வாழ்வியல்

மீஒலி அலைகளின் மூலமாக குரங்கின் மனத்தில் மாறுதல்!

அடிக்கடி தாவும் மனித மனத்தை, குரங்குடன் ஒப்பிடுவதுண்டு. ஆனால், அசல் குரங்கின் மனதை மாற்ற, ‘அல்ட்ரா சவுண்ட்’ எனப்படும் ஒலி அலைகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

மனிதன், தற்போது உள்ள சூழ்நிலைக்கு மாறாக, சில புதிய சூழல்களை கற்பனை செய்து, முடிவுகள் எடுக்கும் திறன், மூளையில், ‘சிங்குலேட் கார்டெக்ஸ்’ என்ற பகுதியில் நிகழ்வதை, மூளையியல் வல்லுநர்கள் பகுத்தறிந்துள்ளனர்.

அதேபோல, மூளையின் திசுக்கள் மீது, மீஒளி அலைகளால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதும், மருத்துவர்கள் பல காலமாக அறிந்தது தான்.

இந்த இரண்டு உண்மைகளையும் ஒரு சேர பயன்படுத்தி, சில குரங்குகளின் சிங்குலேட் கார்டெக்ஸ் பகுதி மீது துல்லியமாக மீஒலி அலைகளை செலுத்தினர் விஞ்ஞானிகள்.

இதன் தாக்கத்தில் அந்த குரங்குகள், வழக்கமாக எடுக்கும் முடிவு மற்றும் நடத்தையில் மாறுதல்கள் இருந்ததை விஞ்ஞானிகள் கவனித்தனர்.

இந்த சோதனைகளின் துல்லியத்தை உறுதி செய்த பிறகு மனிதர்கள் மீது செய்து பார்க்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மனச்சோர்வு போன்ற மனநலக் குறைபாடுகள், ‘அல்சைமர்ஸ்’ போன்ற நரம்பியல் பாதிப்புகளுக்கு புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க இந்த கண்டுபிடிப்பு பயன்படலாம்.

இது குறித்த ஆய்வுக் கட்டுரை, ‘நேச்சர் கம்யூனிகேசன்ஸ்’ இதழில் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *