நாடும் நடப்பும்

மீண்டும் மொழி, இன பிரிவினை: தமிழகத்தின் அமைதியைக் கெடுக்க ஸ்டாலின் சதி

தி.மு.க.வின் அச்சடிப்புகள் வட மாநிலத்தில் மட்டுமே, அது ஏன்?

பாதிக்கப்பட்ட உள்ளூர் அச்சகர்கள் குமுறல்!

தமிழகத்தில் தமிழருக்கே வேலை… இந்தி மொழி பேசியபடி பான்பராக் மென்று துப்புபவர்கள்… என்றும் வடநாட்டவர்கள் தமிழகத்தில் ஆதிக்க சக்திகளாக மாற விட மாட்டோம் என்று அடுக்கடுக்காக விளம்பரப் பிரச்சாரம் செய்து வருகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.

‘தெற்கு தேய்கிறது, வடக்கு வளர்கிறது’ என்று கோபப்பட்ட அண்ணாவே இன்று அண்ணாதி.மு.க. செய்த புரட்சியால் வடக்கு தேய்ந்து, தமிழகம் வளர்ந்து விட்டதை பார்த்து பூரித்து இருப்பார், பாராட்டியும் இருப்பார்.

இப்படி வடநாட்டவர்களை அன்னியமாக பார்க்க வைக்க தி.மு.க. பிரச்சாரம் செய்வது ஏன்?

பழைய இந்தி எதிர்ப்பு சமாச்சாரங்களை அவர்களது கழகத் தொண்டர்கள் மனதில் மீண்டும் விஷமாக ஏற்றிட தான்!

தேசமெங்கும் இருப்போர் தமிழகத்தில் முதலீடுகள் செய்யவும் வேலைவாய்ப்புகளை பெற நாடி வருவது நல்லது தானே!

சாப்ட்வேர் நிறுவனங்கள் குவிந்திருக்கும் ஒரு பகுதி பழைய மகாபலிபுரம் சாலை, ஓஎம்ஆர்.

அந்த ஒரு 40 கிலோமீட்டர் நெடுஞ்சாலை மட்டும் ஆண்டிற்கு ஒரு லட்சம் டாலருக்கும் மேல் வரி வருவாயை ஈன்று வருகிறது. அது போன்ற கட்டமைப்பு இருப்பதால் தானே ‘தென் ஆசியாவின் கணினி நுழைவு வாயில்’ சென்னை என்று கூறப்படுகிறது.

உலகப் புகழ் போர்ட் கார் ஆலை, ஹூண்டாய் கார் ஆலை மற்றும் உலகெங்கும் ஓடிக் கொண்டிருக்கும் எல்லா முன்னணி நிறுவன கார்களுக்கு உதிரி பாகம் தயாரிப்பு சென்னையும் அதன் சுற்றுப்புற பகுதியில் அமைந்து இருக்கும் ‘குறு சிறு மற்றும் நடுத்தர’ ரக தொழில் கூடங்களில் இருந்து தான் என்பதை நாடே அறியும்.

அதுபோன்ற பல ஆயிரம் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு நாட்டையே திரும்பி பார்க்க வைத்ததில் வியப்பில்லை. வடகிழக்கு முதல் மேற்கு இந்தியா வரையிலுள்ள பெரும்பாலானோரை நாம் வட இந்தியர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதால் இந்தி பேசுபவர்கள், வட மாநில கலாச்சாரங்கள், நடை, உடை, பாவனைகள் தமிழகத்தோடு மீண்டும் ‘கலிங்கத்து பரணி’ பானி யுத்தத்தை நடத்துகிறது.

தமிழின் சக்தி

தமிழக பண்பாடு, மொழி மற்றும் கலாச்சாரம் சங்ககாலம் முதலே இப்படிப்பட்ட பல்வேறு தாக்கங்களை கண்டது தான்! ஆனால் தன் அடிப்படை சக்திகளை எந்த நிலையிலும் இழந்து விடவில்லை. தமிழகத்தில் பண்டை காலம் முதலே சௌராஷ்டிரர்கள், தெலுங்கு, கன்னடம், மராட்டிய மொழிகள் தமிழோடு மோதிய போதெல்லாம் கூட தமிழின் சிறப்புகள் குறையாத ‘அட்சய பாத்திரமாக’ நாடெங்கும் இனிமையை தவழ விட்டு கொண்டு தான் இருந்தது, இருக்கிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் அவரது மறைவுக்கு பிறகும் அண்ணா திமுக தலைவர்கள் தமிழின் சிறப்பை உலகெங்கும் பரவச் செய்ய எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

ஆனால் வடநாட்டு வாலிபர்களின் ‘பான்பராக் ‘ பழக்கத்தை கொச்சைப் படுத்தும் நோக்குடன் தங்களது பிரச்சார விளம்பரமாக உபயோகித்து இருப்பது திமுகவின் நாட்டை துண்டாடும் போக்கிற்கு ஒரு உதாரணமாகவே தெரிகிறது.

ஆங்கிலேயர்கள் கையாண்ட இன, மத மொழி பிரிவினைவாத ஸ்டைலில் திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இப்படி வெளிப்படையாக விளம்பரங்கள் செய்வது மக்களின் மனதில், ‘அட இது தேவையா?’ என கேள்வி பிறந்துள்ளது.

தமிழகத்தில் எல்லா மொழி, மத இனத்தவருக்கும் ஒருங்கிணைந்து செயல்பட ஏதுவான திட்டங்களால் இந்த மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் சென்றது எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஆவார்கள்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில்…

அதே சிந்தனையோடு நல்லாட்சி செய்து கொண்டிருப்பது தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஆவர்.

அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தின் மகிமையை உணர்ந்தவர் ஜெயலலிதா. அவர் வழியில் இன்றைய அண்ணா திமுக தலைவர்கள்.

ஆகவே தி.மு.க.வா? அண்ணா தி.மு.க.வா? என்ற கேள்வியை எதிர் நோக்கும் இன்றைய இளைஞர்களுக்கு குறிப்பாக முதல் முறை வாக்களிக்கப் போகிறவர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள் அண்ணா திமுக தான்.

மதம், இனம், கலாச்சாரம் மற்றும் மொழிகளின் சங்கமாக இருக்கும் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எந்த சிக்கலும் இல்லையே, ஆனால் ஏன் திமுக விளம்பரங்கள் மொழி, கலாச்சார துவேசத்தை விளம்பர யுக்திகளில் வெளிப்படுத்துகிறது?

இன்று ஓர் சாமானிய விவசாயி, அண்ணா திமுகவில் அடிமட்ட உறுப்பினராகச் செயல்பட்டு படிப்படியாக உயர்ந்து, எம்எல்ஏவாக வளர்ந்து விடலாம். அண்ணா திமுகவின் தலைவராகக் கூட உயரலாம்! அவரே தமிழகத்தின் முதல்வராகக் கூட பதவியேற்று நல்லாட்சியை வழங்கலாம். அதை நிரூபித்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவார்.

வடக்கில் வியாபிக்க ஆர்வம்!

கருணாநிதியின் வாரிசுகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் நட்பு வட்டாரத்திற்கும் மட்டுமே தான் பதவிகள்! அவர்களின் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு அழைத்து வரப்பட்டு இருப்பது வட இந்திய நிறுவனமே!

அது அவர்களுக்கு தான் ரூ.100 கோடி ஆலோசனை கட்டணம் தந்த பிறகும் அதே ‘பான்பராக் ‘ ஆசாமிகளின் ஆலோசனைப்படி தேர்தல் விளம்பரப் பதாகைகள், பிட் நோட்டீஸ், பிளக்சி போஸ்டர்கள் வரை எல்லாவற்றையும் வடபுல அச்சகங்களிடம் மட்டுமே தந்து அச்சடித்து வரவழைத்தது ஏன்?

தமிழகத்தில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் எந்த தொழிலும் நடைபெறாமல் மூடுவிழா காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் இணைத் தொழிலாக அந்த ‘ குட்டி ஜப்பானில் ‘ இருக்கும் அச்சகத் துறையை ஏன் புறக்கணித்து திமுக?

தமிழர் நலன் புறக்கணிப்பு

விவசாயிகள் நலன் காப்போம்; மீனவர் நலன் காப்போம் என்று திமுக தரப்பு உறுதி மொழிகள் ஒருபுறமிருக்க தமிழகத்தின் பாரம்பரிய அச்சக நிறுவனங்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த கடுமையான பொருளாதார சூழ்நிலையில் அத்துறையின் கண்ணீரை துடைக்க கூட முயலாமல் புறம்தள்ளிவிட்டு வட மாநில அச்சகங்களில் மட்டும் அச்சடித்து செலவுகள் செய்திருப்பது கவனமாக வாக்களிக்க வேண்டும் என்ற உணர்வை தமிழக வாக்காளர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

24 மணி நேரமும் மின்சார வசதி வந்துள்ளதால் அண்ணா திமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளதால் உயர்ரக அச்சுத் தொழில்நுட்பம் வைத்திருப்பதால், திமுக அந்த வடநாட்டு அச்சகங்களை நம்பினால் அவர்களை நம் மாநிலத்தில் தொழில் துவங்க அழைத்து வந்தாவது இருக்கலாம்!

தட்டுப்பாடு வாரியம் வேண்டுமா?

நம் நாட்டில் அண்ணா திமுக ஆட்சியில் இருப்பது மின்மிகை மின்சாரத்தை தேசத்திற்கே வழங்கிட ‘ மின் கட்டுப்பாடு வாரியம்’ ஆனால் முன்பு திமுக இருள் ஆட்சி காலத்தில் அது ‘மின் தட்டுப்பாடு வாரியமாக’ கருதப்பட்டது!

தமிழகத்தில் அச்சகத் துறையை வளரவிடாமல் செய்துவிடமுடியாது. தமிழகம் மீண்டும் இருட்டில் மூழ்கி விடக்கூடாது! ஆகவே தமிழகம் திமுகவை நிராகரிக்கப் போகிறது.

திமுக குடும்ப நிறுவனங்களில் உரிமையாளர்களைத் தவிர இதர பெரும் பொறுப்புகளில் கடைநிலை ஊழியர்கள் படை வரை வடஇந்திய ஊழியர்கள் பணியில் இருப்பது ஏன்? அவர்களது உழைப்பின் மீதுள்ள நம்பிக்கை.

அதை ஏன் இதர தமிழக தொழில் நிறுவனங்களும் நம்பி அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தொழில் செய்யக்கூடாது?

இந்தி ஒழிக என்று போராட்டம் நடத்தி பல ஆயிரம் வாலிபர்களை காவு கொடுத்தது தமிழகம். அதை உருவாக்கியது திமுக.

ஆனால் இன்றோ நாடெங்கும் வியாபாரத்தை பெருக்க இந்தியை நன்கு படித்து, பேசிப் பழகும் கருணாநிதியின் குடும்பத்தார் ஸ்டாலினை முதல்வராக ஆட்சியில் அமர வைக்க தமிழகத்தில் தமிழருக்கே பணிகளில் முன்னுரிமை என்ற வாசகத்தை அரசியல் ஆதாயத்திற்கு அவிழ்த்துவிட்டு இருப்பது தி.மு.க.

யாருக்கு உங்கள் ஓட்டு என்ற கேள்விக்கு தமிழகமே எந்த குழப்பமும் இன்றி எங்களது தேர்வு ‘இரட்டை இலை’ என்று உறுதியாக பதில் தரும் நாள் ஏப்ரல் 6.

நாடும் நடப்பும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *