செய்திகள்

மின்தடை இனி இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

சென்னை, ஜூன் 29–

பராமரிப்பு பணிகள் முடிவுற்றதால், இனி மின்தடை இருக்காது என்றும், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது மின்சாரத் துறையில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்பதால்தான் தற்பொழுது மின்தடை ஏற்படுகிறது என்று, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார். இதையடுத்து தமிழகத்தில் அடுத்த10 நாட்களுக்குள் அனைத்து பராமரிப்பு பணிகளையும் முடித்து மின்தடை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று கடந்த 19 ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

பராமரிப்பு பணிகள் நிறைவு

அதன்படி கடந்த 19-ஆம் தேதி முதல் மின் பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தப் பணிகளுக்காக ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்தில் தலா ஐந்து லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பணிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பராமரிப்பு பணிகளை முடித்து அது தொடர்பான புகைப்படம், வீடியோ பதிவு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலைமை மின் பொறியாளர்கள் அனைவரும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பராமரிப்பு பணிகள் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மின்னஞ்சல் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் ஏற்கனவே அறிவித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று தடையில்லா மின் விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

மின்தடை இனி இருக்காது

பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும். மின்தடை தொடர்பாக, சமூக வலைதளங்களில் பொத்தாம் பொதுவாக பதிவிட கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், மின் இணைப்பு எண்ணுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் மின் கட்டணம் தொடர்பாக நுகர்வோர் சேவை மையத்திற்கு வரும் புகார்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்த அவர், அதிமுக ஆட்சியில், எந்த புதிய மின் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் கடும் நிதி நெருக்கடியில் இருந்த மின் வாரியத்தை, மீட்டெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தற்பொழுது தமிழ்நாட்டில் 1.59 லட்சம் கோடி கடனுக்கு ரூபாய் 2 கோடி வட்டி மட்டுமே செலுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *