செய்திகள் நாடும் நடப்பும்

மீண்டும் மிரட்டும் புகுஷிமா


தலையங்கம்


2011 மார்ச் 11–ல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணங்களால் புகுஷிமா (Fukushima) அணு மின் உற்பத்தி ஆலை பாதிப்படையும் அபாயத்தை உணர்ந்து அணு ஆலை செயல்பாடுகள் உடனே நிறுத்தப்பட்டது.

அணு உலைகளில் கதிர்வீச்சு காரணங்களால் மாசுபட்ட கழிவுநீர் உருவாகும். அது கடல்நீரில் கலந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் அந்த அணுநிலைய பணிகள் நிறுத்தப்பட்டது.

நிறுத்தப்பட்டாலும் உள்ளே ஆலைகளின் கொதிகலன்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. அணுமின் தயாரிப்பு கிடையாது என்றாலும் சேமிப்பு கிடங்கில் இருக்கும் கதிர்வீச்சு சமாச்சாரங்கள் குளிர்நிலையில் இருப்பது அவசியமாகும். அங்கு 250 டன் அணு எரிபொருள் இருப்பதால் அங்கிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர். 10 ஆண்டுகளை கடந்து விட்டாலும் திரும்ப வரும் சாத்தியக்கூறு அறவே இல்லை.

ஆனால் சமீபமாக பல கட்டுமானங்கள் வர துவங்கும் சாத்தியக்கூறுகள் தென்பட ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர், அவர்களில் பலர் குடும்பமாக மீண்டும் திரும்ப ஆர்வமாகவே இருக்கிறார்கள்.

அதாவது அணு கதிர்வீச்சு பற்றிய பயம் ஏதும் எங்களுக்கு கிடையாது என்று யோசித்து வருகிறார்கள்.

தற்போது உலகிலேயே மிகப்பெரிய கதிர்வீச்சு அச்சப்பகுதி இந்த புகுஷிமா பகுதியாக இருக்கிறது. ஜப்பானோ மிகச் சிறிய தீவு நாடாக இருப்பதால் இப்படி ஒரு குடியிருப்பு பகுதி வீணாக உபயோகமற்று விட்டா வைத்திருக்க முடியும்!

மக்களின் மனநிலையை உணர்ந்து இந்த அணு ஆலை கழிவுநீரை வெளியேற்றி விட திட்டமிட்டு வருகிறது ஜப்பான்.

அந்த 10 கிலோ மீட்டர் சுற்றளவு மக்களுக்காக பசுபிக் மகா சமுத்திரத்தை கதிர்வீச்சு கழிவுகளால் அசுத்தப்படுத்தினால் அருகாமை நாடுகளான சீனா, கொரியா பாதிப்புகளை சந்திக்கும் அபாயத்தில் இருக்கிறது. ஜப்பான் உட்பட பல அருகாமை நாடுகள் கடல்வள உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், அப்படி இருந்தும் மீன்வளத்தை பாதிக்கும் என்று அறிந்தும் கழிவுகளை கடல்நீரில் கரைக்க திட்டமிட என்ன காரணம்? அமெரிக்காவின் உத்தரவுகளால் ஜப்பான் மிரண்டு இப்படி ஒரு தவறான பாதையில் செல்லத் துணிகிறதா?

கொரோனா ஊரடங்கு 2020ல் அறிவிக்கப்பட்டு இருந்த நாட்களில் ஜப்பான் அரசு அப்படி ஒரு களங்கமான முடிவை நாம் எடுக்கவே கூடாது என்று ஜப்பானிய பொதுமக்கள் போராடத் துவங்கினர். அரசும் இப்படி ஒரு எதிர்ப்பை கண்ட பிறகு அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்திவிட்டனர்.

ஆனால் கடந்த வாரம் மீண்டும் இதே பிரச்சினை எழுந்துள்ளது. அப்பகுதி வாழ் பொதுமக்கள் 30 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுவை இதுசார்பாக உரிய அமைச்சகங்களுக்கு அனுப்பி உள்ளனர். மெல்ல எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்து வருவதால் ஜப்பானிய அரசு இது சாதகமற்றது என்று புரிந்து கொண்டு தற்காலிகமாக மீண்டும் செயல்பட வைப்பதை நிறுத்தி இருக்கிறது.

ஆனால் மீண்டும் செயல்பட வைக்கப்போவது இல்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கவும் இல்லை!

பூமிவாசிகள் அண்ட சராசரத்தில் கிடைக்க இருக்கும் குடிநீருக்காக பல லட்ச கோடிகள் செலவு செய்து வருவதை நாமும் அறிவோம்.

நிலவுக்கும் கடந்த 2 ஆண்டுகள் சென்று விட்ட இந்த நிலையில் அசுத்தமான குடிநீர் சர்ச்சை எழுந்து இருப்பது மனதிற்கு பாரத்தை ஏற்படுத்துவதுடன் நகைத்திடவும் வைக்கிறது.

இதுவரை புகுஷிமா அணுமின் நிலைய கதிரியக்க கழிவுகளை நிலத்தில் குழி தோண்டி தான் புதைத்து வந்தனர். ஆனால் சமுத்திர நீரை அசுத்தப்படுத்தி குடியிருப்பை உருவாக்க வேண்டுமா? பொறுப்புள்ள நாடாக கருதப்படும் ஜப்பானே இதை யோசிக்கலாமா?

நமது கூடங்குளத்தில் உருவாகும் கழிவுகளை இத்திட்டத்தை அமுல்படுத்திய ரஷ்யாவே அகற்றிட வழிவகைகளையும் நிர்மாணித்து இருப்பதை மறந்து விடக்கூடாது.

ஒருமுறை விடுவிக்க துவங்கினால் அதை பின்வாங்க முடியாது! ஆனால் ஜப்பான் அரசாங்கமோ இதுவரை தங்களது முடிவை நிறுத்திட பின்வாங்குவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *