இந்திய விஞ்ஞானிகோபால் கண்டுபிடிப்பு
அறிவியல் அறிவோம்
ஏழ்மையான பின்புலத்தில் கஷ்டங்கள் நிறைந்த சூழ்நிலையில் இருந்து தன் அறிவாற்றலலாலும் விடாமுயற்சியாலும் இளம் விஞ்ஞானியாக உருவெடுத்துள்ளார் கோபால்.
வாழைப்பழச் சாறு மூலம் ஹேர் டை உருவாக்குவது, காகிதக் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது முதலானவை கோபாலின் தனித்துவமான கண்டுபிடிப்புகள்.
5000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தரக்கூடிய ‘ஜி ஸ்டார் பவுடர்’, 50 ஆயிரம் வால்ட் மின்சாரத்தை சேமிக்கக் கூடிய ‘ஹைட்ரோ எலக்ட்ரிக் பயோ செல்’, சூரிய சக்தியையும் காற்றையும் கலந்து உருவாக்கப்பட்ட ‘சோலார் மைல்’ எனும் இவரது கண்டுபிடிப்பு மூலம் காற்று 2 கிலோமீட்டர் வேகத்தில் வீசினால்கூட மின்சாரத்தை சேமிக்க முடியும்.
இவரது கண்டுபிடிப்புகளில் ‘கோபாலசகா’ மிகவும் கவனத்துக்குரியது. இது அணு ஆயுதத் தாக்குதலால் ஏற்படக்கூடிய ரேடியேஷனை குறைக்கவல்லது. அணு ஆயுதத் தாக்குதலால் ஏற்படும் ரேடியேசன் நூறு ஆண்டுகளுக்கு தாக்கத்தை தரும் நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குள் அணு ஆயுத ரேடியேசனை இந்தக் கண்டுப்பிடிப்பின் மூலம் அகற்றிடலாம். டயப்பர் தயாரிப்புகள், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், டிஷ்யூ பேப்பர், ஹேர் டை என பல விதங்களில் பலன் தருகிறது இவரது ‘பனானா நானோ ஃபைபர் அண்ட் கிறிஸ்டல்’ கண்டுபிடிப்பு.
பீகாரின் பகல்பூரிலுள்ள துருவ்கஞ்ச் என்னும் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் விஞ்ஞானி கோபால்,
இதுவரை 8 சிறார் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றிருக்கும் கோபால் தற்போது டேராடூனில் உள்ள அரசு கிராஃபிக் ஈரா இன்ஸ்டிட்யூட்டின் சோதனைக் கூடத்தில் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார்.
ஜார்கண்டில் ஒரு பரிசோதனைக் கூடம் அமைத்து அங்கு ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
துள்சிபூரிலுள்ள மாடல் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை பயின்ற கோபால், 2013-14இல் ‘வாழைப்பழ பயோ செல்’ கண்டுபிடிப்புக்காக இன்ஸ்பையர்டு விருது பெற்றார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். 2008ஆம் ஆண்டு அவரது கிராமத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அது எல்லாவற்றையும் புரட்டிப்போட்டுவிட்டது.
பத்தாம் வகுப்புக்குப் பிறகு தன்னால் படிக்கவைக்க இயலாது என்று கோபாலின் தந்தையும் விவசாயியுமான பிரேமரஞ்சன் குமார் கூறினார். ஆனால், கோபால் தன் முயற்சியைக் கைவிடவில்லை. ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான முயற்சிகளை ஆரம்பித்தார். 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31இல் பிரதமர் மோடியை சந்தித்தார் கோபால்.
பிரதமர் மோடியால் அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்னோவேசன் பவுண்டேசனுக்கு அனுப்பப்பட்டார் கோபால். அங்குதான் 6 கண்டுபிடிப்புகளை அவர் சாத்தியமாக்கினார்.தற்போது, உலகின் 30 ஸ்டார்ட்-அப் விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்கிறார் கோபால். அபுதாபியில் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள உலகின் மிகப் பெரிய அறிவியல் கண்காட்சியில் தலைமை உரையாற்றப் போகிறவர்களில் அவரும் ஒருவர். அந்தக் கண்காட்சியில் உலக அளவில் 6000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்துகொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘நாசா’ மூன்று முறை வழங்கிய ஆய்வுப்பணி வாய்ப்புகளை வழங்கி அழைத்தும் ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பையும் நிராகரித்துவிட்டார்.
இந்த மறுப்புகளுக்கு அவர் கூறும் ஒற்றைக் காரணம்:
“தாய்நாட்டில் சேவைபுரிவதே என் லட்சியம்.”என்பதே.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 100 குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் கோபால். இதற்கான பணிகளை 2019-ல் தொடங்கிவிட்டார்.