ராமநாதனுக்கு சென்னையில் நான்கு, ஐந்து வீடுகள் இருந்தன. அவருக்கு சொத்து என்றால் வீடுகள் மட்டும் தான். அசையாத சொத்துக்களை வாடகைக்கு விட்டுவிட்டு அசையும் சொத்துக்கள் நிறைய வாங்கி இருந்தார் ராமநாதன்.
பண விஷயத்தில் கறார் பேர்வழி வாடகைக்கு குடியிருப்பவர்கள் மாத வாடகை 5 ஆம் தேதிக்குள் தரவில்லை என்றால் அவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் அடுத்த மாதமே வீட்டை விட்டுத் துரத்தி விடுவார். குடியிருப்பவர்கள் எவ்வளவு கெஞ்சினாலும் அவரது மனது மசியாது. பணம் ஒன்றே குறிக்கோள் என்று இருப்பவர் ராமநாதன்.
அதனால் தான் என்னவோ அவருக்கு குழந்தை பாக்கியம் கிடையாது. திருமணமாகி 30 வருடங்களுக்கு மேலாகியும் மனைவி கருத்தரிக்காமல் இருந்தாள். அத்தனை சொத்துக்கும் யார் வாரிசு என்பது அவர்கள் ராமநாதன் வீட்டில் அடித்துக் கொள்வார்கள் ராமநாதனுடன் பிறந்த அண்ணன் தம்பிகளுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். மொத்த பேரும் ராமநாதன் எப்போது சாவார் எப்போது சொத்தை பிரத்துக் கொள்ளலாம் என்று சண்டை போட்டுக் கொள்வார்கள்.
இதை எல்லாம் தெரிந்த ராமநாதன் அசட்டு சிரிப்பு சிரித்துக் கொள்வார்
எனக்கு புள்ள இல்லைன்கிற ஒரே காரணத்துக்காக நீங்கெல்லாம் சொத்துல பங்கு போட வரீங்களோ என்னமோ. கடவுள் எனக்கு ஒரு புழு பூச்சியை கொடுக்காம விட்டுட்டான். அப்படியே ஏதாவது எனக்கு வாரிசு கீரிசு வந்து இருந்தா நீங்க எல்லாம் இந்தப் பக்கம் வர முடியுமா? என்னமோ தெரியல. கடவுள் எனக்கு அப்படி ஒரு பாக்கியத்தை கொடுக்கல . நான் இருக்கும் போதே இவ்வளவு சண்டை போடுறீங்களே? நான் இல்லாத போது எவ்வளவு சண்டை போடுவீங்க? என்று உடன் பிறந்தவர்களை திட்டுவார் ராமநாதன்.
அவர் பணத்திற்காக 10 அடி பாய்ந்தால் அவரின் உடன்பிறந்தவர்கள் 100 அடி பாய்வார்கள். அந்தக் குடும்பமே பணம் பணம் என்ற பேராசையில் மூழ்கிக்கிடந்தனர் ராமநாதனுடன் பிறந்தவர்கள்.
கூடப்பிறந்தவர்கள் பணம் சேர்ப்பது பணம் சம்பாதிப்பது ஒரு பொருட்டாக தெரியவில்லை; காரணம் அவர்களுக்கு குழந்தை குட்டிகள் இருந்தனர். எந்த குழந்தை, குட்டி, வாரிசு இல்லாத ராமநாதன் பணத்துக்கு அலைவது தான் பெருத்த வருத்தமாக இருந்தது.
அதுவும் அவர் வாடகைக்கு விடும் வீடுகளில் அவர் வைத்தது தான் மின்சாரக் கட்டணம் .அரசாங்கத்தில் மின் கட்டணம் ஒரு விலை என்றால் ராமநாதன் ஒரு விலை வைத்திருப்பார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்திருந்ததை அவர் எந்த கணக்கிலும் வைத்துக் கொள்ள மாட்டார்.
வாடகைக்கு குடியிருக்கும் ஆட்களிடம் ஒவ்வொரு யூனிட்டுக்கும் பத்து ரூபாய் வசூல் செய்தார்.
என்னங்க கரண்ட் பில் இவ்வளவு அதிகமா இருக்கு வீட்டு வாடகை கூட அதிகம் தான். ஆனா அத விட கரண்ட் பில் ரொம்ப மோசமாக இருக்குது. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று குடியிருப்பவர்கள் கேட்டால் அடுத்த நிமிடமே இடத்தை காலி பண்ணச் சொல்லுவார்.
கோடிக்கணக்கான பணத்தை போட்டு வீடு கட்டி வச்சிருக்கேன். கரண்டு உங்களுக்கு சும்மா கொடுப்பாங்களா? ஒரு யூனிட்டுக்கு பத்து ரூபா அப்படிங்கறது உங்களுக்கு பெருசா பெருசா தெரியுது. ஆனா எலக்ட்ரிக்ட்ல ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா அத நான் தான் சரி பண்ணனும். ஈபி ஆபீஸ்ல இருந்து, ஆள கூட்டிட்டு வரணும்; அவங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். ஏதாவது காயில் கீழே போயிருந்தா, அத மாத்தணும் எவ்வளவு செலவு இருக்கு அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் நான் உங்கள்ட்ட யூனிட்டுக்கு 10 ரூபாய் கேட்கிறேன். என்னமோ அரசாங்கத்தை விட நான் ஒரு வெலை வைக்கிறேன் அப்படின்னு தப்பா பேசக்கூடாது என்று ராமநாதன் கொஞ்சம் கறாராகப் பேசினார்.
வீட்டு வாடகை, முறை வாசல் எலக்ட்ரிக் பில் என்று ஒவ்வொரு வாடகை வீட்டிலும் குடியிருப்பவர்கள் ராமநாதனையும் அவர்கள் மனைவியும் திட்டாத ஆட்கள் இல்லை .
அந்தாளுக்கு தான் வாரிசுங்குறது ஒண்ணுமே இல்ல .எதுக்கு இப்படி காசுக்கு நான் ஏன் அலையுறானுங்க? காசவா கொண்டு போக போறான். நல்ல மனசு வேணும். என்று அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் ராமநாதனைப் பேசுவார்கள்.
அதெல்லாம் கண்டுகொள்ளாத ராமநாதன் தனக்கு வீட்டு வாடகை முறை வாசல், எலக்ட்ரிக்கல் பில் முதல் தேதியில் யார் கொடுத்தாலும் அவர்களை வீட்டை விட்டு அனுப்பவே மாட்டார்.
அதுவும் ஒன்னாம் தேதி ஆனால் பணம் கொடுத்தவர்கள் என்ன தவறு செய்தாலும் என்ன ஏது என்று கூட கேட்க மாட்டார் ராமநாதன் .
ஒரு சிலர் வீட்டில் குடியிருக்கும் சிலர் இராமநாதனிடம் நேராவே கேட்டு விட்டார்கள்.
ஏங்க எலக்ட்ரிக் பில்லு அரசாங்கத்துல ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு விலைன்னு நிர்ணயிச்சிருக்காங்க. ஆனா நீங்க மட்டும் தனியா ஒரு வெலை வைக்கிறிங்க. இது தவறு என்று ஒரு வீட்டில் குடியிருப்பவன் கேட்டால் மறு மாதமே அவர்கள் அந்த இடத்தை விட்டு காணாமல் போயிருப்பார்கள்.
இப்படி பிரச்சினையில் சிக்கிய ஒரு வாடகை வீட்டுக்காரன் ரொம்பவே இராமநாதனைத் திட்டிச் சென்றான்.
நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டேன். கண்டிப்பா கடவுள் இருந்தா உனக்கு சரியான பாடம் புகட்டும் என்று சாபம் விட்டது போல விட்டுச் சென்றான் பாதிக்கப்பட்ட அந்த நபர்.
அடப் போடா. பண்பானவங்க சொல்லே இங்க சபை ஏற மாட்டேங்குது . பெரிய உத்தமன் சொல்ல வந்துட்டாரு. இவர் சொல்லா பலிக்கப் போகுது; போடா… என்று அந்த வாடகை வீட்டுக் காரனைத் திட்டி அனுப்பினார் ராமநாதன்.
ராமநாதனை அவன் சாபம் விட்டுப் போன ஏழாவது நாளில் ராமநாதன் இறந்து தான் போயிருந்தார்.
அந்த வாடகை வீட்டுக்காரன் சபித்தது பழித்து விட்டது போல என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள் .
ஆனால் அப்படியும் அவர் ராமநாதன் இறந்தது ஒரு விபத்து என்பதால் கவர்மெண்ட் மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுமதிக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணை அது இது என்று ஆனதால் அது தற்கொலையோ அல்லது கொலையோ அல்ல எதார்த்தமாக நடந்த ஒரு விஷயம் தான் என்று புகார் பதிவு செய்யப்பட்டது
எப்படிம்மா இறந்தார் உங்க வீட்டுக்காரர் என்று ராமநாதன் மனைவியிடம் ஒரு போலீஸ் கேட்க
மூச்சு விட கூட முடியாம இருந்த அந்தப் பெண் வாய் திறந்து பேசினாள்.
சார் எப்பவும் போல வாடகை வீட்டில குடி இருக்கிறவங்களுக்கு டேங்க்ல தண்ணீர்போடுவாரு
காலைல என்னமோ தெரியல மோட்டார் சுவிட்ச் போட்டது தான் மாயம். அவர் மேல கரண்ட் சாக்கடைச்சு தூக்கி எறிஞ்சிடுச்சு இறந்துட்டாரு; மத்தபடி எங்களுக்கு எதுவும் தெரியாது சார் என்று ராமநாதனின் மனைவி அழுகையும் கண்ணீராகச் சொன்னாள்
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராமநாதன் வீட்டில் குடியிருக்கும் வாடகை வீட்டுக்காரர்கள் அந்தக் காலத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க.
துப்பாக்கி எடுத்தவனுக்கு துப்பாக்கில தான சாவு ; அறிவாள் எடுத்த அறிவாள் தான் சாவு; ரவுடித்தனம் பண்ணவனுக்கு ரவுடிகளால் தான் சாவு; அப்படின்னு பெரிவங்க சொன்னது உண்மையா பலிச்சுக்கிட்டு தான் வருது .
நம்ம ராமநாதன் எந்த மின்சாரத்துக்கு அதிகமா கரண்ட் பில் வசூல் பண்ணினாரு. அன்னைக்கே அவருடைய மரணம் மின்சாரத்தில் தான் இருக்கும் அப்படின்னு நான் நினைச்சுட்டேன்.
ஏன்னா அரசாங்க விதிக்கிற விலையை விட இவர் அதிக மின்சாரக் கட்டணம் வசூல் பண்ணாரு.
மனுசன ஏமாற்றலாம் .ஆனால கடவுளை யாரும் ஏமாத்த முடியாது: எத்தன பேரு பாவத்தை சம்பாதித்து இருப்பாரு இந்த ராமநாதன் அதுதான் அந்த மின்சாரமே அவரை காென்னு புடுச்சுப்பா என்று ராமநாதன் இறந்த வீட்டில் பேசிக் கொண்டார்கள் .
வாடகை வீட்டிற்குள் இருப்பவர்கள் ஒன்று தெரியுமா? ராமநாதன் இறந்தது மின்சாரத்தில தான். அவரப் புதைக்கல எரிக்கத்தான் போறாங்க .
அதுவும் மின்சாரத்திலதானாம்.
அப்படின்னா அந்த மின்சாரமே ராமநாதன கொன்னுருச்சி போல எவ்வளவு கோவம் இருந்திருக்கு பாருங்க கரண்டுக்கு என்று இன்னொருவர் சொல்ல,
இருவரும் ஆமாங்க ; இது புதுசா இருக்கே என்று பேசிக் கொண்டார்கள் ராமநாதன் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்கள்.
பொழுது சாயும் நேரம் ராமநாதனை எரிக்க ஏற்பாடு செய்ய வண்டியும் வந்தது.
அவருடைய பிணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது மின்சார மயானம்.