சென்னை, ஜூலை 29–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து, ரூ.51,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, கடந்த மே 20ம்தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்துவந்த நிலையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலையானது கிடு, கிடுவென குறைய தொடங்கியது.
பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு 4 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,280 வரை அதிரடியாக குறைந்தது. ஆனால் திடீரென நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.51,720க்கு விற்பனையானது.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று காலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320-க்கும், ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ரூ.6,415-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 பைசா அதிகரித்து ரூ. 89.50க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ. 89,500-க்கும் விற்பனையாகிறது.