சென்னை, பிப்.23-
நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் விபத்தில் சிக்கினார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் அவருடைய அணி பங்கேற்றது.
பந்தயத்துக்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து போட்டியில் இருந்து அவர் விலகினாலும் அவருடைய அணி பங்கேற்று 3-ம் இடத்தை தட்டிச் சென்றது. சமீபத்தில் நாட்டுக்கான அவருடைய சேவையை பாராட்டும் விதமாக மத்திய அரசு பத்ம பூஷண் விருது அறிவித்து கவுரவப்படுத்தியது.
சமீபத்தில் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆன பிறகு மீண்டும் அவர் கார் பந்தயத்தில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா நகரில் நேற்று நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்று அவருடைய காரில் சீறிப் பாய்ந்தார்.
அப்போது போட்டியில் அஜித்குமார் தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரை முந்துவதற்கு முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகி ‘பல்டி’ அடித்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அஜித்குமாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.