செய்திகள்

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 16-–ந் தேதி அண்ணா தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, செப்.13-–

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க. சார்பில் வரும் 16-–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-–

மின் கட்டணத்தையோ, பஸ் கட்டணத்தையோ, பால் விலையையோ உயர்த்தமாட்டோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள். வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக, உண்மைகளை தண்ணீரில் எழுதியதாகக் கருதி, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

மக்களுக்கு கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி, மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த உயர்வு இம்மாதத்தில் இருந்தே அமலுக்கு வரும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியையும் சொல்லி இருக்கிறார்கள்.

அண்ணா தி.மு.க. ஆட்சியில், மின் கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட எதையுமே உயர்த்தாமல், மக்கள் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு மடிக்கணினி, சைக்கிள், தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி தொகை, மகப்பேறு நிதியுதவித் தொகை, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கினோம்.

என்றைக்கும் விடியாது

ஆனால், தி.மு.க. அரசு, அண்ணா தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை முடக்கியதோடு, சொத்து வரியையும், மின் கட்டணத்தையும் உயர்த்தி, இன்றைக்கு மேலும் மக்களை துன்பக் கடலில் ஆழ்த்தி, என்றைக்குமே விடியாது என்ற நிலைக்கு சென்று கொண்டிருப்பதை உணர்த்துகிறது.

மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அண்ணா தி.மு.க. சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், 16–-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், அண்ணா தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் பங்கேற்க அழைப்பு

மக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்து, அண்ணா தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும்.

வருகின்ற 16-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள, அண்ணா 114–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் 22–-ந் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *