செய்திகள்

மாஸ்க், சானிடைசரில் ஊழலா?: ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை, ஆக. 14–

கொரோனா நிவாரண நிதியில், சானிடைசர், முகக்கவசம், கையுறைகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா? என்பது குறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடுகளில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து சானிடைசர், முகக்கவசம், கையுறை போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சிவஞானவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘2020ஆம் ஆண்டு ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், கொரோனா நிவாரண நிதியில் இருந்து சானிடைசர், கையுறைகள் மற்றும் முகக்கவசம் போன்றவை அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. லிட்டருக்கு ரூ.76.50-க்கு விற்கப்பட்ட சானிடைசர் ரூ.280 ரூபாய் வீதம் 5 ஆயிரம் லிட்டர் வாங்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

ரூ.130 க்கு விற்கப்பட்ட முகக்கவச பண்டல்கள் ரூ.220-க்கும், ரூ.13 க்கு விற்கப்பட்ட கையுறைகள் ரூ.180 க்கும் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்து 200 அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ரூ.25 ஆயிரத்தை டெபாசிட் செய்யும்பட்சத்தில், இந்த புகார் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரர் குறிப்பிட்டதுபோல், முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் டெபாசிட் தொகையை மனுதாரருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பாக தலைமை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *