செய்திகள்

‘மிக்ஜாம்’ புயலின் நகர்வை கண்காணிக்கும் 10 ரேடார்கள்

சென்னை, டிச.3–

தமிழகம் மற்றும் ஆந்திரா கடல் பகுதியை நோக்கி வரும், ‘மிக்ஜாம்’ புயலின் ஒவ்வொரு நகர்வையும், 10 ‘ரேடார்’கள் வாயிலாக, இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவான, ‘மிக்ஜாம்’ புயல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களை சூழ்ந்தவாறு, ஆந்திராவுக்கு நகர உள்ளது. அதனால், கடலோர மாவட்டங்களில், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் கரையை நோக்கி நகரும் புயலை கண்காணிக்கும் பணியில், 10 ரேடார் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சென்னை துறைமுகம் மற்றும் பள்ளிக்கரணையில் செயல்படும், ‘எஸ் பேண்ட்’ மற்றும் ‘எக்ஸ் பேண்ட்’ ரேடார்கள்; ஸ்ரீஹரிகோட்டா, காரைக்கால், மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம், கோபால்பூர் மற்றும் பாராதீப் ஆகிய இடங்களில் உள்ள ரேடார்கள், வங்கக்கடலில் சுழன்று வரும் மிக்ஜாம் புயலின் மாற்றங்களை கண்காணித்து வருகின்றன.

ஒவ்வொரு எல்லைக்குள்ளும் புயல் வரும்போதும், ஒவ்வொரு ரேடாரில் இருந்து சிக்னல்கள் மற்றும் தரவுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மிக்ஜாம் புயலின் மையப் பகுதி, வெளிப் பகுதி, அதற்கு முன், பின்னால் சுழலும் காற்று, அதன் வேகம் என, அனைத்தையும் ரேடார்கள் கண்காணிக்கின்றன.

மேலும், கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள ரேடார்கள், மிக்ஜாம் புயல் நகர்வின் பின்னணியில், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடலிலும், நிலப் பகுதியிலும் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து வருகின்றன

இதற்காக, சென்னை வானிலை ஆய்வு மையத்துடன், கோல்கட்டா, ஐதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, திருவனந்தபுரம், அமராவதி ஆகிய வானிலை ஆய்வு மையங்கள் அடங்கிய குழுக்களும், தரவுகளை சேகரித்து வருகின்றன.இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:–

இந்திய வானிலை ஆய்வு மையத்தின், அனைத்து ரேடார்களும் சிறப்பான நிலையில் செயல்படுகின்றன. தற்போது, ஸ்ரீஹரிகோட்டா, சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை, காரைக்கால் மற்றும் மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களின் ரேடார்களில் இருந்து, 24 மணி நேர கண்காணிப்பு தரவுகள் பெறப்படுகின்றன. வானிலை ஆய்வு மையத்தின் சென்னை அலுவலகத்தில், சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அத்தியாவசிய அரசு துறைகளுக்கு, 24 மணி நேர கண்காணிப்பு தரவுகள், தகவல்கள், முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *