ஐசாவ்ல், நவ. 15–
மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி சரிந்து ஏற்பட்ட விபத்தில் உள்ளே சிக்கிக்கொண்ட 8 தொழிலாளர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலம் ஹ்னதியால் மாவட்டம் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென குவாரி சரிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் 12 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
8 பேர் உடல்கள் மீட்பு
குவாரி விபத்து குறித்த தகவலறிந்து, எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இன்று காலை வரை 8 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 4 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.