சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் தனுஷ், மாரி செல்வராஜ்

சென்னை, ஏப்.23–

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்த படம் கர்ணன். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இப்படம் கடந்த 9ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

கர்ணன் படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர். கொரோனா காலத்திலும் கூட வசூல் ரீதியாகவும் இப்படம் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. தனுஷ் நடித்த படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக கர்ணன் அமைந்தது. 

இந்நிலையில், கர்ணன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கர்ணனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் கைகோர்க்கிறோம் என்று அறிவிப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்தப் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

தனுஷின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *