செய்திகள்

மீஞ்சூர் சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 20 வது ஆண்டு விழா; சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள்

சென்னை, மார்ச் 23–

மீஞ்சூர் சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 20 வது

ஆண்டு விழாவில், சிறந்த மாணவர்களுக்கு, மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் பரிசுகள் வழங்கினார்.

மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 20 வது ஆண்டு விழா, பகவான் மகாவீர் அரங்கில், இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. விழாவில், சந்திரபிரபு ஜெயின் கல்வி அறக்கட்டளையின் தலைவர் வினய்சந்த் வி.ஷா தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலாளர் பிரகாஷ்சந்த் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் மதிப்புரு செயலர் லலித்குமார் ஓ.ஜெயின், மதிப்புரு இணைச் செயலாளர்கள் சுரேஷ் ரதோத், பரத் தோஷி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.வெங்கட்ரமணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

திறமையை பெருக்குங்கள்

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மக்கள் குரல், டிரினிட்டி மிரர் நாளிதழ்களின் ஆசிரியர் ஆர். முத்துக்குமார், பல்வேறு நிலைகளில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசியதாவது:–

ராணுவ ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகுந்த முதல்வர் வழிநடத்தக்கூடிய கல்லூரியில் பயிலும் மாணவர்களாகிய நீங்கள், அனைத்து துறையிலும் சிறந்து விளங்குவதில் வியப்பேதும் இல்லை. இந்த நாடு, உங்களைப் போன்ற மாணவர்களிடம் தான், அதிகமாக எதிர்பார்த்து இருக்கிறது. அதற்கு தகுதியானவர்களாகவே உருவாகி உள்ளீர்கள் என்பது, உங்களின் பல்வேறு சாதனை முயற்சிகளை பார்க்கும்போதும் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், வாழ்வில் எந்த துறையை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தாலும், அதில் முழுமையான பயிற்சியோடு செல்லுங்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வாய்ப்பு பெறுவது எளிதாக இருக்கும் என்பதோடு, நிலைத்திருக்கவும் முடியும்.

ஆனாலும், உலகம் வெகுவேகமாக வளர்ந்து கொண்டு உள்ளது. 20, 30 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த, எந்த ஒரு புதுமை தொழில்நுட்பக் கருவியும், பல ஆண்டுகளுக்கு பயன்பட்டு வந்தது. அது வானொலிப் பெட்டிகளாக இருந்தாலும், தொலைக்காட்சிப் பெட்டிகளாக இருந்தாலும், வாகனங்களாக இருந்தாலும், 20, 30 ஆண்டுகளுக்கு மாறாது. அப்படியேதான் மாறுதல்களில் இன்றி பயன்படுத்தி வந்தனர். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் வந்த புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அனைத்தும், அடுத்தடுத்த மாறுதல்களுக்கு உள்ளாகி பயன்பாடு இல்லாமல் போய் விடுகிறது.

2030 க்கு திட்டமிடுங்கள்

எனவே, மாணவர்களாகிய நீங்கள் 2030 ஆம் ஆண்டுக்கு திட்டமிட்டு, உங்கள் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் மாற்றங்களின் வேகத்தை எண்ணிப்பார்த்தால், அதில் நிற்க முடியுமா என்று தெரியவில்லை. அனைத்தும் ‘செயற்கை நுண்ணறிவு’ சார்ந்து மனிதனைப் போல் சிந்திக்கும் கருவிகள் வசம், உலகம் மாறிக்கொண்டு வருகிறது. அதற்கேற்ப உங்கள் வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொள்ளவும், தொலை நோக்கோடு சிந்திக்கவும் செய்தால்தான் வெற்றிகரமான மனிதராக வலம் வர முடியும்.

அப்போது நீங்கள் தான் எங்களைப் போன்றவர்களையும், உலகையும் வழிநடத்தப் போகிறீர்கள் என்பது மட்டும் உண்மை. அதற்கேற்ப உங்கள் வாழ்க்கைக்கான திட்டமிடல்களை அமைத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், அதற்காக வாழ்த்துகிறேன். மாணவர்களாகிய உங்களுக்கு மட்டுமின்றி, உங்கள் முன்னேற்றத்துக்கு துணையாக இருக்கும் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஒரு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

கல்லூரி முதல்வர் வெங்கட்ரமணன் பேசும்போது, இங்கு 11 இளநிலை மற்றும் 2 முதுநிலை பாடப்பிரிவுகள் நடத்தப்படுகிறது. 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பின்தங்கிய மக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதத்தில், இங்கு கல்விக் கட்டணங்களும் குறைந்த அளவிலேயே வாங்கப்படுகிறது. தரமான ஆசிரியர்களை கொண்டு பாடம் கற்பிக்கப்படுவதால், தரமான மாணவர்களை, சாதனை மாணவர்களை உருவாக்க முடிகிறது என்று கூறினார்.

இந்த விழாவில், விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள், பல்கலைக்கழக அளவில் சிறந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில், ஏராளமான மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *