ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை, ஏப்.28-–
‘மிக்ஜம்’ புயல், மழைச்சேத நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூ.38 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.276 கோடி நிதி வழங்கியுள்ளது. எனவே தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு மழை வெள்ள நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-–
`மிக்ஜம்’ புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2 ஆயிரத்து 477 கோடி ரூபாய். ஆனால், மத்திய அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் சுப்ரீம் கோர்ட்டை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.