செய்திகள்

மிக்ஜாம் புயல் மழை பாதிப்புகளை மதிப்பீடு செய்ய தமிழகத்திற்கு மத்திய குழு நாளை வருகை

சென்னை, டிச.10-

மிக்ஜாம் புயல் மழை பாதிப்புகளை மதிப்பீடு செய்ய தமிழகத்திற்கு மத்திய குழு நாளை (திங்கட்கிழமை) வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் கனமழை பெய்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 109.41 செ.மீ. மழை பெய்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. பல இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிந்து ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கார், மோட்டார் சைக்கிள் போன்ற பல்வேறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.

இந்த வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த 7-ந் தேதி சென்னைக்கு வந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசின் 2-வது தவணைத்தொகையான ரூ.450 கோடியை விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

முன்னதாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் போன்ற பொது கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5,060 கோடி வழங்க பிரதமருக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தேன். அதுகுறித்த மனுவையும் மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளேன். இழப்பீடுகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசின் குழு விரைவில் தமிழ்நாடு வர உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, உரிய நிதி உதவியை மத்திய அரசு விரைவில் வழங்கும் என்று மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றார்.

இந்த நிலையில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய சேதங்களையும், அதில் தமிழக அரசு மேற்கொண்ட நிவாரணப்பணிகள் பற்றியும் நேரடியாக சென்று அறிந்து மதிப்பிடுவதற்காக மத்திய குழுவை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. புயல் சேதம் குறித்த இறுதி அறிக்கையை தமிழக அரசு சமர்ப்பித்ததும் தமிழ்நாட்டிற்கு அதே மத்திய குழு சென்று, பாதிப்பு குறித்த விரிவான மதிப்பீட்டை தயாரிக்கும்.

பின்னர் மத்திய அரசு வழங்க வேண்டிய உதவித்தொகை குறித்த இறுதி பரிந்துரைகளை மத்திய குழு அளிக்கும். அதோடு, மிக்ஜாம் புயல் மிகக் கடுமையானதாக கருதப்பட வேண்டுமா? என்பது குறித்தும் மத்திய குழு பரிந்துரைக்கும்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி இந்த குழுவுக்கு தலைமை வகிப்பார். மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.

ஒரு வாரத்திற்குள் இறுதி அறிக்கை

எனவே மத்திய குழுவின் தலைவரின் கீழ் செயல்படுவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்கள் தரப்பில் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். அவர்களின் பெயர், தொடர்பு எண், முகவரி போன்றவற்றை மத்திய உள்துறைக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள தீவிரத்தை உணர்ந்து அங்கு மத்திய குழு சென்று நாளை (திங்கட்கிழமை) மாலையில் இருந்து புயல் பாதிப்புகளை மதிப்பிடும் பணிகளை தொடங்க உள்ளது. மதிப்பிடும் பணிகளை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய பின்னர் ஒரு வாரத்திற்குள் இறுதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் நகல் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, மத்திய குழுவிற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *