கிருஷ்ணகிரி, ஜூன் 20–
மா விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு காணாத தி.மு.க. கண்டித்து கிருஷ்ணகிரியில் இன்று அண்ணா தி.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சைதுண்டு அணிந்து கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும், கிருஷ்ணகிரி மாவட்ட ‘மா’ விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று தி.மு.க. அரசுக்கு, மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை
மேலும் அவர்கள் தெரிவித்துள்ள மற்ற கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடகமாடப்படுகிறதே தவிர, இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ‘மா’ பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்து வைக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி அண்ணா தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே அண்ணா தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., கொள்கை பரப்புச் செயலாளர் மு. தம்பிதுரை எம்.பி. ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்கள் கே. அசோக் குமார் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் டி.எம்.தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வைத்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் மா விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சைத் துண்டு அணிந்து வந்திருந்தனர்.
போராட்டத்தில், மாம்பழத்திற்கு கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ. 13 வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்க வேண்டும். மாங்கூழ் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும் மா விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முன் வராத தமிழக அரசையும் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
![]()





