செய்திகள்

மின் தடை– மின்சார பாதுகாப்பு புகார்களுக்காக 3 ஷிப்டுகளில் கூடுதலாக 10 பேர் நியமனம்

Makkal Kural Official

அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

இனி நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை

சென்னை, அக். 16–

வடகிழக்கு பருவமழையினையொட்டி தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சாரத்துறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ”மின்னகம் – மின்நுகர்வோர் சேவை மையத்தில்” ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகமான சென்னையில் முறைப்பணி ஒன்றிற்கு 65 நபர் வீதம் 3 முறைப் பணிகளாக மின்னகம் இயங்கி வந்த நிலையில், முதலமைச்சரின் அறிவுறுத்துலின் படி, வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் மின்தடங்கல் மற்றும் மின்சார பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை எவ்வித தொய்வுமின்றி தெரிவித்திட வழிவகை செய்யும் விதமாக தற்போது கூடுதலாக 10 நபர்கள் முறைப்பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் மின்சாரம் குறித்து புகார் அளிக்கும் போது, அழைப்புகளுக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும்.

மேலும், அமைச்சர், மின்னகத்தில் பெறப்படும் அழைப்புகளுக்கான இடைவெளி தற்போது 20 நொடிகளுக்கு இருப்பதை 10 நொடிகளாக குறைத்து, எவ்வித அழைப்பும் விடுபட்டு விடாமலும், அழைப்புகளை உடனடியாக இணைப்பு பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மின்னகத்தில், மின் தடை குறித்து பெறப்படும் ஒவ்வொரு புகாரும் உடனடியாக சரி செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களில் முறைப்பணியில் இயங்கி வரும் மின்னகம் மூலமாகவும், சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் அலைபேசி மூலமாகவும் புகார் சரி செய்யப்பட்டதை உறுதி செய்யப்பட்ட பின்னரே புகார்கள் முடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

மின் சேவைகள் மற்றும் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் க.நந்தகுமார், இணை மேலாண்மை இயக்குநர் விஷு மஹாஜன், இயக்குநர் கு.இந்திராணி மற்றும் அனைத்து இயக்குநர்களும் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *