சிறுகதை

மின்சாரம் தேவை- ராஜா செல்லமுத்து

இப்படி நடந்திருக்கக் கூடாது என்று பலமுறை சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டான் சேகர் .

அவனுக்குள் அந்த காயம் ஆறாமல் இருந்தது. வீட்டுக்கு வந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது கூட அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை .

ஒரு கட்டத்தில் அழுது விட்டான்.

நீ வேணும்னே இதப் பண்ணலையே? எல்லா நேரமும் அது பத்தியே நினைக்காத? நீ பண்ணது தப்பு இல்ல. எதாச்சும் தெரிஞ்சு நடந்ததுன்னா. அதுக்காக நீ வருத்தப்படனும் . இது அவசியமில்ல என்ற நண்பர்கள் சொன்னாலும் சேகருக்கு அந்த வடு ஆறவே இல்லை. நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தான்.

வெட்ட வெளி மொட்டை மாடியில் நடுநிசி கடந்த பொழுது. அவனும் தூங்காமல் மற்றவர்களையும் தூங்க விடாமல் அந்த ஈரமானது அவனைத் தூங்க விடாமல் செய்தது .

நீ போய் அந்தப் பெரியவர பார்த்தியா ? என்று கேட்டான் இன்னொரு நண்பன்.

இல்ல அதுக்கு அப்புறம் நான் பாக்கல என்று பதில் சொன்னான் சேகர்.

தப்பு இல்ல சேகர் மனுஷனா இருந்தா சரி சமாளிக்கலாம்.. இதே ஒரு வாகனமா இருந்திருந்தா அந்த பெரிய நிலைமை என்னாகி இருக்கும்? என்று நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள்.

அதை ஆமா என்று ஆமாேதிப்பது போல தலையாட்டினான் சேகர்.

வீணா போன கரண்ட் அப்ப திடீர்னு போயிடுச்சு. இல்லன்னா இந்த மாதிரி நடந்திருக்காது. கையில இருந்த செல்பாேன்லயும் சார்ஜ் இல்லாம போச்சு.

சரி ரோடு தான என்ன இருக்க போகுதுன்னு நடந்து வந்துட்டேன். ஆனா அந்த பெரியவர் நடக்க முடியாம கையிலே நடந்துட்டு இருந்தது தெரியாம தான் அவர மிதிச்சு அவர் மேல விழுந்ததுனால அவர் ரொம்ப அழுதுட்டார். என்னோட வெயிட் அவரால தாங்க முடியல . அப்புறம் ரோட்ல அங்கங்க நடந்துகிட்டு இருந்தாங்க. என்னையும் அந்தப் பெரியவரையும் தூக்கி விட்டாங்க. அந்த பெரியவர் தூக்கி நிறுத்துனாக் கூட அவரால நிக்க முடியல. காரணம் வயோதிகம் . ஒடிஞ்சு பாேன முதுகு. அப்படிப்பட்ட மனுஷன் மேல நான் விழுந்துட்டேனே. அப்படிங்கறது தான் என்னோட ஆதங்கம். வருத்தம் இந்த பாழாப் போன கரண்ட் மட்டும் அப்படி கட் ஆகலைன்னா இந்த விஷயம் நடந்திருக்குமா? நான் சரியா நடந்திருப்பேன். அந்த பெரியவரும் அவர் பாட்டுக்கு போயிருப்பார். கரண்ட் இல்ல அப்படிங்கற காரணத்தினால தெரியாம நான் அவர மிதிச்சு கீழே விழுந்து என்னென்னமோ ஆயிப்போச்சு. வருத்தமா இருக்கு என்று மேலும் மேலும் அதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் சேகர்.

இல்ல சேகர் இது வேணும்னே செஞ்ச தப்பு இல்ல. நீ அப்படி செய்யவும் மாட்டே. இது அந்த ஏரியாவில் கரண்ட கட் பண்ண பாவிக்கு தான் இந்த தண்டனை போய் சேரணும். உனக்கு இல்ல. வா நாம போயி அந்தப் பெரியவர பார்த்துட்டு வருவோம் என்ற அந்த நடுநிசியில் கூட நண்பர்கள் சேகரின் வருத்தத்திற்காக பரிந்து பேசிக் கிளம்பினார்கள்.

சேகரும் சரி என்று கிளம்பினான் எந்த இடத்தில் அந்த பெரியவரைத் தெரியாமல் மிதித்து கீழே விழுந்தானாே அதே இடத்தில் போய் நின்றான்.

சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அந்த பெரியவர் இருப்பது தெரியவில்லை. நடுநிசி கடந்த பொழுதில் மனிதர்கள் நடமாட்டம் கூட இல்லாமல் இருந்தது.

போலீஸ் வேன் சைரன் சத்தத்துடன் தொலைவில் வருவது கேட்டது.

சரி இனி அந்த பெரியவர நாம பாக்க முடியாது. வீட்டுக்கு கிளம்பலாம்; காலைல பாக்கலாம் என்று சொல்லி நண்பர்கள் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

அப்போது அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து ஒரு முனகல் சத்தம் கேட்டது என்ன?என்று உன்னிப்பாகக் கவனித்த நண்பர்கள் சத்தம் வரும் திசை நோக்கி நடந்தார்கள் .

அங்கே ஒரு பெரிய வீட்டின் காவலாளி சேகர் உட்பட்ட நண்பர்களைப் பார்த்து

என்ன தம்பி கொஞ்சம் கடுமையான குரலில் விசாரித்தார்.

இல்ல சார் என்று உண்மையைச் சொல்ல முடியாமல் திணறினான் சேகர்

முனகல் சத்தத்தை உன்னிப்பாகக் கவனித்ததைத் தெரிந்து கொண்ட அந்த காவலன்

என்ன தம்பி ஒரு ரெண்டு மூணு மணி நேரத்துக்கு முன்னாடி இந்த ஏரியாவில கரண்ட் போயிடுச்சு. ஒரு பய கரண்ட் பாேன நேரத்துல பெரியவர மிதிச்சு விழுந்துட்டானாம். வலி தாங்க முடியாம படுத்து இருக்காரு அந்த கிழவரு. அவருக்கு சொந்த பந்தம்னு யாரும் இல்ல. எந்திரிச்சு நடக்க முடியாத நிலைமை வேற என்று காவலாளி சொன்னபோது ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

ஐயா நாங்க அந்த பெரியவரை பார்க்கலாமா? என்ற போது

தாராளமா பாருங்க என்று அந்த காவலாளி வழிவிட்டார்.

முதலில் சென்ற சேகர் அந்தப் பெரியவரை அடையாளம் கண்டு இவரைத்தாண்டா நான் மிதிச்சது என்று சொல்ல

தூக்குங்கடா ஆஸ்பத்திரிக்கு என்று அத்தனை பேரும் அந்தப் பெரியவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினார்கள்.

எங்க கொண்டு போறீங்க? என்று அந்தக் காவலாளி கேட்க

ஆஸ்பத்திரிக்கு என்று சொல்லிய சேகர்

சரி சரி ஏதோ நல்லது பண்ணா சரி என்று தலையை ஆட்டினார் அந்தக் காவலாளி .

அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒற்றை ஆட்டோவை நிறுத்தி அந்தப் பெரியவரை ஆட்டோவில் ஏற்றினார்கள்.

24 மணி நேர ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

அந்தப் பெரியவர் இருளில் தன்னை மிதித்தது சேகர் தான் என்பது தெரியாமல் அத்தனை பேரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு,

தம்பி நீங்க நல்லா இருக்கணும்; எனக்கு யாரும் இல்ல. யாரோ பையன் தெரியாம என்னை மிதிச்சிட்டு போய்ட்டான். அவன சொல்லி குத்தம் இல்ல. நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. நீங்க எனக்கு உதவி செய்றீங்க; இதுதான் தம்பி கடவுள் .நம்ம யாரையும் தெரியாம செஞ்ச தப்புக்கு தண்டனை இல்லை. திட்டவும் கூடாது. அப்படி பண்ணாததால தான் நீங்க என்ன வந்து காப்பாத்தி இருக்கீங்க என்று அந்தப் பெரியவர் சொன்னபோது சேகருக்குக் கண்ணீர் வந்தது

சாப்பிடுறீங்களா? என்று சேகர் கேட்க

சரி என்று தலையாட்டினார் அந்தப் பெரியவர்.

சேகரின் நண்பன் ஒருவன் கிழவருக்கு டிபன் வாங்கச் சென்று கொண்டிருந்தான்.

அதுவரையில் வெளிச்சமாக இருந்த மருத்துவமனை மின்சாரம் துண்டிக்கப்பட்டது .

இப்பயும் கரண்ட் போச்சா .இந்த கரண்ட் எப்ப போகும் .எப்ப வரும்னு யாருக்கும் தெரியாது தம்பி. பாத்து ஒக்காருங்க என்றார் அந்தப் பெரியவர்.

இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் மின்சாரம் 24 மணி நேரமும் தேவை தம்பி ,ஏன் இங்க எல்லாம் கரண்ட கட் பண்றாங்க என்று அந்த பெரியவர் கேட்டபோது,

சேகர் உட்பட அத்தனை பேரும் கரண்டைச் சபித்தார்கள்,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *