும் புதிய ரக கொரோனாவை தடுக்க அல்லது சிகிச்சை தர என்ன செய்ய வேண்டும்? என்ன சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்பன பற்றி சமீபமாக பரவி வரும் தகவல்கள் ஒரு சிலர் சுயலாபத்திற்கு பரப்பும் விளம்பர பிரச்சாரமாகும்!

அது உண்மையா? வெறும் வதந்தியா? என்பதை விவரிக்க ஆன்லைன் தகவல் பலகையையும் மத்திய அரசு உருவாக்கி பொதுமக்களுக்கு அறிவுரை கூற வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *