சிறுகதை

மீண்டும் காதல்…. (ராஜா செல்லமுத்து)

நிலா நேசனின் நெஞ்சுக்குள் காதலின் வலி இன்னும் குறையாமலே இருந்தது. அந்த வடு அழிய ஒரு யுகம் தேவைப்படும் போலவே உணர்ந்தான்.
சிரித்துப் பேசினாலும் அவன் சிந்தனை முழுவதும் உமாவே நிறைந்திருந்தாள். வேறு வேறு உலகத்தில் அவன் சஞ்சரித்திருந்தாலும் அவன் சுற்றி வரும் உலகம் உமா என்பதே உண்மை என்று அவன் உள்ளம் உரைத்தது. வழக்கமான வாழ்க்கையில் அவனுடனிருக்கும் நண்பன் ரமேஷ் எப்போதும் கேட்கும் கேள்வியையே நிலா நேசனிடம் கேட்டான்.
மச்சி இப்படியே தான் இருக்கப் போறீயா?
இப்பிடியேன்னா?
இல்ல உமா தான் ஒன்ன விட்டுட்டுப் போயிட்டா அவளையே நினைச்சுட்டு இருக்கிறது முட்டாள் தனம்
ஓகோ… நீ என்ன சொல்ல வார உமாவ மறந்திட்டு வேற ஒரு பொண்ண லவ் பண்ணு இல்ல கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்ல வாரேன்
டேய் ரமேஷ் இந்த பழைய கேள்வியையே எவ்வளவு நாள். தான் கேட்ப நான் தான் என்னோட முடிவ தெளிவா சொல்லிட்டேன் உமாவைத் தவிர என்னோட மனசுல வேற யாருமில்ல இனி இன்னொருத்திக்கு என்ன நெஞ்சு இடம் குடுக்காது. அவ்வளவு தான் இந்த இதயக் கூட்டுக்குள்ளே ஒரே ஒரு குயில் வந்து கூடு கட்டுச்சு பாட்டுப் பாடுச்சு இப்ப பறந்து போயிருச்சு மறுபடியும் வேறொரு பறவ என்னோட இதயத்தில உட்காரவோ பாட்டுப்பாடவோ இடமில்ல அவ்வளவு தான். அது முடிஞ்சு போன அத்தியாயம் இன்னொரு வாழ்க்கைய என்னால தொடங்க முடியாதுன்னு நினைக்கிறேன். இனிமே இதுபற்றி கேக்காத ரமேஷ் ரணங்கள சுமந்த மனசு இனி சந்தோசத்துக்கு இடம் குடுக்காதுன்னு நினைக்கிறேன். மறுபடியும் இது பத்தி கேட்டு என்னைய காயப்படுத்தாத ஏற்கனவே புரையோடி கெடக்கிற இதயத்த மேலும் புண்ணாக்காத இது பத்தி இனிமே பேசாத கொஞ்சம் கண்டிப்பும் அழுகையும் கலந்த குரலில் சொன்னான் நிலா நேசன் அவனின் நிலையைத் தெரிந்து கொண்ட ரமேஷ் பெருமூச்சோடு அவனைப் பற்றிய கவலையையும் காற்றில் கரைத்தான்.
சரி நிலா இனிமே இதுபத்தி பேசவே மாட்டேன் என்ற ரமேஷ் ஒதுங்கிக் கொண்டான்.
நாட்கள் நகர்ந்தன…..
வாரங்கள் ஓடின…..
மாதங்கள் பறந்தன……
சந்திக்கும் போதெல்லாம் இருவரும் காதல் கடந்தே பேசினர். ஒரு நாள் அந்த ஒரு நாள் நிலா நேசன் வாய்திறந்தான்.
ரமேஷ் …. ரமேஷ் நிலாநேசனின் பேச்சில் ஈரம் அப்பியிருந்தது.
என்ன?
ஒண்ணுல்ல என்று அவன் நாணிக் கோணிப்பேசுவது ரமேசுக்கு என்னவோ போலானது.
என்னடா நெளியுற
ஒண்ணுல்ல…. ஒண்ணுல்ல…. என்று மீண்டும் மீண்டும் அவன் வளைந்து வளைந்து பேசினான்.
இல்ல என்னமோ இருக்குடா என்ற ரமேஷ் அவனை விடுவதாக இல்லை.
எப்படி சொல்றதுன்னு தெரியல?என்று நெளிந்தான்.
டேய்… சொல்லுடா . என்னமோ பொண்ணு மாதிரி இப்படி நெளிஞ்சிட்டு இருக்க எப்படி சொல்றதுன்னு தெரியல அப்பசொல்லாத உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன்டா.
அப்பச் சொல்லு
எப்பிடி சொல்றதுன்னு தெரியணுலையே சொல்லாத… டேய்… என்னைய கொலை காரன் ஆக்காதடா ஓடிப்போயிரு என்று எச்சரித்த ரமேஷின் சட்டையைப் பிடித்துக் கொஞ்சினான் நிலா நேசன் என்னடா ஒனக்கு புத்தி ஏதும் கெட்டு போச்சா? இப்படி கொழையுற ஒரு உண்மைய சொல்லணும்டா
சொல்லு
எப்படி சொல்றதுன்னு தெரியலையே
டேய்…. இப்ப நீ சாவடி வாங்க போறபாரு
டேய்….. சொல்றேண்டா என்ற நிலா நேசன் மெல்ல வாய் திறக்க ஆரம்பித்தான்.
டேய் ரமேஷ் உமா
திரும்ப வந்திட்டாடா
என்னது உமாவா?
ஆமா
அது தப்புடா அவ இன்னொருத்தனோட பொண்டாட்டி
டேய் லூசுப் பயலே….
இன்னைக்கு நான் ஒரு பொண்ணப் பாத்தேன்டா அவ ரொம்ப அழகில்ல; ரொம்ப அசிங்கம் இல்ல.நல்ல சிவப்பு இல்ல ;அதிக கறுப்பு இல்ல ;அளவான அழகு ;அதிலும் வடிவான அழகு; இது வரைக்கும் என் நெஞ்சுல நங்கூரம் போட்டு உட்கார்ந்திருந்த உமாவே இன்னொரு பெண் உருவம் கொண்டது மாதிரி வந்து நின்னா பாரு .அப்பிடியே என்னோட ஆணி வேரே அசைந்து போச்சுடா .மூச்சு விட்ட வேர் வெடிப்புகளிலெல்லாம் அவளோட புன்னகைப் பூ பூத்து என்னோட உயிரெல்லாம் புதுசா இருந்தது மாதிரி இருந்துச்சுடா .நான் இன்னொரு பிறப்பு பிறந்தது மாதிரியே இருந்துச்சுடா. இனிமே என்னோட உமா அவ தான் என்னோட உமா அவதான் என்று உணர்ச்சி மேலிடக்
கத்தினான் .இதுவரை நிலா நேசனைப் பிடித்திருந்த விரக்திக்கு விடுதலை கிடைத்ததாகவே நினைத்தான் ரமேஷ்.
மரமே மரணித்தாலும் – காதல் பூக்கள் வேர்களில் பூக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *