செய்திகள்

மிகப்பெரிய வேலைவாய்ப்பு மையமாக உயர்ந்து வரும் இஸ்ரோ


ஆர். முத்துக்குமார்


இஸ்ரோ விண்வெளி ஆய்வுகளில் புது சாதனைகளை தொடர்ந்து செய்து வருவதை உலகமே பாராட்டிக் கொண்டிருப்பதை அறிவோம்.

விண்வெளிப் பயணங்களுக்கு ராக்கெட் மிக முக்கிய பங்காற்றுவதை பார்த்து வருவதால் அது நமது பொறியியல் துறை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வல்லமை இருக்கிறதா? அதில் பிரகாசமான எதிர்காலம் உண்டா? என்ற கேள்விகள் எழத்தான் செய்யும்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் போதெல்லாம் அதன் துல்லிய செயல்பாடுகளின் பின்னணியில் பல நூறு தனியார் நிறுவனங்களின் கைவண்ணத்தால் உருவான பல அதிமுக்கிய கருவிகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை மறந்து விடக்கூடாது.

அதீத வெப்பத்தில் உந்துதல் சக்தியை பெற்று காற்று மண்டலத்தை கிழித்து வேல் போல் பறக்கும்போது அந்த வெப்பத்தை தாங்கியாக வேண்டும். அச்சமயத்தில் ராக்கெட்டின் ஒரு பகுதி கழன்று பிரிந்து சென்று விடவும் வேண்டும்.

சில நொடிகளில் விண்வெளியின் அதீத குளிர் பிரதேசத்தில் பயணிக்க ராக்கெட் அந்த குளிரையும் தாங்கியபடி எடுத்துச் செல்லும் செயற்கை கோளையோ ? ஆராய்ச்சிகளுக்கு உதவும் பிற கருவிகளையோ முக்கிய துல்லியமாக வெளிவட்டப்ப பாதையில் நிலை நிறுத்தியாக வேண்டும்.

அதையும் செய்துவிட்டு மின்சார சாதனங்கள் நவீன தொலைத்தொடர்பு கணினிகளின் உதவியுடன் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்க வேண்டும்.

இதையெல்லாம் நாசா பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு அதன் பயனாக கிடைக்கும் புதுப்புது கருவிகள், மாற்று திட்டங்கள் கொண்டு மேம்பட்ட கோட்பாடுகளுடன் முன்னேற்றங்கள் கண்டு வருகிறது.

நாசாவின் விஞ்ஞானிகள் குழுமத்தில் இந்திய இளம் விஞ்ஞானிகளின் பங்களிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் நிரம்பவே இருப்பதை மறந்து விடக் கூடாது.

பெரிய கல்லூரி வளாகங்களில் சேர்ந்து படிக்கும் பல இந்திய மாணவர்கள் பின்னர் ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றுவது வாடிக்கை.

அந்த மாணவர்கள் மற்ற ஆராய்ச்சியாளர்களுடனும், அத்துறை சார்ந்த தலைமை பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்களுடனும் இணைந்தே பணியாற்றுவர்.

ஆக அங்கேயெல்லாம் மாணவர்கள் முழு மனதுடன் செயல்பட ஏற்ற சம்பளமும் ஆய்வு கருவிகளும் கிடைத்து விடுகிறது.

எல்லா வளாக ஆய்வுகளும் பல்வேறு பிற துறைகளில் இருந்தாலும் இறுதியாக பயன்பாட்டிற்கு தேவையானதை நிறுவனங்களும் நாசா போன்ற அமைப்புகளும் தேடிக் கண்டுபிடித்து அதை பெற்றுக் கொள்கின்றனர்.

அது தரும் வருவாய் கொண்டு மாணவர்களுக்கு நல்ல ஊதியமும் புதப்புது கருவிகளும் தொடர்ந்து தங்குதடையின்றி பெற முடிகிறது.

இதுபோன்ற வசதிகளும் வாய்ப்புகளும் சீனாவிலும் இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர வேண்டிய தருணம் வந்து விட்டது.

நன்கு படித்த இந்திய மாணவன் மேல் படிப்புக்காக அயல் நாடுகளுக்குச் செல்ல ஓரு முக்கிய காரணம் ஆரம்பம் முதலே கவுரவமாக வாழ நிதி உதவிகள், தேவையான தொழில்நுட்பங்கள் கிடைப்பதால் தான்.

குறிப்பாக கட்டணமேயில்லா அரசு சார் வளாகங்களில் இருந்து வெளி வரும் மாணவர்கள் குறிப்பாக ஐஐடி மாணவர்கள் வளாக பணி சேர்ப்பு நாளில் அதிகப்படி ஊதியம் தந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர வைத்து விடுகிறார்கள்.

இந்த ஓட்டப்ப பந்தயத்தில் இந்திய தனியார் நிறுவனங்கள் செய்வது அறியாது தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

அது போன்று தான் மத்திய அரசின் நிறுவனங்களும் பணி சேர்ப்பில் இதுவரை நடைமுறையில் இருக்கும் பல்வேறு அம்சங்களினால் கட்டுண்டு சிறப்பாகச் செயல்பட முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பரிதாப நிலையில் உள்ளது.

நல்ல விஞ்ஞான சிந்தனை கொண்ட நமது இளைஞர்கள் நல்ல ஊதியம், மேம்பட்ட வாழ்க்கை வசதிகள் என்பதால் மேலை நாடுகளுக்குச் சென்றுவிடும் நிலை இனி மாறியாக வேண்டும்.

சர்வதேச சிறப்பு அம்சங்களை பார்த்து வியந்து மலைத்துப்போய் நிற்கும் நிலை மாற நாமும் நமது விஞ்ஞானம் சார்ந்த துறைகள் புதியப் பாதையில் பயணித்தாக வேண்டிய காலக்கட்டம் வந்து விட்டது.

அதை உணர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தில் (இஸ்ரோ) ஐஐடி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இணைய வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தியுத்தி உள்ளார்.

சமீபத்தில் பாம்பே ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோம்நாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் விண்வெளித் துறையின் போக்கு குறித்தும் இஸ்ரோ முன்னெடுத்து வரும் புதிய ஆராய்ச்சி திட்டங்கள் குறித்தும் பேசினார். ஐஐடி மாணவர்கள் இஸ்ரோவில் இணைய வேண்டியதன் அவசியத்தையும் அவர் முன் வைத்தார்.

“நிலவில் சந்திரயான் தரையிறங்கிய பிறகு மக்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் திட்டங்களை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது. இளைய தலைமுறையினரே புதிய ஆராய்ச்சிகளை முன்னெடுத்து செல்ல உள்ளனர்.

நம் நாட்டில் திறன்மிக்க பொறியாளர்கள் பெரும்பான்மை யாக ஐஐடி-களிலிருந்து உருவாகி வருகின்றனர். எனவே, ஐஐடி மாணவர்கள் இஸ்ரோவில் இணைந்து நாட்டுக்காக பணியாற்ற முன்வர வேண்டும்” என்றார்.இஸ்ரோவின் தேவை விஞ்ஞானிகள் மட்டும் என்பதுஇல்லை, விண்வெளியில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள், விவசாய வல்லுநர்கள், எல்லா சூழல்களுக்கும் ஏற்ற உடை டிசைனர்கள், ராக்கெட்டின் உள்ளமைப்பு வடிவமைப்பாளர்கள் என ஒரு பெரிய படையே தேவைப்படுவதால் வரும் காலத்தில் இஸ்ரோ மிகப்பெரிய

மிகப்பெரிய வேலைவாய்ப்பு பணியிட மையமாக உயர்ந்து நாட்டின் அனைத்துத் தரப்பு பொருளாதாரத்திற்கும் மேன்மை தரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *